Friday, April 12, 2024

சினிமா வரலாறு-53 – இருபது வயதில் அறுபது வயது கிழவனாக நடித்த வி.கே.ராமசாமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் உள்ளங்களைக்  கொள்ளை கொண்ட  நடிகரான வி.கே.ராமசாமி வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர். வசனங்களைப்  பேசுவதில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டவர்.

ராமசாமியின்  தந்தையான கந்தன் செட்டியார்  ஒரு எண்ணெய் வியாபாரி. வியாபாரத்தில் அவருக்கு   நல்ல வருமானம் வந்ததால் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து பெரிய அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர்.

அப்போது வி.கே.ராமசாமியின் ஒன்றுவிட்ட அண்ணனான மாரியப்பன் என்பவர் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் நடிகராகவும், பாடகராகவும் இருந்தார்.

அந்த நாடகக் குழு நாடகம் நடத்த விருதுநகருக்கு வந்தபோது தன்னுடைய அண்ணன் மகன் நடிக்கின்ற நாடகத்தைப் பார்க்க தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் கந்தன் செட்டியார். தனது மகனைப் பெரிய அதிகாரியாக்க வேண்டும் என்ற அவரது கனவை தகர்க்கப் போகிற கோடாலியாக அந்த நாடகம் அமையப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

நாடகத்தில் மாரியப்பனின் அபாரமான நடிப்பையும், அந்த நடிப்பிற்குக் கிடைத்த கை தட்டல்களையும் பார்த்து வி.கே.ராமசாமி அசந்து போனார். நாமும்  நடிகனாகி மாரியப்பனைப்போல  கை தட்டல்களையும், பாராட்டையும்   பெற வேண்டும் என்ற ஆசை விதையை வி.கே.ராமசாமி மனதில் விதைத்தது அந்த நாடகம்தான்.

தன்னுடைய ஆசையை தனது அண்ணனான மாரியப்பனிடம் தெரிவித்தார் வி.கே.ராமசாமி. தம்பியை நாடகக் குழுவில் சேர்ப்பதிலே அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றாலும்  ராமசாமியை நாடகக் குழுவில் சேர்த்துவிட்டுவிட்டு கந்தன் செட்டியாரிடம் யார் திட்டு வாங்குவது என்று பயந்த மாரியப்பன் வி.கே.ராமசாமிக்குத்  தெரியாமல் அந்த ஊரைவிட்டுக் கிளம்பி விட்டார்.

மாரியப்பன் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாலும் அதற்காக ராமசாமி சோர்ந்து போய்விடவில்லை. நாடகக் குழுவில் சேர்வதற்கு நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு புதுக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பொன்னமராவதிக்கு பஸ் ஏறினார். அப்போது யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அங்கேதான் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று தம்பியைப் பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தாலும் அந்த நாடகக் குழுவிலே ராமசாமி சேர்வதற்கு தன்னாலான உதவிகளை செய்தார் மாரியப்பன். இனி நடிப்புதான் நமது வாழ்க்கை என்று வி.கே.ராமசாமி முடிவெடுத்தபோது பல ஊர்களில் மகனைத் தேடி அலைந்துவிட்டு பொன்னமராவதிக்கு வந்து சேர்ந்தார் விகே.ராமசாமியின் தந்தையான கந்தன் செட்டியார்.

நாடகக் குழுவை விட்டு வர மாட்டேன் என்று வி.கே.ராமசாமி அழுது புரண்ட போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் அவரை விருதுநகருக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டார் அவர்.

நாடகக் குழுவை விட்டுப் பிரிந்து வந்த வி.கே.ராமசாமியை அந்த நாடகக் குழுவின் நினைவுகள் இரவும் பகலும் வாட்டவே, மீண்டும் வீட்டிலிருந்த யாருக்கும் தெரியாமல் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவை நோக்கி ஓடினார் வி.கே.ஆர்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடக முதலாளிகளில் மிகவும் வித்தியாசமான ஒரு மனிதர். எல்லோரையும் சமமாகவும் அன்பாகவும் நடத்துவதில் அவருக்கு இணையாக இன்னொருவரை சொல்ல  முடியாது.  

அந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், சாரங்கபாணி, எஸ்.ஏ. நடராஜன், ஈ.ஆர்.சகாதேவன், ஏ.பி.நாகராஜன், இசை மேதை எஸ்.வி.வெங்கட்ராமன் போன்ற பல கலைச் சிற்பிகளை உருவாக்கிய கலைக்கூடமாக  யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் குழு திகழ்ந்தது.

அந்த நாடகக் குழவிலே இருந்தபோது அங்கே நடிகராக இருந்த ஏபி.நாகராஜனுக்கும், ராமசாமிக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியது.

