Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஒரே பாடலில் பிரபலமான பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவில் யாருக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொழுது விடிவதற்குள் ஒருவரைப் புகழ் பெற்றவர்களாக மாற்றிவிடக் கூடியது சினிமா.

அந்த வகையில் ஒரு பாடல் எழுதி அந்தப் பாடல் வைரலாகி அதன் வெற்றி வீச்சால் இன்று யார் இவர் என்று கேட்கும் அளவிற்குப் பிரபலமாகிவிட்டார் விஜய் முத்துப்பாண்டி.

இவர் எஸ்.ஏ.சந்திரசேகர், சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக வாழ்வைத் தொடங்கியவர். அப்போது அங்கே மூத்த உதவி இயக்குநர்களாக இருந்த பொன்ராம், எம்.ராஜேஷ் ஆகியோருடன் நல்ல நட்பு கொண்டு பழகியவர். பொன்ராம் தனியே இயக்குநர் ஆனதும் இவரும், அவரிடம் இணை இயக்குநர் ஆகிவிட்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணிபுரிந்த போதே வசனம், பாடல் வரிகளை எழுதும் பரிச்சயம் விஜய் முத்துப்பாண்டிக்கு இருந்திருக்கிறது. அவ்வப்போது எழுதிக் காட்டியபோது எஸ்.ஏ.சி. பாராட்டி  ஊக்கப்படுத்தி இருக்கிறார். அந்த ஊக்கம் தந்த  உந்துதலில் தனது பயிற்சியைத் தனக்குள் தொடர்ந்து கொண்டே வந்துள்ளார்.

இப்போது முத்துப்பாண்டி பொன்ராமிடம் விஜய் சேதுபதி நடிக்கும் ‘DSP’ படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிகிறார். அந்தப் படத்திற்கான சூழலுக்கு ஏற்ற மாதிரியாகச் சில வரிகள் எழுதி, சக படக் குழுவினரிடம் காட்டியுள்ளார். அது அவர்களுக்குப் பிடித்து போய் இயக்குநரிடம் காட்டச் சொன்னபோது இயக்குநருக்கும் பிடித்துவிட்டது.

பொன்ராம் இசையமைப்பாளர் டி.இமானிடம் அழைத்துச் சென்று தனது இணை இயக்குநரை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது அவர் எழுதிய பாடல் வரிகளைக் காட்டியபோது இமானுக்கும் பிடித்து விட்டது. பிறகென்ன? பாடல் தயாராகிவிட்டது.

அந்தப் பாடல்தான் ‘நல்லா இரும்மா’ என்கிற பாடல்.

“நிகழும்

பார்த்திப ஆண்டு

ஆவணித் திங்கள்

இருபதாம் நாள்

திருவளர்ச் செல்வன் மணமகனுக்கும்

திருவளர்ச்செல்வி மணமகளுக்கும்

நடைபெறும் திருமணத்திற்கு

சுற்றம் சூழ வந்திருந்து

வாழ்த்தியருள வேண்டுவது

உங்கள் வாஸ்கோடகாமா…”

என்று தொடங்கி,

பீப்பீ
பீப்பீ டும்டும்,

பிப்பீப்பீ

பிப்பீப்பீ டும்டும்

என்ற தாளத்துடன்

‘நல்லாயிரும்மா

ரொம்ப நல்லாயிரும்மா

பூவோடும் பொட்டோடும்

நல்லா இரும்மா”

என்று ஒலிக்கிறது பாடல்.

இந்த ‘நல்லா இரும்மா’ பாடல் இணைய உலகில் வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் தாண்டி பார்வைகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

இப்பாடல்  உருவான பின், அதைக் கேட்ட DSP படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, முத்துப்பாண்டியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு, ”பாட்டு செம்மையாக இருக்கிறது வரிகள் ரொம்ப அழகாக டிரண்டியாக இருக்கிறது” என்று பாராட்டியிருக்கிறார்.

அதை நினைத்து இப்போதும் மகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கிறார் விஜய் முத்துப்பாண்டி.

வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பொன்ராம், இசையமைப்பாளர் டி.இமான், ஊக்கம் கொடுத்த விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கார்த்திக் சந்தானம் மற்றும் படக் குழுவினர், ஆதரவளித்த ஊடக உலகினர் அனைவருக்கும்  நெகிழ்வுடன் நன்றி கூறுகிறார் இணை இயக்குநர் விஜய் முத்துப்பாண்டி.

- Advertisement -

Read more

Local News