Sunday, July 25, 2021
Home சினிமா வரலாறு தமிழ்ச் சினிமா வரலாறு-60 - சாவித்திரியைப் போல குணச்சித்திர நடிகையாக ஆசைப்பட்ட 'சில்க்' ஸ்மிதா

தமிழ்ச் சினிமா வரலாறு-60 – சாவித்திரியைப் போல குணச்சித்திர நடிகையாக ஆசைப்பட்ட ‘சில்க்’ ஸ்மிதா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய எல்லா மொழி ரசிகர்களையும் தனது கவர்ச்சியான நடனங்களின் மூலம் கிறங்க வைத்த சில்க் ஸ்மிதா, சாவித்திரி போல குணச்சித்திர நடிகை ஆக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தவர்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் முழுமையான ஒரு கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருந்த ‘அலைகள் ஓய்வதில்லை’அவர் நடித்த முதல் படமாக வந்திருக்குமானால் ஸ்மிதாவின் கனவு நிறைவேறி இருந்திருக்கும். ஆனால் அவரது முதல் படமாக ‘வண்டிச் சக்கரம்’ படம் வெளிவந்து அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.

‘வண்டிச் சக்கரம்’ படத்தில் போதை ஏறிய கண்களுடன் ‘வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை.. ஊத்திக்கிட்டே கேளேண்டா என்னோட பாட்டை..’ என்று ஆடிப் பாடி அவர் ரசிகர்களை அழைத்ததிற்குப் பிறகு அவரை அந்த மாதிரியான பாத்திரங்களில் தொடர்ந்து பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அது மட்டுமின்றி அவருடைய பலவீனமான பொருளாதார சூழ்நிலையும் நல்ல பாத்திரங்களுக்காகக் காத்திருக்க அவரை அனுமதிக்கவில்லை.

ஸ்மிதாவின் உணமையான பெயர் விஜயலட்சுமி. அவருக்கு ஒரு தம்பி பிறந்தவுடன் அவரது தந்தை அவர்களை விட்டுப் பிரிந்துவிட்டதால் அன்னபூரணி என்ற ஒரு பெண்மணியின் வீட்டில்தான் வளர்ந்தார் விஜயலட்சுமி. அவருக்கு சினிமா ஆசையை ஊட்டியதில் அன்னபூரணி அம்மாளுக்கு பெரும் பங்கு உண்டு. அன்னபூரணி அம்மாள் சாப்பாடு இல்லாமல்கூட இருந்து விடுவார், ஆனால் சினிமா பார்க்காமல் அவரால் இருக்கவே முடியாது. அந்த அம்மாவின் வீட்டில் வளர்ந்ததால் சினிமா ஆசை விஜயலட்சுமியையும் தொற்றிக் கொண்டது.

சினிமா மீது இருந்த நாட்டத்தால் நான்காவது வகுப்பிற்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை. சின்ன வயதில் சாவித்திரி நடித்த ‘தேவதாஸ்’ படத்தைப் பத்து முறைக்கு மேல் பார்த்த விஜயலட்சுமிக்கு சாவித்திரியை மிகவும் பிடித்துப் போனது.

அதற்குப் பிறகு சாவித்திரி நடித்த எந்தப் படம் வெளியானாலும் அன்ன பூரணி அம்மாளை அழைத்துக் கொண்டு முதல் காட்சிக்கே சென்றுவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டார் விஜயலட்சுமி. அது மட்டுமின்றி சாவித்திரியின் புகைப்படம் எந்தப் பத்திரிகையில் வந்தாலும் அதைத் தவறாமல் கத்தரித்து பத்திரப்படுத்திக் கொள்வார்.

காலம் தனது கடமையை சரியாகச் செய்ய விஜயலட்சுமி பருவமெய்தினார். கருப்பு என்றும் சொல்ல முடியாமல் சிகப்பு என்றும் சொல்ல முடியாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்த விஜயலட்சுமி பருவ வயதின் காரணமாக பார்க்க மிகவும் லட்சணமாக இருக்கவே அவரை மணமுடிக்க ஒருவர் முன் வந்தார். அவருடன் விஜயலட்சுமிக்கு திருமணம் நடந்தது.

மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு வாழ்க்கையைக் கழிக்கலாம் என்ற ஒரே நோக்கத்தில்தான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் விஜயலட்சுமி. ஆனால் அவரது புருஷன் வீட்டிலோ அவர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக வறுமை கோரத் தாண்டவமாடியது.

அதற்கும் மேலாக அவரது மாமியார் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்ற மாமியார்களைவிட மோசமாக அவரை கொடுமைப்படுத்தத் தொடங்கினார். அவருடைய கணவனோ தன்னுடைய இச்சையை தீர்த்துக் கொள்ளுகின்ற ஒரு கருவியாகவே அவரைப் பார்த்தார். இனியும் அந்த வீட்டில் வாழ முடியாது என்ற சூழ்நிலையில் புருஷன் வீட்டிலிருந்து புறப்பட்டு தனது தாயாரின் வீட்டுக்கு வந்தார் விஜயலட்சுமி.