சின்னச் சின்ன வேடங்களை ஏற்று நடித்த ராமசாமி, அந்த நாடகக் குழுவில் அடுத்தக் கட்டத்துக்கு வந்தபோது மகனின் பிரிவால் மிகவும் பாதிக்கப்பட்ட ராமசாமியின் தந்தை  அவரைப் பார்க்க வந்தார்.

தனது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி ராமசாமியை விருது நகருக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த முறை மொத்த குடும்பமும் ராமசாமிக்கு அறிவுரை கூறியது. அவருக்குத் தனியாக ஒரு கடையை அமைத்துக் கொடுத்து அதன் வியாபாரத்தை பார்த்துக் கொள்ளும்படி சொன்னார் கந்தன் செட்டியார்.

“நாடகம் தவிர வேறெதிலும் எனக்கு நாட்டம் இல்லை. வியாபாரத்தைப் பற்றி ஒரு அணா பைசாகூட எனக்குத் தெரியாது” என்று கதறினார் ராமசாமி.

“கூத்தாடுற தொழில் ஒரு தொழிலா..? நம் குடும்பத்துக்கு என்று ஒரு பெருமை இருக்கிறது. அதைக் குலைத்துவிடாதே” என்று கண்டிப்போடு கூறிய கந்தன் செட்டியார் இந்த முறை பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததால்  மீண்டும் வீட்டை விட்டு ஓடிப் போவது ராமசாமிக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

அந்த அற்புதக் கலைஞனை அந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டு வர காலம் ஒரு நாடகத்தை நிகழ்த்திக் காட்டியது.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியாக வந்த வி.கே.ராமசாமியின் அண்ணன் மாரியப்பன், டி..கே.ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ண பாகவதர் ஆகியோர் இணைந்து ‘ஸ்ரீலஷ்மி பால கான  சபா’ என்ற பெயரிலே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் வி.கே.ராமசாமியை இணைத்துக் கொண்டார் மாரியப்பன்.

நாடகக் குழுவை நிர்வகிப்பது என்பது யானையைக் கட்டி தீனி போடுவதற்கு சமமான ஒரு வேலை என்பதால் மாரியப்பனாலும் அவர்களது நண்பர்களாலும் நீண்ட நாள் நாடகக் குழுவை நடத்த முடியவில்லை.

அதனால்  நாடகக் குழுவைக் கலைத்துவிட்டு அதில் நடித்துக் கொண்டிருந்த கலைஞர்கள் அனைவரும் நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் நிர்வாகத்தில்  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம் நடத்திக் கொண்டிருந்த நாடகக் குழுவில் இணைந்தனர். அப்போது லஷ்மி காந்தன் கொலை வழக்கிலே கைதாகி என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்ற இயக்குநரான ப.நீலகண்டன் எழுதிய ‘தியாக உள்ளம்’ என்ற நாடகத்தை கலைவாணரின் நாடகக் குழுவினர்  நடத்தியபோது அந்த நாடகத்தில் ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் பிள்ளை என்கிற அறுபது வயது கிழவனின் வேடத்தில் நடித்தார் விகே.ராமசாமி. அந்த நாடகத்தைப் பார்க்கும் எவரும் ராமசாமியின் நடிப்பை பாராட்டாமல் இருந்ததே இல்லை.

‘தியாக உள்ளம்’ நாடகம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவே அதைப் படமாக்கும் உரிமையை வாங்குவதற்காக ஏவி.எம். ஸ்டுடியோ அதிபரான ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒரு நாள் அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார்.

அப்போது நாடகத்தை சினிமாவை எடுப்பவர்கள் பெரும்பாலும் அந்த நாடகத்தில் நடித்தவர்களையே சினிமாவிலும் பயன்படுத்துவது வழக்கம் என்பதால் மொத்த நாடகக் குழுவையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தங்களது திறமை முழுவதையும் அன்று மேடையிலே காட்டிவிடுவது என்று அந்த நாடகத்தில் நடித்த எல்லா நடிகர்களும் முடிவு செய்து கொண்டனர்.

நாடகத்தில் நடிப்பது, அதற்குப் பிறகு சாப்பாடு தயாராகும் இடத்துக்கு போய் சாப்பிடுவது ஆகிய இரண்டு வேலைகளைத் தவிர வேறு எதுவும் அப்போது வி.கே.ராமசாமிக்குத் தெரியாது என்பதால் எப்போதும் நடிப்பதுபோல அன்றைய நாடகத்திலும்  நடித்தார் அவர்.

நாடகத்தைப் பார்த்துவிட்டு எல்லோரையும்  பாராட்டிய மெய்யப்ப செட்டியார் “அந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் வேடம் போட்ட பெரியவர் ரொம்பவும் சிறப்பாக நடித்தார். அவரைக்   கூ ப்பிடுங்கள். நான் அவரைப் பார்க்க வேண்டும்” என்றார்.

