Friday, April 12, 2024

தமிழ்ச் சினிமா வரலாறு-62 – சத்யராஜுடன் நடனம் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வாழ்க்கை’ படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா அந்தப் படத்தில் சரணமே இல்லாமல் பல்லவியை மட்டும் வைத்து ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தார்.

‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு மன்மதன் உன் வேலையைக் காட்டு’ என்று தொடங்கும் அந்தப் பாடலை  வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கத்தில் ரவீந்தரும், சில்க் ஸ்மிதாவும் ஆட படமாக்கினார் அந்தப் படத்தின் இயக்குநரான சி.வி.ராஜேந்திரன்.

அந்தப் பாடல் காட்சியை படமாக்கும்போது ஒரு ஷாட்டில் சில்க் ஸ்மிதாவை தூக்கிக் கொண்டு ஆடிய ரவீந்தர், ஆடி முடித்தவுடன் ஸ்மிதாவை மெல்ல கீழே இறக்குவதற்குப் பதிலாக அப்படியே தடாலென்று கீழே விட்டுவிட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்  ஸ்மிதா.

ரவீந்தர் வேண்டுமென்றே தன்னைக் கீழே தள்ளிவிட்டதாக  நினைத்துக் கொண்ட அவர் “இனி நான் ரவீந்தருடன் நடிக்க மாட்டேன்” என்று  எல்லோர் முன்பும் உரக்க சத்தம் போட்டுவிட்டு படப்பிடிப்பு தளத்தைவிட்டுக் கிளம்பி விட்டார்.

அந்த சம்பவம் நடந்தபோது படத்தின் தயாரிப்பாளர்களான சித்ரா ராமு, சித்ரா லட்சுமணன் ஆகிய இருவருமே ஊரில் இல்லை. மண் வாசனை’ படத்தின் 100-வது நாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோயம்பத்தூர் சென்றிருந்தனர்.

சில்க் ஸ்மிதாவின் கோபத்தால் படப்பிடிப்பு நின்று விட்டதால் உடனடியாக சென்னைக்குத் திரும்பிய சித்ரா லட்சுமணன், ஸ்மிதாவை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார்.

சில்க் ஸ்மிதாவை கதாநாயகியாக வைத்து முதல்முதலாக ஒரு படத்தை அறிவித்தவர் சித்ரா லட்சுமணன்தான் என்பதாலும் வாழ்க்கை’ படத்தின் படப்பிடிப்பில் ஸ்மிதாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியவர்  என்பதாலும் ஸ்மிதாவுக்கு அவர் மீது மிகுந்த பாசமும், அன்பும்  உண்டு. ஆகவே, அவர் சமதானப்படுத்தியதும் மீண்டும் அந்த பாடல் காட்சியில் ரவீந்தருடன் ஆட ஒப்புக் கொண்டார் ஸ்மிதா.

ஆனால் அதே நேரத்தில்  ரவீந்தருடன் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த இன்னொரு படமான  ‘வீட்டுக்கு ஒரு கண்ணகி’ படத்தில் நடிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்ட  ஸ்மிதா, அந்தப் படத்திற்காக வாங்கியிருந்த முன் பணத்தையும் திருப்பிக்  கொடுத்துவிட்டார்.

ரவீந்தருடன் மட்டுமின்றி சத்யராஜுடனும் அப்படி ஒரு மோதல் இயக்குநர் ராம.நாராயணனின் ‘சட்டத்தைத் திருத்துங்கள்’ என்ற படத்தில்  நடிக்கும்போது சில்க் ஸ்மிதாவிற்கு ஏற்பட்டது.

மோகன்  கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் துணைப் பாத்திரம் ஒன்றை ஏற்று நடித்த சத்யராஜிற்கு சில்க் ஸ்மிதாவுடன் நடனம் ஆடுகின்ற வாய்ப்பை வழங்கி இருந்தார் ராம.நாராயணன்.

அதுவரை நடனம் ஆடிப் பழக்கம் இல்லை என்பதால் சில்க் ஸ்மிதாவோடு ஆடியபோது தவறுதலாக அவரது காலை மிதித்துவிட்டார் சத்யராஜ். அடுத்த நிமிடமே “இந்த ஆளோடு இனி நான் நடனம் ஆட மாட்டேன்” என்று சொல்லிவிட்டு செட்டில் ஓரமாகப் போய் உட்கார்ந்து விட்டார் ஸ்மிதா.

” சத்யராஜ் நடனம் ஆடுவது இதுதாம்மா முதல் தடவை. அதனால்தான் தெரியாமல் உங்க காலை அவர் மிதித்து விட்டார். அவர்  பெரிய ஜமீந்தார் வீட்டுப் பிள்ளைம்மா. சினிமா ஆர்வத்தில்தான் இப்படி சின்னச் சின்ன பாத்திரங்களில் எல்லாம் நடித்துக் கொண்டு இருக்கிறார்” என்று யூனிட்டில் இருந்த எல்லோரும் மாறி மாறிச்  சொன்ன பிறகே மீண்டும் அவருடன் ஆட ஒப்புக் கொண்டார் ஸ்மிதா.

