Thursday, July 7, 2022
Home Movie Review ‘டான்’ – சினிமா விமர்சனம்

‘டான்’ – சினிமா விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயனின் 19-வது படம் இதுவாகும்.

‘டான்’ என்றால் ‘ரவுடி கும்பலின் பெருந்தலைவன்’ என்று மட்டும் அர்த்தமில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் மற்றவர்களைவிடவும் சிறந்து விளங்குபவன்தான் ‘டான்’ என்று இந்த வார்த்தைக்கு புதிய வியாக்கியானம் சொல்லியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரான சிபி சக்கரவர்த்தி.

நாயகன் சிவகார்த்திகேயன் அப்பாவின் கண்டிப்பால் அவரை வெறுத்தபடியே வளர்ந்திருப்பவர். பொண்ணுதான் பிறக்கும் என்ற ஆர்வத்தில் இருந்தவருக்கு பையன் என்றதுமே ஏமாற்றமாகிறது.

பையனைக் கண்டித்து வளர்க்கவில்லையென்றால் அவன் படிக்காமல், ஒழுக்கம் கெட்டுவிடுவான் என்ற நம்பிக்கையில் பையனை ‘படி’, ‘படி’ என்று உயிரையெடுக்கிறார். பையனும் எந்த நோக்கமும் இல்லாமல், குறிக்கோளே இல்லாமல் ஏதோ ஒன்றைப் படிக்கிறோம் என்பதாக நினைத்துப் படிக்கிறான்.

மகனை கல்லூரியில் பி.இ. வகுப்பில் சேர்த்து விடுகிறார் அப்பா. சிவகார்த்திகேயனுக்கு நடிப்பில் ஆர்வமில்லை. ஆனால் அதையும் தாண்டி தான் ஒரு பெரியாள் என்ற நினைப்பு மட்டுமே இருக்கிறது.

கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை கட்டியின் தலைவரான எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இவருக்கும் இடையில் மோதல் பிறக்கிறது. சூர்யாவின் சேடிஸ்ட் மனப்பான்மை சிவாவுக்குப் பிடிக்காமல் போக இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் பகமையுணர்ச்சி எழுகிறது.

பள்ளிப் பருவத்தில் தான் காதலித்த நாயகி பிரியங்கா அதே கல்லூரிக்கு படிக்க வர.. தன் காதலை இங்கேயும் தொடர்கிறார் சிவா. சூர்யா அதே கல்லூரிக்கு முதல்வராக வந்து அமர்ந்து, சிவகார்த்திகேயன் எப்படி தனது டிகிரி படிப்பை முடிக்கிறார் என்பதை பார்க்கிறேன் என்று சவால் விடுகிறார்.

இந்த சவாலில் சூர்யா ஜெயித்தாரா.. அல்லது சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா என்பதுதான் இந்தப் படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை.

நாயகன் சிவகார்த்திகேயன் தனது 30 வயதுக்குள்ளேயே மூன்று வேடங்களில் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. அதில் பள்ளிக் கால வேடம் கொஞ்ச மெரீனா’ படத்தையும்விடவும் இளமையாகத் தோன்றியிருக்கிறார். அடுத்தக் கல்லூரிக் காலம் அதிகமான காட்சிகளிலும், மிகக் குறைந்த காட்சிகளில் தற்போதைய தோற்றத்திலும் வித்தியாசம் காட்டியே நடித்திருக்கிறார்.

தான் என்னவாகப் போகிறோம் என்கிற இலட்சியமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி இளைஞனின் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் சிவா.

அம்மாவிடம் பாசம், அப்பாவிடம் பயம்.. கல்லூரியின் டானாக தோற்றம்.. பிரியங்காவுடன் காதலன்.. தனது நண்பர்களுடன் டைமிங்சென்ஸ் காமெடியில் நேரத்தைக் கழிக்கும் நண்பன் என்று பலதரப்பட்ட கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையும் தானே செய்து காட்டி ஒன் மேன் ஷோ’ செய்திருக்கிறார் சிவா.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் இருந்தால் அது சிவா படம் இல்லை என்று சொல்ல வைப்பதுபோல இந்தப் படத்தின் கடைசி 20 நிமிடங்களில் சிவாவும், அவரது அம்மாவாக நடித்திருந்த ஆதிராவும் கண் கலங்க வைக்கிறார்கள். ஆனால் எல்லாமே அளவெடுத்து தைத்த சட்டை போலவேதான் இருக்கிறது.

பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற ஜோடி போலும். அவரது உயரக் குறைவும், அழகு முகமும், நவரசங்களைக் காட்டும் நடிப்பும் நாயகி என்று சொல்ல வைத்திருக்கிறது.

கண்டிப்பான அப்பாவாக சமுத்திரக்கனியின் கதாப்பாத்திரம் எதற்கும் பயப்படாத குணமுள்ளவராகவும் காட்டியிருக்கிறது. பையனிடம் நேரடியாக தன் பாசத்தைக் காட்டத் தெரியாத அப்பா என்பதை இறுதியில்தான் சொல்கிறார்கள். எந்த வேடமென்றாலும் அதில் தன் தனித்துவத்தைக் காட்டத் தவறியதில்லை சமுத்திரக்கனி. இதிலும் அப்படியே..!

‘மாநாடு’ ஸ்டைலில் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சில் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் கொஞ்சம் குழப்பமாகிவிட்டது. முதலில் சாடிஸ்ட் போலவே மாணவர், மாணவிகளிடம் நடந்து கொள்ளும் சூர்யா, மருத்துவமனையில் உயிர் தப்பி வந்த பின்பு நல்லவராகக் காட்டப்படுவது முரணாக இருக்கிறது.

ஆனால் தன் நடிப்பில் தனது கதாபாத்திரத்திற்கு நேர்மையாக நடித்திருக்கிறார் சூர்யா. இதில் குறையே இல்லை. ராதாரவியிடம் பேசும்போது தன்னை மாட்டிவிடும் சிவகார்த்திகேயனைப் பார்த்து பதறும் அந்த ஒரு காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. இதுதான் சூர்யாவின் ஸ்பெஷலாட்டி போலும்..! கடைசியில் குறும்படம் எடுக்கப்படுவது தெரியாமல் சிவாவை கார்னர் செய்வதாகச் சொல்லி கடைசியில் சிவாவிடமே மாட்டிக் கொள்வதும் நல்லதொரு காமெடிதான்.

இவர்கள் மட்டுமில்லாமல் பள்ளி ஆசிரியராக மனோபாலா, கல்லூரி பேராசிரியர்களாக முனீஸ்காந்த், காளி வெங்கட், கல்லூரி முதல்வராக ஜார்ஜ் மற்றும் சிவாவின் தோழர்களாக வரும் சூரி, பால சரவணன், மிர்ச்சி விஜய், நடிகர் சிங்கம்புலி என்று அத்தனை பேருமே நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

பிரியங்காவின் தோழியான சிவாங்கியின் பேச்சும், நடிப்பும், உடல் மொழியும் அவரும் கை தேர்ந்த நடிகை என்றே சொல்கிறது. பேருந்துக்குள் சிவாவின் மீது தனக்குக் கிரஷ் இருப்பதாகச் சொல்லும் காட்சியில் நடிப்பில் கொள்ளை கொள்கிறார் சிவாங்கி.

சிவாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிராவும் தன் பங்குக்கு கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணைக் கசக்க வைத்திருக்கிறார்.  கணவருக்காகப் பரிந்து பேசும் காட்சியில் பல்வேறு காட்சித் துணுக்குகள் தென்பட்டாலும் அதையெல்லாம் முன்கூட்டியே பையனிடம் நேராகவே சொல்லியிருக்கலாமே என்றும் நமக்குத் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம் சூரியும் ஒரு சில காட்சிகளில் சிவாவுக்கு நண்பராக வந்து முகத்தைக் காட்டியிருக்கிறார். சிவாவின் ஸ்கிரீன்பிளேயில் அப்பாவாக அவர் நடிக்கும் காட்சியில் தொடர் சிரிப்பலை. சிவாவுடன் அவர் பேசும் பாஷை சலாமிய பாஷையா என்று கேட்கத் தோன்றுகிறது.

அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் அடித்துவிட்டன. படத்தில் பார்த்துக் கேட்கும்போதும் இளசுகளுக்கு துள்ளலைக் கொடுத்திருக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் திரையே ஜொலிக்கிறது. அந்த அளவுக்கு ஒளிப்பதிவு தரமானது என்றே சொல்ல வேண்டும்.

என்ன இருந்தாலும் லாஜிக் எல்லை மீறாமல் இருந்திருக்க வேண்டும். யாரோ ஒரு மாணவனின் பேச்சைக் கேட்டு ஆசிரியர்களுக்குத் தகுதி தேர்வு போட்டியை நடத்த கல்லூரியின் தாளாளர் ஒப்புக் கொள்வாரா என்ன..? இந்தக் கதைக்கு வேறு கதை எழுதியிருக்கலாம்தான்.

இறுதியில் சிவா பல்வேறு தடங்கல்களையும் தாண்டி தான் படித்த கல்லூரிக்குச் செல்வது தலைமை விருந்தினராக என்று நினைத்துக் கொண்டிருக்க. அங்கேயும் இதற்குப் பொருத்தமாக ஒரு டிவிஸ்ட்டை வைத்திருக்கிறார் இயக்குநர். அதுவும் ரகளையானது.

சமுத்திரக்கனியின் திடீர் மரணம் கிளைமாக்ஸில் சென்டிமெண்ட்டுகளுக்கு உதவினாலும் லாஜிக்படி வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்கள் மீது கண்டிப்பு காட்டுவதும், கோபப்படுவதும் மாணவர்களின் நன்மைக்குத்தான் என்பதை இந்தப் படத்திலும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இதை அப்படியே சொன்னால் இதுவொரு நீதிக் கதை போலாகிவிடும் என்பதால் காமெடி, காதல், ஆக்ஷன், சவால், சென்டிமென்ட் என்று அனைத்தையும் கலந்து கமர்ஷியல் மசாலாவாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிபி.

அதே சமயம், அப்பா எதற்குக் கண்டிப்பு காட்டுகிறார்.. ஏன் படிக்க வேண்டும்.. ஏன் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு இருக்க வேண்டியது பையனின் பொறுப்பு..

கல்லூரியில் ஆசிரியர்களை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டு.. தேவையில்லாமல், வேலையில்லாமல் காதலித்துக் கொண்டு, நண்பர்களுடன் அடாவடியாக வாழ்ந்து கொண்டு கடைசியாக தனக்கு இது பிடிக்கவில்லை. அப்பாதான் வலுக்கட்டாயமாக இங்கே கொண்டு வந்து தள்ளினார் என்று தந்தை மீதே குற்றம் சுமத்துவதும் ஏற்க முடியாதது.

இங்கே இரு சாராருக்குமே இதை வெளிப்படுத்தத் தெரியவில்லை. சினிமாவுக்காக அந்தத் திரைக்கதைக்குள்ளேயே இயக்குநர் போகவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.

கடைசியாக படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் இந்தப் படத்தை அதிகமாக ரசித்திருக்க முடியும்.

RATING : 3.5 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

போலீஸ் கான்ஸ்டபிள்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் விஷாலின் ‘லத்தி’ படம்

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் ‘லத்தி’. இந்தப் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். மேலும் முதல்...

“கீர்த்தி ஷெட்டியிடம் மீரா ஜாஸ்மினின் சாயல் இருக்கு” – இயக்குநர் லிங்குசாமி பேச்சு

இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும்  அதிரடி திரைப்படம் ‘தி வாரியர்’. Srinivaasaa Silver Screen சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்துரி இந்தப் படத்தைத்...

‘கேசினோ’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் ‘கேசினோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்..! மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media...

கிராமத்துப் பின்னணியில் தயாராகும் ‘மூத்தகுடி’ படம்

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து அந்நிறுவனத்தினர் தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.