Friday, April 12, 2024

சினிமா வரலாறு-79-புகழ் பெற்ற பல பாடல்கள் பிறந்த கதை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பாவ மன்னிப்பு’ படத்துக்கு பாடலெழுத இயக்குநர் பீம்சிங், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் கூடியிருந்தனர்.

வழக்கம்போல எல்லோரும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனுக்கு ஒரு டெலிபோன் வந்தது. அந்த போனைப்  பேசிவிட்டு வந்தமர்ந்த கண்ணதாசனின் முகத்தில்  ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்  படர்ந்திருப்பதைப்  பார்த்த எம்.எஸ்.வி. அதைப்  பற்றி  கேட்டபோது எதுவும் சொல்லாமல்  பாட்டை  எழுதிக் கொடுத்து விட்டு அவர்  கிளம்பிவிட்டார்.

 கண்ணதாசன் சொல்லாவிட்டாலும் ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்து கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் ஒத்திகை முடிந்ததும் கண்ணதாசனின் வீட்டுக்குப்  போனார்.

அவரை சந்தித்து என்ன பிரச்னை  என்று கேட்ட போது, படத் தயாரிப்புக்காக வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்ததாகவும், கடனை செலுத்த முடியாததால் வீட்டை ஜப்தி செய்ய மதியம் ஆட்கள் வந்துவிட்ட தகவலைத்தான் வீட்டில் இருந்தவர்கள் தன்னிடம் போனில்  தெரிவித்ததாகவும்  அவரிடம் கூறினார்  கண்ணதாசன்.

“அதை ஏன் அப்போதே சொல்லவில்லை. நாங்க எல்லாம் எதுக்காக இருக்கிறோம்? உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நாங்க சும்மா பார்த்துக் கொண்டிருப்போமா?”  என்று விஸ்வநாதன் உரிமையோடு கேட்டபோது “டேய்.. அழும்போது தனிமையில் அழணும்… சிரிக்கும்போது நண்பர்களோடு சிரிக்கணும். கூட்டத்தில அழுதா நடிப்புன்னு சொல்லுவாங்க. தனிமையில சிரிச்சா பைத்தியம்னு சொல்லுவாங்க” என்றார் கவிஞர்.

அந்தச் சம்பவம் நடந்த  அன்று மதியம் அவர் எழுதிய பாடலின் பல்லவியாக  “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்; நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்” என்ற வரிகள்  அமைந்தன.

ஒரு நாள் காலையில் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் ஆர்.ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் ‘பெரிய இடத்துப் பெண்’ படத்திற்கான பாடல் கம்போசிங். சரியாக  ஒன்பது மணிக்கெல்லாம்  கண்ணதாசன் வந்து விட்டார் . ராமண்ணாவும் அவரும் உட்கார்ந்து பாடல் அமைய வேண்டிய காட்சி பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.  எப்போதும் குறித்த நேரத்திற்கு கம்போசிங்கிற்கு வந்துவிடும் விஸ்வநாதன் மணி பத்தாகியும் அன்று வரவில்லை.

அந்த பாடல் கம்போசிங்கிற்கு முதல் நாள் மூன்று ஷிப்டுகள் வேலை பார்த்துவிட்டு இரவு மூன்று  மணிக்குத்தான் விஸ்வநாதன் தூங்கச் சென்றிருந்தார். ஆகவே மறுநாள் காலையில் அவரை யாரும் எழுப்பவில்லை.

விஸ்வநாதன் வராததைக் கண்ட கண்ணதாசன் “போன் போட்டு அவன் கிளம்பிட்டானா  என்று கேளுங்கள்” என்றார். விஸ்வநாதன்  தூங்கிக் கொண்டிருப்பதாக விஸ்வனாதனின் உதவியாளர் போனில் பதில் சொன்னார். பதினோரு மணி ஆகியும் விஸ்வநாதன் வராததால் கண்ணதாசனே போன் செய்தார். அவருக்கும் அதே பதிலே  கிடைத்தது.

பகல் பன்னிரண்டு மணிக்கு விஸ்வநாதன் எழுந்தபோது  கண்ணதாசன் இரண்டு மூன்று முறை அவருக்கு போன் செய்ததாக உதவியாளர் அவரிடம் சொல்ல அப்போதுதான் மின்னல் வெட்டியது போல ‘பெரிய இடத்து பெண்’ படத்தின்  கம்போசிங்கிற்கு காலியில் வருவதாக தான் ஒப்புக்கொண்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. “போன் வந்தால் என்னை  எழுப்ப வேண்டியதுதானே” என்று தன்  உதவியாளரிடம் சத்தம் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பி ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு வந்தார் விஸ்வநாதன்.