அதே சத்யராஜ் கதாநாயகனான நடித்த  ஜீவா’ படத்திலே நடித்தபோது தன்னுடைய காதல் உட்பட பல அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் அவரோடு பகிர்ந்து கொள்கின்ற அளவிற்கு அவருடன் நெருக்கமாக இருந்தார் அவர்.

ஆரம்பத்தில் தனியாகவே படப்பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த சில்க் ஸ்மிதா ஒரு கால கட்டத்தில் தாடிக்காரர் ஒருவரோடு வர ஆரம்பித்தார். படப்பிடிப்புகளுக்கு மட்டுமின்றி திரையுலகில் நடைபெற்ற விழாக்களுக்கும் ஸ்மிதாவோடு அவர் வரத் தொடங்கினார்.

அப்போதெல்லாம் “ஸ்மிதாவோடு எப்போதும் ஒன்றாக சுற்றும் அந்த தாடிக்காரர் யார்..?” என்று கிசுகிசுக்காத படப்பிடிப்புகளே இல்லை என்று சொல்லலாம்.

எல்லோரும் மனதில் வைத்துக் கொண்டு குமைந்து கொண்டிருந்த அந்த விஷயத்தை ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில் நேரடியாக சில்க் ஸ்மிதாவிடமே கேட்டார் ஸ்டண்ட் இயக்குநரான விக்ரம் தர்மா.

“அந்த ஆளு என்ன அழகா இருக்கிறார் என்று அவரை உங்கள் கூட வைத்துக் கொண்டு இருக்கீங்க..?”என்று விக்ரம் தர்மா கேட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே போன ஸ்மிதா “என் கண்ணுக்கு அவர் அழகாக இருக்கிறார் உனக்கென்ன?” என்று அவரிடம் பொரிந்து தள்ளினார்.

அந்த தாடிக்காரரின் பெயர் ராதா கிருஷ்ண மூர்த்தி. அவர் ஒரு டாக்டர்.  அன்னபூரணி அம்மாளின் துணையோடு சினிமாஉலகில் காலடி எடுத்து வைத்து ஸ்மிதா இல்லாத தமிழ் சினிமாவே இல்லை என்கின்ற அளவிற்கு ஒரு கால கட்டத்தில் உயர்ந்த ஸ்மிதாவின் வாழ்க்கையில் திடீர் என்று அடி எடுத்து வைத்தவர்தான் டாக்டர் ராதா கிருஷ்ணமூர்த்தி.

அவர்  எப்போது ஸ்மிதாவின் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தார் என்பது சினிமா உலகில் இருந்த எவருக்குமே தெரியாத ஒரு புதிர் என்றுதான் சொல்ல வேண்டும்.

“ஸ்மிதாவிற்கு நான் தூரத்து உறவு. சிறு வயதிலிருந்தே ஸ்மிதாவை நான் நன்கு அறிவேன். ஒரு கட்டத்தில் சினிமா உலகில் தனக்கு பாதுகாப்பில்லை என்று எண்ணிய ஸ்மிதா தனக்கு பாதுகாப்பாக இருக்கும்படி என்னை கேட்டுக் கொண்டாள். அவளுக்காக என்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு வந்து நான் அவளுடன் தங்கினேன்.

நாட்கள் செல்லச் செல்ல எங்களுக்கு இடையிலே இருந்த நட்பு காதலாக மாறத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு  இருவரும் சேர்ந்து போகத் தொடங்கினோம்.

அவர் நடிக்கின்ற படத்தின் படப்பிடிப்புக்ளுக்கும் நான் அடிக்கடி செல்வது வழக்கம். அதைப் பார்த்துவிட்டு  ஸ்மிதாவிற்கு தாடிக்கார காதலர் ஒருவர் இருப்பதாக பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதத் தொடங்கினார்கள். அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என்ன என்று பல முறை நான் ஸ்மிதாவை கேட்டிருக்கிறேன்.

ஆனால் ஸ்மிதாவிற்கு திருமணத்தில்  நம்பிக்கை இல்லை. தாலி கட்டிய பிறகு ஆண்கள் பெண்களை அடிமை போல நடத்துகிறார்கள். அது பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்பது அவர் எண்ணமாக இருந்தது.

ஆகவே “திருமணம் செய்தால்தான் கணவன் மனைவியா..? இல்லாவிட்டால் இல்லையா..?” என்று என்னிடம் அவள் கேட்டாள்.

