Friday, April 12, 2024

தமிழ்ச் சினிமா வரலாறு-61 – சில்க் ஸ்மிதாவின் ஆசையை நிறைவேற்றிய பாரதிராஜா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வண்டிச் சக்கரம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து சில்க் ஸ்மிதாவிற்கு அழைப்பு வந்தது. “இந்த முறையாவது அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்” என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அவரைப் பார்க்கக் கிளம்பினார் ஸ்மிதா.

‘வண்டிச் சக்கரம்’ படத்திற்கு முன்பாகவே  பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமான “புதிய வார்ப்புகள்” படத்தில் பூக்காரி ஒருவரின் பாத்திரத்தில்  நடிப்பதற்காக பாரதிராஜாவைப்  பார்க்கச் சென்றார்  அவர். ஆனால், அந்தப் படத்தில் அவர் தேர்வாகவில்லை. பின்னர் அவர் நடிக்கவிருந்த அந்தப் பாத்திரத்தில் சதிஸ்ரீ என்னும் நடிகை நடித்தார்.

இந்த முறை சில்க் ஸ்மிதாவின் வேண்டுதல் வீணாகவில்லை. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடிக்க ஸ்மிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சினிமாவில் எந்த மாதிரியான பாத்திரத்தில் நடித்து  பெயர் வாங்க வேண்டும் என்று ஸ்மிதா ஆசைப்பட்டாரோ அப்படிப்பட்ட  ஒரு பாத்திரத்தை அந்தப் படத்தில் ஸ்மிதாவிற்கு வழங்கினார் பாரதிராஜா.

ஸ்மிதா அந்தப் படத்தில் ஏற்றிருந்த பாத்திரத்தில் அவரிடமிருந்து முழுமையான நடிப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காக பல முறை ஸ்மிதாவை அறைந்திருக்கிறார் பாரதிராஜா. ஆனால், அந்த அடிகளில் ஒரு அடிகூட ஸ்மிதாவுக்கு வலிக்கவில்லை. அதற்குக் காரணம் ‘வண்டிச் சக்கரம்’ படத்தில் கவர்ச்சிக் குளத்தில் நீந்திய அவருக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அவர் வழங்கியிருந்த குணச்சித்திர பாத்திரம்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அந்தப் படத்தைத் தெலுங்கிலே தயாரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. ‘சீதா கோக சிலகா’ என்ற பெயரில் அந்தப் படத்தைத் தெலுங்கிலே தயாரித்தவர் ‘சங்கராபரணம்’ படைத்தைத் தயாரித்த ஏடித,நாகேஸ்வரராவ் என்னும் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் தெலுங்குப் பதிப்பில் ராதா நடித்த பாத்திரத்தில் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் நாயகியாக நடித்த அருணா நடித்தார். தியாகராஜனின் பாத்திரத்தில் சரத்பாபு நடித்தார். ஆனால், தமிழில் சில்க் ஸ்மிதா ஏற்றிருந்த பாத்திரத்தில் மட்டும் தெலுங்கிலும் அவரையே நடிக்க வைத்தார் பாரதிராஜா.

“தியாகராஜனின் மனைவியாக வந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சித்து அதற்காக தியாகராஜனிடம் அடி வாங்குவதற்கு முன் அவரை ஒரு பார்வை பார்ப்பாரே அது தியாகராஜனுக்கு மட்டுமா..? அல்லது ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்திற்கும் சேர்த்தா.. என்பது அவர் மனதுக்கே வெளிச்சம். எவ்வளவு அருமையான நடிகையை இழந்துவிட்டோம்?” என்று அந்தப் படத்தில் ஸ்மிதா நடித்திருந்த நடிப்பைப் போற்றி வலைத்தளத்தில் தனது விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஒரு ரசிகர்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்  ஸ்மிதாவின் நடிப்பு சாதாரண ரசிகர்களை மட்டுமின்றி தமிழ்த் திரையுலகை பல்லாண்டு காலம் ஆண்ட திரைச் சக்ரவர்த்தி எம்.ஜி.ஆரை.யும் பாதித்திருந்தது.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தைப் பார்த்து விட்டு அந்தப் படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் தன்னுடைய மனதைப் பறி கொடுத்த முதல்வர்  எம்.ஜி.ஆர்., சமுதாயத்துக்கு தேவையான சீர்திருத்தக் கருத்தை துணிச்சலாக எடுத்துச் சொன்ன ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தையும் அந்தப் படத்தில் பங்கேற்ற கலைஞர்களையும் பாராட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழாவே நடத்தினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு திரைப்படத்திற்கு பாராட்டு விழா நடந்தது அதுதான் முதல் தடவை.