அவர் அப்படி சொன்னவுடன் செட்டியாருக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்த  வி.கே.ராமசாமியை அழைத்த எஸ்.வி.சஹஸ்ரநாமம் “இவர்தான் அந்த வேடம் ஏற்ற நடிகர்” என்று மெய்யப்ப செட்டியாருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது வி.கே.ராமசாமிக்கு இருபது வயதுதான் என்பதால் எஸ்.வி. சஹஸ்ரநாமம் சொன்னதை செட்டியார் நம்பவில்லை. “பிளாக் மார்க்கெட்’ சண்முகம் வேடத்திலே நடித்த பெரியவரைக் கூப்பிடுங்கள் என்று சொன்னால் இந்தப் பையனை எதற்கு கூப்பிட்டீர்கள்?” என்று செட்டியார் கேட்டபோது அங்கேயிருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஏனென்றால் அவர்களுக்கு அது புது அனுபவம் இல்லை. ராமசாமிதான் அந்த பிளாக் மார்க்கெட் சண்முகம் என்பதை   முதல்முறையாக அந்த நாடகத்தைப் பார்த்த எவருமே அதுவரை நம்பியதில்லை.

“இந்தப் பையன்தான் அந்த வேடம் போட்ட நடிகர்” என்று திரும்ப மெய்யப்ப செட்டியாரிடம் சொன்ன எஸ்.வி.சஹஸ்ரநாமம் “நீங்கள் அதை நம்பாததில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் வேறு ஒரு நாடகக் குழுவில் இவன்  நடித்த ‘பம்பாய் மெயில்’, ‘இழந்த காதல்’ ஆகிய நாடகங்களைப் பார்த்துவிட்டு அந்த நாடகத்தில் நடித்தவருக்கு குறைந்தது ஐம்பது வயதாவது இருக்கும் என்ற எண்ணத்தில் நீங்கள் கூப்பிட்டது போல ‘அந்தப் பெரியவரைக் கூப்பிடுங்கள்’ என்றுதான் நாங்களும் சொன்னோம்.உங்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை என்றால் கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த நாடகத்தின் வசனங்களைப பேசிக் காட்டும்படி ராமசாமியிடம் கூறினார்.

வி.கே.ராமசாமி அந்த வசங்களைப் பேசிக் காட்டியதும் அசந்து போன மெய்யப்ப செட்டியார் “நான் மட்டுமில்லை. யாராலும் இவர்தான் அந்த வேடத்தில் நடித்தவர் என்பதை அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. முக்கியமாக இவரது குரல் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான குரல். இவருக்கு அடையாளமாக அந்தக் குரல்தான் அமையப் போகிறது…” என்று வி.கே.ராமசாமியைப் பாராட்டினார்.

மூவாயிரம் ரூபாய் கொடுத்து அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையை ப.நீலகண்டனிடமிருந்து வாங்கிய மெய்யப்ப செட்டியார் அந்தப் படத்திலே உதவி இயக்குநராகத் தன்னுடன் பணியாற்றும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்.   ப.நீலகண்டன் பணியாற்றிய முதல் திரைப்படமாக அந்தப் படம் அமைந்தது

‘நாம் இருவர்’ என்று அந்தப் படத்துக்கு பெயர் சூட்டிய மெய்யப்ப செட்டியார் அந்த நாடகத்தில் நடித்த பெரும்பாலான கலைஞர்களை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.

ஆரம்பத்தில் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான  எஸ்வி.சஹஸ்ரநாமம், என்.எஸ்.கிருஷ்ணனின் வழக்கு சம்பந்தமான பணிகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால் அந்தப் படத்திலிருந்து ஒரு கட்டத்தில் விலகிவிடவே பிரபல பாடகரான டி.ஆர்.மகாலிங்கத்தை அந்தப் படத்திலே நாயகனாக்கிய மெய்யப்ப செட்டியார் நாடகத்தில் வி.கே.ராமசாமி ஏற்ற அதே ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் வேடத்தை அவருக்கு வழங்கினார்,

காரைக்குடிக்கு அருகே தேவகோட்டை ராஸ்தாவிலே அமைக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடியோவிலே உருவான அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு வி.கே.ராமசாமிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன என்றாலும் எல்லா படங்களிலும் வயதான வேடங்களே அவருக்குக் கிடைத்தன.

வி.கே.ராமசாமி நடிகராக மட்டுமின்றி படத் தயாரிப்பாளராகவும்,  பல சாதனைகளை செய்தவர்.

தமிழ்த் திரையுலகம் என்றும் மறக்க முடியாத மிகப்பெரிய சாதனையாளரான நடிகவேள்  எம்.ஆர்.ராதா  இந்த சினிமா உலகில் மிக நீண்ட காலம்   வலம் வர பாதை அமைத்துத் தந்தவர் வி.கே.ராமசாமிதான் என்பது பலர் அறியாத ஒரு செய்தி.

(தொடரும்)    

- Advertisement -

Read more

Local News