அவளுக்காக  என்னுடைய மனைவி, குழந்தைகளை எல்லாம் விட்டுவிட்டு வந்த நான் அவளுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றவுடன் அவளை வற்புறுத்தவில்லை. அதன் பின்னர் தாலி கட்டாமலேயே இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்தோம்..” என்று  சில்க் ஸ்மிதாவுடன் தனக்கு இருந்த உறவு பற்றி ஒரு பத்திரிகை பேட்டியிலே குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் ராதா கிருஷ்ணமூர்த்தி.

ஸ்மிதா அவரது அந்தப் பேட்டியை மறுக்கவில்லை. ஸ்மிதா வளர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் “ஸ்மிதாவை ஆண்களுக்குப் பிடிப்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை. ஆனால் பெண்களுக்கும் அவரைப் பிடித்திருப்பதுதான் ஆச்சர்யம்.எனக்குத் தெரிந்து கவர்ச்சி நடிகைகளில், அதுவும் குறிப்பாக நடன நடிகைகளில் பெண்களைக் கவர்ந்த ஒரே நடிகை  சில்க் ஸ்மிதாதான்” என்று கமல்ஹாசன் ஒரு முறை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணிடம் கூறினார்.

அப்படி எல்லோரையும் கவர்ந்த அவரை ஏன் கதாநாயகி ஆக்கக் கூடாது என்ற எண்ணம் சித்ரா லட்சுமணனுக்கு வந்ததின் காரணமாக ஸ்மிதாவை வைத்து ராம.நாராயணன் இயக்கத்திலே நான்தாண்டி ராணி’ என்று ஒரு படத்தைத் தொடங்கினார் அவர்.

அப்போது ராம. நாராயணன் ஒரே நேரத்தில் பல படங்களை இயக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் அந்தப் படம் வளரவில்லை என்றாலும் ஸ்மிதா கதாநாயகியாக நடித்து  சூரக்கோட்டை சிங்கக் குட்டி’, ‘சில்க் சில்க் சில்க்’ உட்பட பல திரைப்படங்கள் வர அந்தப் படம்தான் காரணமாக அமைந்தது.

தான் நாயகியாக நடித்த எந்தப் படமும் வெற்றி காணவில்லை என்பதால் மனமொடிந்து போனார் சில்க் ஸ்மிதா.

“மக்கள் என்னை விரும்பாமல்  இருந்திருந்தால் என்னால் இத்தனை படங்களில் நடித்திருக்க முடியமா..? இத்தனை பேரும் புகழும் எனக்குக் கிடைத்திருக்குமா..? அப்படியிருக்கும்போது நான் கதாநாயகியாக நடித்த படங்கள் ஏன் ஓடவில்லை..? மற்ற நாயகிகளைவிட நான் எந்த விதத்தில் குறைவு..?” என்று பல கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக் கொண்டார் அவர்.

அந்த சிந்தனையின் விளைவாக கதாநாயகியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் சொந்தப் படம் தயாரித்தால்தான் அது முடியும் என்று ஒரு தவறான முடிவுக்கு வந்தார் அவர்

தமிழ்த் திரைப்பட உலக சரித்திரத்தை ஊன்றிப் பார்த்தால் பல நட்சத்திரங்கள் பொருளாதாரச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தவித்ததற்கு அவர்கள் சொந்தப் படம் தயாரித்ததே காரணமாக இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

அப்படி ஒரு சிக்கல் தனக்கும் வரப் போகிறது என்ற உணராமல் “எஸ்” என்று  அவரது பெயரில் உள்ள முதல் எழுத்தையும் “ஆர்” என்று அவரது காதலரான ராதா கிருஷ்ணமூர்த்தி பெயரில் உள்ள முதல் எழுத்தையும் வைத்து எஸ்.ஆர்.என்டர்பிரைசஸ் என்ற பெயரில் சொந்தமாக ஒரு பட நிறுவனத்தைத்  தொடங்கினார் ஸ்மிதா.

கிராஸ் பெல்ட் மணியின் இயக்கத்திலே தெலுங்கு, மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வீர விஹாரம்’ என்ற பெயரிலே தயாரிக்கப்பட்ட அந்தத் திரைப்படம் மிகப் பெரிய தோல்விப் படமாக  அமைந்தது.

கதாநாயகியாக அவர் நடித்த படங்கள் சரியாக ஓடாததால்  நடன நடிகையாக நடிக்கக்கூட அவருக்கு தொடர்ந்து  வாய்ப்புகள் வரவில்லை.

பின்னர் சில படங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்த போதிலும் மன நிம்மதி இல்லாமலேயே அவர் இருந்தார்.

கவர்ச்சி நடிகையாக இருந்த போதிலும் தமிழ்த் திரையுலகை ஒரு கால கட்டத்தில் ஆண்ட அவர்  தற்கொலையை நாடிச் சென்றதற்கு என்ன காரணம் என்பது இன்றுவரை விடை தெரியாத ஒரு கேள்வியாகவே இருக்கிறது.

(தொடரும்) 

- Advertisement -

Read more

Local News