அவரது தாயாரான நரசம்மா, விஜயலட்சுமி எடுத்த முடிவை ரசிக்கவில்லை. ஏழ்மையான அந்த சூழ்நிலையில் மீண்டும் அவரை சுமக்க அவர் தயாராக இல்லாததுதான் அதற்குக் காரணம். விஜயலட்சுமியை வளர்த்த அன்னபூரணி அம்மாள் அவரது செய்கையை எதிர்க்காதது மட்டுமின்றி ஆதரவும் தெரிவித்தார்.

சென்னையிலே அன்னபூரணி அம்மாவிற்கு சினிமாக்காரர்கள் சிலரைத் தெரியும் என்பதால் அவர்களது பரிந்துரையின் பேரில் விஜயலட்சுமியை சினிமாவில் சேர்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் சினிமா ஆசையை சுமந்து கொண்டிருந்த விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார் அன்னபூரணி அம்மாள்.

அவர்கள் இருவரும் எதிர்பார்த்தபடி அன்னபூரணி அம்மாளுக்குத் தெரிந்த எவரும் சென்னையிலே அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. பருவப் பெண்ணை வைத்துக் கொண்டு எங்கே தங்குவது என்று அன்னபூரணி அம்மாள் தடுமாறியபோது அவருக்குத் தெரிந்த ஒரு நடிகையின் மூலம் நடிகை அபர்ணாவின் தாயார் வீட்டில் அவர்கள் இருவரும் தங்க ஒரு இடம் கிடைத்தது.

அங்கே தங்கியிருந்தபடியே விஜயலட்சுமிக்கு வாய்ப்பு தேடி சென்னையில் உள்ள எல்லா ஸ்டுடியோக்களிலும் ஏறி இறங்கினார் அன்னபூரணி அம்மாள். ஆனால் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. சினிமா வாய்ப்பு அவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தபோது அபர்ணாவின் அம்மா வீட்டிலிருந்து அபர்ணாவின் வீட்டுக்கு அவர்கள் இருவரும் மாற்றப்பட்டனர்.

அங்கே போனவுடன் விஜயலட்சுமிக்கு ஒரு வேலையும் கிடைத்தது. அபர்ணா அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘டச் அப்’ பெண்ணின் வேலைதான் என்றாலும் ஸ்டுடியோவில் எல்லா நட்சத்திரங்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அந்த வேலை விஜயலட்சுமிக்கு கரும்பாய் இனித்தது.

அப்போது பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் அபர்ணா நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய எல்லோரையும் பக்கத்தில் இருந்து விஜயலட்சுமியால் பார்க்க முடிந்தது.

தன்னை மறந்து அவர்களை விஜயலட்சுமி பார்த்துக் கொண்டிருந்தபோது பல இயக்குனர்கள் பார்வை விஜயலட்சுமியின் மீது படர்வதைப் பார்த்தார் அபர்ணா. என்றாவது ஒரு நாள் தனது கிரீடத்தை விஜயலட்சுமி பறிக்கக் கூடும் என்று அவரது உள் மனது சொன்னதாலோ என்னவோ விஜயலட்சுமி சின்னச் சின்ன தவறுகள் செய்தபோதுகூட அவர் மீது எரிந்து விழத் தொடங்கினார் அவர்.

அது தவிர, சின்னச் சின்ன அடி உதைகளும் அபர்ணாவிடமிருந்து விஜயலட்சுமிக்கு போனசாக கிடைத்தன. எப்போது இந்தச் சித்திரவதையிலிருந்து மீளுகின்ற நேரம் வரும் என்று விஜயலட்சுமி சிந்தித்துக் கொண்டிருந்தபோது எப்படி இந்தப் பெண்ணை வெளியே அனுப்புவது என்று அபர்ணா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நல்ல நாளில் அபர்ணா தனது வீட்டை விட்டு விஜயலட்சுமியை வெளியேற்ற சாலிகிராமத்தில் ஒரு தனி அறை எடுத்து விஜயலட்சுமியுடன் தங்கினார்அன்னபூரணி அம்மாள். இதற்கிடையிலே சினிமாவிலே ஆங்காங்கே தலை காட்டக்கூடிய சில வாய்ப்புகள் விஜயலட்சுமிக்குக் கிடைத்தன.

மூன்று வேளை இல்லாவிட்டாலும் ஓரு வேளையாவது சாப்பிட்டு வாழ்க்கையைக் கழிக்க வேண்டுமே என்பதற்காக எந்தச் சலனமும் இல்லாமல் வந்த வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார் அவர்.

இதற்கிடையில் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பும் அவருக்கு வந்தது. ‘இணைய தேடி’ என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் விஜயலட்சுமி நடித்த முதல் திரைப்படம்.