அவர் அங்கே வந்து சேர்ந்த போது “விஸ்வநாதன் வந்தால் இந்தப் பல்லவிக்கு டியூன் போடச் சொல்லுங்கள்” என்று சொல்லி கண்ணதாசன் ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டதாகக்  கூறிய ராமண்ணா அந்த பல்லவி எழுதப்பட்டிருந்த காகிதத்தை விஸ்வநாதனிடம் நீட்டினார். பல்லவியைப் படித்துப் பார்த்த விஸ்வனாதனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அவனுக்கென்ன தூங்கிவிட்டான்; அகப்பட்டவன் நானல்லவோ” என்று விஸ்வநாதன் கம்போசிங்கிற்கு வராமல் தூங்கிக் கொண்டிருந்ததையே பல்லவியாக  எழுதியிருந்தார் கண்ணதாசன்.

கவிஞர் தன்னைக்  கேலி செய்துதான் அந்தப் பல்லவியை எழுதியிருக்கிறார்  என்பது விஸ்வநாதனுக்கு புரிந்த போதிலும் அந்த பாடல் காட்சிக்கு  அந்த வார்த்தைகள் மிகச்  சரியாக பொருந்தி இருந்ததால் அந்தப் பல்லவியை அப்படியே பயன்படுத்திக் கொண்டார் அவர்.

சிவாஜி கணேசன் நடிக்க பீம்சிங் இயக்கத்தில் உருவான எல்லா ‘பா’ வரிசைப்  படங்களிலும் சிவாஜி பாடுகின்ற தத்துவப் பாடல் ஒன்று தவறாமல் இடம் பெறும். ‘பழனி’ படத்தின் பாடல் கம்போசிங்கின்போது அந்தப் படத்தில் இடம் பெற வேண்டிய தத்துவப் பாடலுக்கான சூழ்நிலையை இயக்குனர்  பீம்சிங் விளக்க அதற்கான டியூனை எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டினார்.

எப்போதும் டியூனை வாசித்து முடித்தவுடன் கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள் அருவிபோல கொட்டத் தொடங்கிவிடும். ஆனால் அன்று என்ன காரணத்தாலோ  விஸ்வநாதன் டியூனை வாசித்தபடி இருந்தாரே தவிர கண்ணதாசனிடமிருந்து பாடலுக்கான பல்லவி பிறக்கவில்லை.

ஏதோ பண முடையில் இருந்த கவிஞர் விஸ்வநாதனைப் பார்த்து “எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?” என்று கேட்க “நான் எப்போ கவிஞரே கையில் பணம் வைச்சிருந்தேன்? சம்பாதிக்கிற பணத்தை அப்படியே அம்மாகிட்ட கொடுத்திட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன் என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?” என்றார் விஸ்வநாதன்.

அதற்குப் பிறகு பல இடங்களுக்கு பணம் கேட்டு அவர் போன் போட்டார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உட்பட எவரும் அன்று அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. போனில் எல்லோரிடமும் பேசி முடித்த பின்னர் விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்த கவிஞர் “இன்னொரு முறை அந்த டியூனை வாசி” என்று எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்து சொன்னார். அவர் வாசித்த அடுத்த நிமிடமே  கவிஞரிடமிருந்து “அண்ணன் என்னடா.. தம்பி என்னடா… அவசரமான உலகத்திலே” என்ற பாடல் பிறந்தது.

சிவாஜி கதாநாயகனாக நடிக்க, பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கே.என்.சுப்பு தயாரித்த ‘அவன்தான் மனிதன்’  படத்தின்  ஒரு பாடல் காட்சியை  சிங்கப்பூர்  மலர் கண்காட்சியில் படமாக்க அந்த படத்தின் இயக்குநரான  ஏ.சி.திருலோக்சந்தர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அந்த குறிப்பிட்ட பாடலை எழுதித்  தராமல் கண்ணதாசன் இழுத்துக் கொண்டே இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் கவிஞரை சந்திக்கும் போதெல்லாம் “மே  மாதம் சூட்டிங் தலைவரே” என்று அவருக்கு நினைவூட்டியபடியே  இருந்தார்.

