Friday, April 12, 2024

நாடகக் குழுவினரை அசத்திய எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் பண்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் பண்பு அனைவரும் அறிந்ததுதான். அவருடைய ராமாவரம் தோட்டத்திற்குச் சென்ற யாரும் சாப்பிடாமல் திரும்பியதில்லை. அனைவரையும் சாப்பிட வைத்த பின்புதான் வந்த விஷயத்தையே பேசுவார் எம்.ஜி.ஆர்.

அதேபோல் அனைவரிடமும் பழகுவதிலும், மரியாதையுடன் பேசுவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அதிலும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரிடமும் அவர் பழகியிருக்கும்விதம் அவர்களாலேயே மறக்க முடியாதது. அப்படியொரு சம்பவத்தை இப்போது நினைவு கூர்ந்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான மெளலி.

எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் பற்றி அவர் பேசும்போது, “1974-ம் ஆண்டு நாங்கள் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு நாடகத்தைப் பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். வந்தார். நாடகத்தைப் பார்த்துவிட்டு இறுதியில் நாடகக் குழுவினர் அனைவரையும் மேடைக்கு வந்து மனதாரப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

அந்த நேரத்தில் நான் அவரிடம், “ஸார்.. உங்க சினிமா ஷூட்டிங்கையெல்லாம் நாங்க பார்க்க முடியுமா..? நாங்கள் பார்க்க முயற்சிக்கும்போதெல்லாம் உள்ளேவிட மாட்டேன்றாங்க…” என்று சொன்னேன்.

உடனேயே கலகலப்பாக சிரித்த எம்.ஜி.ஆர். “ஓ.. யெஸ்.. நாளைக்கே வாங்களேன்…” என்று அழைத்தார். அவர் அழைப்பின் பேரில் நாங்கள் மறுநாள் ஜெமினி ஸ்டூடியோவுக்கு சென்றோம்.

நாங்கள் உள்ளே நுழைந்ததுமே எங்களுக்காகவே காத்திருந்ததுபோல அங்கேயிருந்தவர்கள் படபடத்தார்கள். நாங்கள் அமர்வதற்கு தயாராக சேர்கள் போடப்பட்டிருந்தன. எங்களுக்காக பெரிய பேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தின் படப்பிடிப்பு அங்கே நடந்து கொண்டிருந்தது. அந்தப் படத்தில் இடம் பெறும் ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ என்ற பாடல் காட்சி அப்போது படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆரும், லதாவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். மதியம்வரையிலும் அந்தப் பாடல் காட்சியை படமாக்கியவிதத்தைப் பார்த்தோம்.

மதியம் லன்ச் பிரேக் விட்டபோது எம்.ஜி.ஆர். எங்கள் அருகில் வந்து நலம் விசாரித்தார். “இதுதான் ஷூட்டிங். இப்போ பார்த்தீங்கள்ல.. எடுத்தக் காட்சியையே திரும்பத் திரும்ப எடு்ப்போம்.. இதுதான் சினிமா…” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

அடுத்து உடனேயே “உங்களுக்குச் சாப்பாடு ரெடியா இருக்கு. சாப்பிட்டுட்டுத்தான் போகணும் என்று சொல்லிவிட்டுப் போனார். இன்னொரு தனியான ஒரு இடத்தில் எங்கள் குழு அனைவருக்கும் தனியாக டேபிள், சேர் போட்டு சாப்பாடு தயாராக இருந்தது..

உண்மையில் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பலரும் பலவிதமாக பேசியிருந்தாலும் நாங்கள் அவரைச் சந்தித்த இந்தத் தருணத்தில் அவருடைய உபகார, விருந்தோம்பல் பண்பினை வெகுவாக உணர்ந்தோம். அனுபவித்தோம்…” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குநர் மெளலி.

- Advertisement -

Read more

Local News