ஏறக்குறைய அந்தத் தருணத்தில்தான் அப்போது நடிகர் சிவகுமாரின் மேனேஜராக இருந்த திருப்பூர் மணி, நடிகர் வினு சக்ரவர்த்தியின் கதை வசனத்தில் ‘வண்டிச் சக்கரம்’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

சிவகுமாரும், சரிதாவும் ஜோடியாக நடிக்கவிருந்த அந்தப் படத்திலே சாராயம் விற்கும் ஒரு பருவப் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்க வாளிப்பான உடல் கட்டையும், வசீகரமான கண்களையும் கொண்ட ஒரு பெண்ணை அவர்கள் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ‘வண்டிச் சக்கரம்’ படத்தின் கதாசிரியரான வினு சக்ரவர்த்தியின் வீட்டுக்கு எதிரே இருந்த ஒரு மாவு மிஷினில் மிளகாய் அரைப்பதற்காக வந்தார் விஜயலட்சுமி.

தனது பத்தொன்பதாவது வயதில் பருவத்தின் தலை வாயிலில் இருந்த அவரைப் பார்த்தவுடன் ‘வண்டிச் சக்கரம்’ படத்திற்காக நாம் தேடிக் கொண்டிருக்கும் பெண் இவர்தான் என்று வினு சக்ரவர்த்தியின் உள் மனது சொல்லவே விஜயலட்சுமியை சந்தித்துப் பேசுவதற்காக அவசரம், அவசரமாக கீழே இறங்கி வந்தார் அவர்.

சிவகுமாரும், சரிதாவும் ஜோடியாக நடிக்க ‘வண்டிச் சக்கரம்’ என்ற பெயரில் உருவாகும் படத்துக்கு தான்தான் கதை, வசனகர்த்தா என்று விஜயலட்சுமியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் “அந்தப் படத்தில் சாராயம் விற்கின்ற ஒரு பெண்ணின் பாத்திரத்தில் நடிக்க ஒரு நடிகையைத் தேடிக் கொண்டு இருக்கிறோம்” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே “நான் நடிக்கிறேனே” என்றார் விஜயலட்சுமி.

அடுத்து “அந்த பாத்திரத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும்” என்று வினு சக்ரவர்த்தி சொன்னபோது “சரி” என்பதற்கு அடையாளமாக வேகமாகத் தலையாட்டினார் விஜயலட்சுமி.

வினு சக்ரவர்த்தியை மிகவும் கவர்ந்தவர் இந்தி நடிகையான ஸ்மிதா பாட்டீல் என்பதால் அவருடைய பெயரையே விஜயலட்சுமிக்கு சூட்ட ஆசைப்பட்ட அவர் “உன் பெயரை ஸ்மிதா என்று மாற்றலாமா..?” என்று அவரிடம் கேட்டார். சினிமாவில் நடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்ததால் பெயர் மாற்றத்துக்கு விஜயலட்சுமி எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

சிவகுமார், தயாரிப்பாளர் திருப்பூர் மணி, இயக்குநர் கே,விஜயன் ஆகிய எல்லோரிடமும் ‘ஸ்மிதா’ என்று தான் பெயர் சூட்டியிருந்த விஜயலட்சுமியை, வினு சக்ரவர்த்தி அறிமுகப்படுத்தியபோது ஒருவர்கூட அவருக்கு எதிராக எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

முதல் நாள் படப்பிடிப்பில் “ஸ்பெஷல் சரக்கு… சாப்பிடு ராஜு” என்று கொஞ்சல் மொழியில் சிவகுமாரிடம் பேசி, அவரை ஸ்மிதா உபசரிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோதே இந்த சினிமா உலகத்தை ஒரு கை பார்க்காமல் இவர் போக மாட்டார் என்று அந்த படப்பிடிப்பில் இருந்த பலருக்குப் புரிந்துவிட்டது.

1980-ம் ஆண்டு வெளியான ‘வண்டிச் சக்கரம்’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததைத் தொடர்ந்து அந்தப் படத்தில் ஸ்மிதா ஏற்றிருந்த ‘சில்க்’ என்னும் பெயர் ‘ஸ்மிதா’வின் பெயரோடு இணைந்து கொள்ள விஜயலட்சுமி ‘சில்க் ஸ்மிதா’வானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விஷால்-ஆர்யா நடிக்கும் ‘எனிமி’ படத்தின் டீஸர்

Are you ready to check out the multi-starcast action-thriller movie #Enemy? Starring – #Vishal , #Arya , Prakash Raj ,Thambi Ramaiah , Karunakaran ,...

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம்

Thee Commity Picture நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் C.ஆனந்த் ஜோசப்ராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘யாவரும் வல்லவரே.’ பல்வேறு களங்களில், தரமான படைப்பாக, ரசிகர்களிடம் ஏகோபித்த...

இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை இருட்டடிப்பு செய்திருப்பதாக அதிமுக கட்சியின் வட சென்னையின் தெற்கு, கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான...

ரம்யா கிருஷ்ணனை மறைமுகமாகக் கண்டித்த வனிதா விஜயகுமார்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நடிகை வனிதா விஜயகுமார். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தியதாகவும் பெயர்...