சில திரைப்படங்களைக் காணும்போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாளத் திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.
மலையாள இயக்குநரான ரதீஷ் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள அரசு வழங்கிய மாநில விருதுகள் கிடைத்திருந்தது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார். பலரும் அவர் இயக்குவதற்காகத்தான் இந்தப் படத்தை வாங்கியுள்ளார் என்று நினைத்தார்கள்,
ஆனால், இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான சூரஜ் வஜ்ரமூடு கதாபாத்திரத்தில் தான் நடிப்பதற்காகவே இந்தப் படத்தின் உரிமத்தை வாங்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளார். நாயகியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், யோகிபாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங் ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
தயாரிப்பு – கே.எஸ்.ரவிக்குமார், கதை – ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால், திரைக்கதை, வசனம், இயக்கம் – சபரி – சரவணன், தயாரிப்பு வடிவமைப்பு – பி.செந்தில்குமார், ஒளிப்பதிவு – ஆர்.வி., இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – ப்ரவீன் ஆண்டனி, கலை இயக்கம் – சிவகிருஷ்ணா, பாடல்கள் – மதன் கார்க்கி, ஆடை வடிவமைப்பு: ஜே.கவிதா, புகைப்படம் – ராமசுப்பு, டிசைன்ஸ் 0 ரெட்டாட் பவன், மக்கள் தொடர்பு – யுவராஜ்.
‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சுவராசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். ‘கூகிள் குட்டப்பன்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சுமார் 10 ஆண்டுகளாக கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது. மேலும், பொள்ளாச்சி, சென்னையிலும் சில காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கவுள்ளனர்.
தற்போது படப்பிடிப்பை துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் படக் குழுவினர் மும்முரமாகக் களமிறங்கியுள்ளனர்.