பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த ‘பாகுபலி’ திரைப்படம், 2015ல் முதல் பாகமாகவும், 2017ல் இரண்டாம் பாகமாகவும் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் திரைக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சமீபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘பாகுபலி தி எபிக்’ என்ற பெயரில், இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து அக்டோபர் 31ஆம் தேதி திரையிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கருத்துகளை பதிவு செய்தனர். குறிப்பாக, புக் மை ஷோ தளத்தில், இந்தப் படத்தை பார்க்க ஒரே வாரத்தில் 60,000-க்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதோடு, ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, மொத்தம் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடும் எனவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவியது.ஆனால் இந்த தகவலை படக்குழு மறுத்துவிட்டது. படம் ஒரு ஐபிஎல் போட்டியின் நேரம் அளவிற்கு தான் நீளமாக இருக்கும் என்றும், விரைவில் ‘பாகுபலி தி எபிக்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.