ஒரு நாள் தடாலென்று அந்தப்  படத்தின் கம்போசிங்கிற்கு தேதி கொடுத்த கண்ணதாசன் “என்னடா எப்போ பார்த்தாலும் ‘மே…மே’ ன்னு கத்திக்கிட்டேயிருக்கே. இந்தா பல்லவி” என்று அந்தப் பாட்டிற்கான பல்லவியை விஸ்வநாதனிடம் நீட்டினார்.

“அன்பு நடமாடும் கலைக் கூட மே; ஆசை மழை மேக மே” என்று தொடங்கிய அந்தப் பாடலின் எல்லா வரிகளும் “மே”  என்றே முடிகின்ற மாதிரி அந்தப் பாடலை எழுதியிருந்தார் கவிஞர்.

“மே” என்று முடிகின்ற மாதிரி பாடலின் எல்லா வரிகளையும் எழுதிய கவிஞர் “லா”  என்று எல்லா  வரிகளும் முடிகின்ற மாதிரி ஒரு பாடலை பாலச்சந்தரின் ‘பட்டினப் பிரவேசம்’ படத்திற்காக எழுதினார்.

அந்தப் பாடல் பிறந்ததும் ஒரு சுவையான சம்பவம். ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக  கே.பாலச்சந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய எல்லோரும் அன்று கூடியிருந்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்து “டியூனை வாசிடா” என்று கண்ணதாசன் சொன்னவுடன், “நா நனா நனா நனா நனா நான் ந நானான நா…”என்று எம்.எஸ்.விஸ்வநாதன் வாசிக்கத் தொடங்க “நிறுத்துடா மடையா” என்ற கவிஞர் “என்னடா டியூன் இது? நீ பாட்டுக்கு உன் வாயிலே வந்ததையெல்லாம் ‘நா நனா நனா நனா’னு பாடிக்கிட்டே போனா எனக்கு வார்த்தைகள் வர  வேணாமா? வேற மெட்டு போடு” என்றார்.

அந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கே.பாலச்சந்தருக்கு இந்த மனுஷன் அழகான டியூனை காலி பண்ணி விடுவார் போலிருக்கிறதே என்று பயம் வந்து விட்டது.

உடனே விஸ்வநாதனை தனியாக அழைத்த பாலச்சந்தர் “இந்த டியூன் அற்புதமான டியூன். எனக்கு ரொம்ப பிடிச்ச டியூன். அதனாலே நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. இதுக்கு கவிஞர்கிட்ட பாட்டு எழுதி வாங்கறது உங்க பொறுப்பு. நான் இங்கே  இருந்தா வேலை நடக்காது. அதனாலே  நான் கிளம்புகிறேன்” என்று சொல்லிவிட்டுக்  கிளம்பிவிட்டார்.

பாலச்சந்தர் போனவுடன் கவிஞரிடம் எப்படி அந்த மெட்டுக்கு பாட்டெழுதி வாங்குவது என்பதற்கு ஒரு உத்தியைத்   தயார் செய்து கொண்டு வந்த விஸ்வநாதன் “இந்த சந்தத்துக்கு உம்மால பாட்டு எழுத முடியாதுன்னா  நீயெல்லாம் என்னய்யா பெரிய கவிஞர்..?” என்று கண்ணதாசனைப் பார்த்து கேட்டு முதலில் அவர் ஈகோவைத் தூண்டிவிட்டார்.

பின்னர்   அடுத்த நிமிடமே “நீர் நினைச்சா உம்மால முடியாததுகூட உண்டா?”என்று அவரைத் தூக்கி வைத்துப்  பேசினார். அவரது தந்திரம் நல்ல பலனை அளித்தது.

“டியூனை திரும்ப ஒரு தரம் வாசி” என்றார் கவிஞர். இந்த முறை “நா”வுக்கு பதில் “லாலாலா லாலா லாலா லாலா லாலா” விஸ்வநாதன் மெட்டிசைக்க “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” என்ற பாடல் பிறந்தது. பாடலின் எல்லா அடிகளும் “லா” என்றே முடியும்படி அந்தப் பாடலை  பாடலை எழுதினர் கவிஞர்.

ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திலே ‘சொன்னது நீதானா’ என்று ஒரு அற்புதமான பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலுக்குப் பின்னேயும்  இப்படி  ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது.

அந்தப் படத்தின் பாடல்களுக்கு  இசையமைப்பதற்காக இயக்குநர் ஸ்ரீதர், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் ஆகிய மூவரும் அந்த ஹோட்டலில்  அறை எடுத்துத் தங்கியிருந்தனர். 

