Thursday, November 21, 2024

எதற்கும் துணிந்தவன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொள்ளாச்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பின்னப்பட்டிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன்

நடிகர் சூர்யா ஊரில் வழக்கறிஞராக இருக்கிறார். அவர் அப்பா சத்யராஜ், அம்மா சரண்யா பொன்வண்ணன் ஆகியோரோடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் ஊரை தென்னாடு என்று அழைக்கிறார்கள்.

வில்லன் வினய் இளம் பெண்களை தவறான வீடியோ எடுத்து பெரும் முதலாளிகளுக்கு விருந்தாக்கும் விஷம வேலையைச் செய்து வருகிறார். வினய் இருக்கும் ஊர் வடநாடு என்றழைக்கப்படுகிறது. இந்த இரண்டு ஊரிலும் பெண் கொடுத்து பெண் எடுப்பது வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில் ஒரு பெண்ணின் தற்கொலை காரணமாக இரண்டு ஊருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சனைக்குப் பிறகு வடநாட்டைச் சேர்ந்த நாயகி பிரியங்கா மோகனை நடிகர் சூர்யா காதலிக்கிறார். அதனால் பிரச்சனை வலுவாக, சூர்யா தடைகளைத் தாண்டி பிரியங்காவை திருமணம் செய்கிறார்.

அந்நேரத்தில் வில்லன் வினய் சூர்யா பிரியங்கா மோகன் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட, கதை சூடு பிடிக்கிறது. இதைப்போல வில்லன் வினய் சூர்யா ஊரில் இருக்கும் 500 பெண்களின் வீடியோ இருப்பதாகச் சொல்கிறார். இவற்றை எல்லாம் சூர்யா எப்படி சரி செய்தார் என்பதே மீதிப் படத்தின் கதை.

நீண்டநாட்களுக்குப் பிறகு திரையில் கலகலப்பான ஒரு சூர்யாவை காண முடிகிறது. சண்டைக்காட்சிகளில் மட்டும் இன்றி எமோஷ்னல் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். கோர்ட் போட்ட வக்கீல், வேஷ்டி கட்டிய வீரன் என கலந்து கட்டி விளையாடி இருக்கிறார். குறிப்பாக பிரியங்கா மோகனிடம் காதல் வயப்படும் காட்சிகளில் குறும்பு!

பிரியங்கா மோகனுக்கு இந்தப் படத்தில் பேர் சொல்லும் வேடம். ஆரம்பத்தில் சராசரி ஹீரோயினாக இருந்தாலும் பின்பாதியில் படத்தின் மையப்புள்ளியாக அவரது கேரக்டர் தான் இருக்கிறது. அவரும் பொறுப்பை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்.

வில்லன் வினய்க்கு இந்தப்படத்தில் மிரட்டலான வேடம். அவர் மீது பெண்களுக்கு நிஜமாகவே கோபம் வரும் வகையில் அவர் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. வினய் சூர்யாவை மிரட்டும் காட்சிகள் எல்லாம் பரபர சீக்வென்ஸஸ்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சாய்தீனாவிற்கும் ஒரு கவனிக்கும் படியான வேடம். சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் ஜோடி செம்ம ரவுசு காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை விடவும் இளவரசு, பிரியதர்ஷினி ஜோடி பட்டயக்கிளப்புகிறது. சூரியும் படத்தில் அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். குக்வித் கோமாளி புகழ் ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைக்கிறார்..ஆக எல்லா நடிக நடிகைகளின் பங்களிப்பும் படத்தில் படு ஜோர்.

படத்தின் பின்னணி இசையில் இமான் தனிக்கவனம் செலுத்தி உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவில் ரத்னவேலு இன்னும் அக்கறை காட்டி இருக்கலான். செங்கற்சூளை சண்டைக்காட்சியில் வைத்த ப்ரேம்கள் மட்டும் அக்மார்க் ரத்னவேலிசம். படத்தின் ஆர்ட் டிபார்ட்மெண்ட் பணியும், ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணியும் மெச்சத்தக்கது

படத்தின் முன்பாதியில் இருந்த கலகலப்பு பின்பாதியில் மிஸ் ஆனாலும், பின்பாதி படம் தான் முக்கியமான விசயத்தைப் பேசியுள்ளது. திரைக்கதையில் எமோஷ்னல் விசயத்தில் இயக்குநர் பாண்டிராஜ் இன்னும் கூட மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இருந்தாலும் பெண்களின் உடலை வைத்து அதிகார வர்க்கம் செய்யும் அக்கிரமரங்களை சூர்யா போன்ற ஒரு ஹீரோவை வைத்துப் பேசிருப்பது பாராட்டுக்குரியது. அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் படத்தை எல்லோரும் பார்க்கலாம்.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News