அந்த விழாவில் பேசிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். “ராதாவின் அண்ணியாக குடும்பப் பாங்கான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள ஸ்மிதா இனி கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதைக்  குறைத்துக் கொள்ள வேண்டும்..” என்று குறிப்பட்டார் என்றால் அந்த பாத்திரம் எந்த அளவு அவர் மனதைப்  பாதித்திருந்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

எம்ஜிஆருடைய விருப்பம்தான் சில்க் ஸ்மிதாவின் விருப்பமாகவும்  இருந்தது என்றாலும் சினிமா உலகம் ஸ்மிதா பாட்டீலின் மறு உருவமாக அவரைப் பார்க்க விரும்பவில்லை.சில்க் ஸ்மிதாவாகவே பார்க்க ஆசைப்பட்டது.

சில்க் ஸ்மிதாவின் மீது கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை அழுத்தமாகப் பதித்ததில் ‘மூன்றாம் பிறை’ படத்திற்குப்  பெரும் பங்கு உண்டு.

‘பொன்மேனி உருகுதே’ என்ற பாடலுக்கு அவர் ஆடியிருந்ததைப் பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப பல ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்க்க வந்தனர். இளைஞர்கள் பலரது இரவுத் தூக்கத்தை கெடுக்கத் தொடங்கினார் ஸ்மிதா.

“உடம்பு இருக்கட்டும். வெறும் கண்களாலேயே போதை ஏற்றுவதில் சிலுக்கிற்கு நிகர் சிலுக்குத்தான்..” என்று ஸ்மிதாவை ஆராதித்தது ‘குமுதம்’ பத்திரிகை.

‘மூன்றாம் பிறை’ படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்குப் போன ஸ்மிதா கமல்ஹாசனுடன் சேர்ந்து தான் ஆடியிருந்த ‘பொன்மேனி உருகுதே’  பாடலுக்குக்  கிடைத்த வரவேற்பைப் பார்த்து அதிர்ந்து போனார்.

இனி எந்தப் பாதையில் அவர் பயணிக்க வேண்டும் என்பதை ‘மூன்றாம் பிறை’ அவருக்கு எடுத்துச் சொன்னது என்றால் அவர் எடுத்த முடிவு சரியானதுதான் ஆமோதித்தது ‘சகலகலாவல்லவன்’ பட வெற்றி. 

அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘நேத்து ராத்திரி அம்மா’ பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்த விதம், அதற்கு புலியூர் சரோஜா அமைத்திருந்த நடனம்… அந்த நடனத்தின்போது ஸ்மிதா காட்டிய அங்க அசைவுகள் எல்லாமாகச் சேர்ந்து அந்தப் பாடல் காட்சி பலரது தூக்கத்தை காவு வாங்கியது.

நான்கு நாட்கள் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சியின்போது  ஸ்மிதா சரியாக நடனமாடாததால் நடன இயக்குநரான புலியூர் சரோஜா  ஸ்மிதாவைத் திட்டிய திட்டுகளுக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதனாலெல்லாம் புலியூர் சரோஜா மீது ஒரு இம்மியள விற்குக்கூட அவர் மீது ஸ்மிதா கோபம் கொள்ளவில்லை. தியேட்டரில் ரசிகர்கள் தன்னுடைய நடனத்தைப் பார்த்து கை தட்ட அந்தத்  திட்டுக்கள்தான் உரமாக அமையப் போகிறது என்பதை ஸ்மிதா மிகச் சரியாக உணர்ந்திருந்தார்.

