இயக்குநர் அனு மோகன் கோவையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சினிமாவில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
‘இது ஒரு தொடர் கதை’, ‘நினைவுச் சின்னம்’, ‘மேட்டுப்பட்டி மிராசு’, ‘அண்ணன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் ‘வி.ஐ.பி.’ படம் துவங்கி இதுவரையிலும் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறா் அனு மோகன்.
தான் இயக்குநராக இருந்தும் நடிகராக மாறிய அனுபவத்தை இங்கே நினைவு கூர்கிறார் இயக்குநர்-நடிகர் அனு மோகன்.
“1997-ம் ஆண்டுவரையிலும் நான் மூன்று திரைப்படங்களை இயக்கியிருந்தேன். பின்பும் பல திரைப்படங்களுக்கு கதை டிஸ்கஷனிலும் கலந்து கொண்டிருந்தேன். திரைக்கதையும் எழுதிக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தாணு ஸார் ஒரு நாள் போன் செய்து என்னை அழைத்தார். தாணு ஸாருக்காக அவர் வாங்கி வெளியிட்ட சில திரைப்படங்களில் நான் பின்னணி குரல் கொடுத்திருக்கிறேன். ‘சிறைச்சாலை’ படத்தில் சீனிவாசனுக்கும், ‘டெல்லி டைரி’ படத்தில் ராஜன் பி.தேவுக்கும் நான்தான் குரல் கொடுத்திருந்தேன். அப்போதிருந்தே தாணு ஸாருக்கும், எனக்குமான நட்பு பலமாக இருந்தது.
கூப்பிட குரலுக்காக ஓடோடி போய் தாணு ஸாரை பார்த்தேன். “நான் இப்போ சபாபதி இயக்கத்தில் ‘வி.ஐ.பி.’-ன்னு ஒரு படம் செய்யப் போறேன். அதுல ஸ்டோரி டிஸ்கஷன்ல உன் உதவி தேவைப்படுது. நீயும் வந்து கதை சொன்னால் நல்லாயிருக்கும்”ன்னு சொன்னார்.
அப்போ அந்த டிஸ்கஷன்லதான் நான் ஒரு டிரைவர் கதாபாத்திரத்தைப் பற்றிச் சொன்னேன். முழுக்க, முழுக்க கோயம்புத்தூர் ரூரல் ஏரியாக்களில் மக்கள் பேசும் ஸ்லாங்கில் அந்த டிரைவர் பேசுவதைப் போல சில வசனங்களையும் பேசிக் காண்பித்தேன்.
அது அங்கேயிருந்த அனைவருக்கும் பிடித்துப் போக.. தாணு ஸார், “நீயே அந்தக் கேரக்டர்ல நடிச்சிரு..” என்றார். இயக்குநரும் இதை ஏற்றுக் கொள்ளவே.. நான் அந்தப் படத்தில்தான் அந்த டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானேன்.
அந்த ‘வி.ஐ.பி.’ படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே ரஜினி ஸாருக்கு தனி பிரிவியூ போட்டிருந்தார் தாணு ஸார். ரஜினி ஸார் தனது மகள்களுடன் வந்திருந்து அந்தப் படத்தைப் பார்த்தார்.
படம் பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்த ரஜினி ஸார் என்னிடம், “எப்படி.. எப்படி பேசுனீங்க அந்த டயலாக்கை..? எங்க பேசிக் காட்டுங்க. என் பொண்ணுங்க அதை ரொம்ப ரசிச்சாங்க..” என்றார். நானும், அந்த வசனத்தை ரஜினியின் பொண்ணுகளுக்காகவே பேசிக் காட்டினேன். அதைக் கேட்டு என்னை மிகவும் பாராட்டிய ரஜினி, “என்னோட அடுத்தப் படத்துல நீங்க இருக்கீங்க..” என்று சொல்லிவிட்டுப் போனார்..” என்கிறார் இயக்குநரும், நடிகருமான அனு மோகன்.