“இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான ‘பசங்க’ படத்தை நான் மிஸ் செய்துவிட்டேன்…” என்று இப்போது வருத்தப்படுகிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த உண்மையை தனஞ்செயன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் இது பற்றிப் பேசும்போது, “மோசர்பேர் நிறுவனத்தின் சார்பில் நான் தயாரித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தை இயக்குநர் சேரன் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பாண்டிராஜ். அப்போதே எனக்கு அவரை நன்கு தெரியும்.
அந்தப் படம் தயாரித்து முடித்து ரிலீஸுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்த சூழலில் சேரன்தான் பாண்டிராஜை அழைத்து வந்து ‘பசங்க’ படத்தின் கதையைச் சொன்னார். கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

“நானே இதைத் தயாரிக்கிறேன்” என்றேன். அப்போது சேரன் அந்தப் படத்தை இயக்குவதாகவும் பாண்டிராஜ் இணை இயக்கம் செய்வதாகவும் பேசி முடித்தோம். அந்தப் பட வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று சேரனுக்கும், பாண்டிராஜூவுக்கும் இடையில் கதை தொடர்பாக ஏதோ கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் சேரன் அந்த பிராஜெக்ட்டில் இருந்து விலகிவிட்டார்.
நானும் ‘ராமன் தேடிய சீதை’ படத்தின் வெளியீட்டில் இருந்த பெரிய சிக்கல்களை களையும் வேலையில் இருந்தேன். இந்த நேரத்தில் பாண்டிராஜ், “பசங்க’ படத்தை உடனேயே துவக்க வேண்டும்” என்று சொன்னார். ஆனால், என்னால் அப்போது அது முடியாமல் இருந்தது. ஏனெனில், அப்போதே ஐந்தே முக்கால் கோடி செலவில் ‘ராமன் தேடிய சீதை’ படத்தை முடித்திருந்தேன். அதை ரிலீஸ் செய்வதில் இருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் வேலையாக இருந்தது. அதனால் பாண்டிராஜூக்கு என்னால் உறுதியளிக்க முடியவில்லை.

திடீரென்று இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இடையில் வந்து பாண்டிராஜிடம் கதை கேட்டிருக்கிறார். அவருக்குக் கதை பிடித்துப் போய் நான் தயாரிக்கிறேன் என்று முன் வரவே.. அந்த ‘பசங்க’ பிராஜெக்ட் என் கையைவிட்டுப் போய்விட்டது.
அந்தப் படத்தில் நான் தயாரிப்பதாக இருந்தபோது அதில் நடிப்பதற்காக நான் தேர்வு செய்திருந்த நடிகர், நடிகைகள் வேறு வேறு ஆட்கள். நாசரின் மகன், அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விக்ரமின் மகன் துருவ் மூவரையும் நான் பேசி வைத்திருந்தேன்.

நாசரும், விக்ரமும் ஒத்துக் கொண்டார்கள். விக்ரமின் மனைவி இந்தக் கதையைக் கேட்டு மிகவும் இம்ப்ரஸ்ஸாகிவிட்டார். அர்ஜூன் மட்டும் “இவ்ளோ பெரிய பொண்ணு எனக்கு இருக்குன்னு வெளில சொல்லணுமா”ன்னு யோசிச்சிட்டு, அப்புறமா “சரி”ன்னு சொல்லிட்டார்.
ஆனால், கடைசியில் சசிகுமார் கைக்கு போனதும் “நான் புதுமுகங்களை வைத்தே படத்தை எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு கேஸ்ட்டிங்கை மொத்தமாக மாற்றிவிட்டார் பாண்டிராஜ். ஆனாலும், அவர் ஜெயித்துவிட்டார். அந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது.

‘பசங்க’ படத்தை மிஸ் செய்துவிட்டோமே என்ற வருத்தம் இப்போதும் எனக்குள் இருக்கிறது. இந்தப் படத்தை நானே தயாரித்திருந்தால் ‘அந்த மூவரையும் நான்தான் அறிமுகப்படுத்தினேன்’ என்ற பெயராவது எனக்குக் கிடைத்திருக்கும்…” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.