‘சகலகலாவல்லவன்’ வெளியான முதல் நாளன்றே திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.வசூலில் புதிய சரித்திரம் படைத்த அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியில் சில்க் ஸ்மிதா பங்கேற்ற ‘நேத்து ராத்திரி அம்மா’ என்ற பாடலுக்கும் அந்தப் பாடலுக்கு ஸ்மிதா ஆடிய ஆட்டத்திற்கும் முக்கிய பங்கு இருந்தது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் பிரதேசத்தை ஆளப்போகிற அரசி  என்று ஸ்மிதாவிற்கு  கிரீடம் சூட்டி பல தயாரிப்பாளர்கள் மகிழ்ந்தனர்.

1980-களின் துவக்கத்தில் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உருவெடுத்தார் ஸ்மிதா.

1983-ல் சில்க் ஸ்மிதாவின் பெயரால் நாடெங்கும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. மதுரையில் அவர் பெயராலே மன்றத்தைத் துவங்கிய ஒரு ரசிகர் கூட்டம் சில்க் ஸ்மிதாவின்  மன்றத்துக்கென தனிக் கொடியை பற்றக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்ப் படங்களைப் போலவே தமிழ்ப் பத்திரிகைகளும் ஸ்மிதாவின் படத்தைப் போடாமல் பத்திரிகையை நடத்த முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.

“வாசகர்களுக்கு நான்கு வாரங்களில் சில்க் ஸ்மிதா தெலுங்கு கற்றுத் தரப் போவதாக” ஒரு  விளம்பரத்தை  பத்திரிகை ஒன்று வெளியிட்டது என்றால் “வெள்ளிரிக்கா பிஞ்சு ஒண்ணு” என்ற பாடலுக்கு சில்க் ஸ்மிதா ஆடிய பிறகுதான் தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படம்  வியாபாரம் ஆனது என்று இன்னொரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஒரு படப்பிடிப்பில் சிவாஜி செட்டிற்குள் வந்தபோது சில்க் ஸ்மிதா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்ததாகவும் அதைப் பற்றி அந்த செட்டில் இருந்த ஒருவர் ஸ்மிதாவிடம் கேட்டபோது “என்னுடைய கால் மேல் என்னுடைய காலைப் போட்டு உட்கார்ந்திருக்கிறேன். அதிலென்ன தவறு..?” என்று  அவர் பதில் அளித்ததாகவும்  மற்றொரு  பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

ஓவ்வொரு நாளும் உண்மைக் கலப்பே இல்லாமல் பல செய்திகள் ஸ்மிதாவைப் பற்றி வந்த வண்ணம் இருந்தபோதிலும் ஸ்மிதா அந்தச் செய்திகளால் எந்த கலக்கமும் அடையவில்லை.

“அப்படிப்பட்ட செய்திகள் உங்களைப் பாதிக்கவில்லையா..?” என்று ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டபோது ஆத்திரப்படாமல் அவருக்கு அமைதியாக பதில் சொன்னார் சில்க்.

“நான் நடிக்க வந்து இன்னும் நான்கு வருடங்கள்கூட முழுதாக முடியவில்லை. அதற்குள் தமிழில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, சோபன்பாபு, கிருஷ்ணா, மலையாளத்தில் மது என்று தென்னிந்தியாவில் உள்ள எல்லா முன்னணிக் கதாநாயகர்களின் படங்களிலும் நான் நடித்துவிட்டேன்.

நான்கு வருடங்களில் இருநூறு படங்களில் நான் நடித்து விட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாத சிலர் பரப்பி வரும் வதந்திகள்தான் அந்தச் செய்திகள். அந்தச்  செய்திகளைப் படிக்கவோ.. அல்லது அதை நினைத்து வருந்தவோ நேரமில்லாமல் இப்போது நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்று ஸ்மிதா பதில் கூறியபோது மனதளவில் அவருக்குள் ஒரு முதிர்ச்சி  வந்துவிட்டிருந்ததை அந்த  நிருபரால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால், அந்த முதிர்ச்சி எல்லாம் அடுத்த ஒரே வருடத்தில் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டதை ‘வாழ்க்கை’ படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் நிரூபித்தது.

(தொடரும்)  

- Advertisement -

Read more

Local News