“நாளைக்கு நாம் கம்போஸ் பண்ண வேண்டியது  ஒரு முக்கியமான  பாடல் காட்சி. படத்தின் உயிர் நாடியான கட்டத்தில் அந்தப் பாடல் இடம் பெறுகிறது. ஆகவே  தயவு செய்து நீங்கள் இருவரும் இன்று இரவு சீக்கிரமே படுக்கைக்கு போய் நல்ல ஓய்வு எடுத்து விட்டு காலை 7 மணிக்கு வந்து விடுங்கள்.  நாம் காலையில் கம்போசிங்கை ஆரம்பித்து முடித்துவிடலாம்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீதர் கிளம்பினார் .அவர் அப்படிச்  சொல்லிவிட்டு சென்றவுடன்  விஸ்வநாதன்  இரவ உணவை  முடித்து விட்டு படுக்கச்  சென்றார். 

இரவு பத்து மணியளவில்  பக்கத்து  அறையில் இருந்து பாட்டும், சிரிப்பு சத்தமும் கேட்கவே,  அங்கே என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்காக  அந்த அறைக்குச் சென்றார்  விஸ்வநாதன்.  அங்கே கண்ணதாசன்  தனது  தோழர்கள், தோழிகள் சகிதமாக உற்சாகமாக  அரட்டை அடித்துக்  கொண்டு இருந்தார்.  மதுக் கோப்பைகள் நிரம்பி வழிந்தபடி இருந்தன  

“என்ன கவிஞரே? ஸ்ரீதர்  காலையில் சீக்கிரமாக  கம்போசிங் வச்சிக்கலாம்னு இல்லே சொல்லி இருக்காரு. அப்படியிருக்கும்போது  இன்னிக்கு இதெல்லாம் அவசியமா? இது எல்லாத்தையும் பாட்டை  எல்லாம் எழுதி முடிச்சதுக்கு அப்புறம்  வைச்சிக்கக் கூடாதா?” என்று  கண்ணதாசனைப் பார்த்து விஸ்வநாதன் கேட்க   “நீ போய் நிம்மதியா தூங்கு.  காலையிலே உனக்கு முன்னாலே நான் வரலேன்னா கேளு” என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு தன்னுடைய கொண்டாட்டத்தைத் தொடர்ந்தார்  கவிஞர்.

இரவு   ரெண்டு  மணிக்கு   விருந்தினர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு  வந்த கண்ணதாசன்  அதற்குப் பிறகும்  படுக்கவில்லை. கையில் ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார்.

கண்ணைத் திறந்து அதைப் பார்த்த விஸ்வநாதனுக்கு உச்ச கோபம் வந்தது.  “இப்பவாவது போய் கொஞ்சம் தூங்குங்க கவிஞரே. அவ்வளவு சொல்லியும் இரண்டு மணி வரை எல்லோரும் தூங்கவில்லை என்று ஸ்ரீதருக்குத் தெரிந்தால் நாளைக்கு எல்லாருக்கும் பிரச்சனையாகிவிடும்” என்று அவர் சொல்ல “ஸ்ரீக்கு  இங்கே  நடக்கிறது எதுவும் தெரிய வாய்ப்பே இல்லை. நீ சொன்னால்தான் தெரிய வரும். இங்கே நடந்தது எதையும்  நீ சொல்லி விடாதே..” என்று சொல்லி விட்டு கோப்பையில் மதுவை ஊற்றத் தொடங்கினார் கண்ணதாசன்.

மறுநாள் காலை 7 மணிக்கு  ஸ்ரீதர், விஸ்வநாதன் உட்பட எல்லோரும் பாடல் கம்போசிங்கிற்காக  தயாராக இருந்தனர். ஆனால் கண்ணதாசன் வரவில்லை. ஒன்பது மணி ஆன பின்னரும் கவிஞர் வராததால் பொறுமையை இழந்த ஸ்ரீதர் சிறிது கோபமாக பேச  முதல் நாள் இரவு நடந்த கூத்துக்கள்  அத்தனையையும் அப்படியே அவரிடம் கொட்டத் தொடங்கினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவர் சொல்லி முடிக்க சிரித்துக்  கொண்டே அந்த அறைக்கு உள்ளே வந்த கண்ணதாசன் “கம்போசிங்கிற்கு நான் தயார். நீங்கள் இருவரும் தயாரா?” என்றார்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News