Monday, July 15, 2024

சினிமா வரலாறு-75 – எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘காளிதாசி’ பட காலத்திலிருந்து எம்.ஜி.ஆரைத் துரத்திக் கொண்டிருக்கும் பெண்ணின் வீட்டுக்கு போகத்தான் எம்.ஜி.ஆர் முடிவெடுத்து இருக்கிறார் என்பது தெரிந்ததும்  “இப்போது மணி என்னவென்று பார்த்தீர்களா? இரவு மணி பதினொன்று ஆகிறது. இந்த நேரத்தில் நீங்கள் அந்த பெண்ணைப்   பார்க்கப் போவது நன்றாக இருக்குமா?” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார் அந்த நண்பர்.

“இரவு பதினொரு மணிக்குத்தானே நான் அவமானப்படுத்தப்பட்டேன். வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டேன்” என்று எம்.ஜிஆர் சொன்னதும் தாள முடியாத மன வேதனையில் இருப்பதால்தான் அவர்  அப்படிப் பேசுகிறார்  என்பதைப் புரிந்து கொண்ட அவரது நண்பர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். 

பின்னர் மெல்ல “கண்டிப்பாக அந்த விட்டுக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?” என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். “என் மானத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? எந்த நிபந்தனையும் இல்லாமல் என்னையும் ஒருத்தி விரும்புகிறாள் என்று அவங்க இரண்டு பேருக்கும் நான் காட்ட வேண்டாமா? அப்போதுதானே என் மனது ஆறும்?” என்றார் எம்.ஜி.ஆர்.

“உண்மையில்  உங்களை அவர்கள் இரண்டு பேரும்  அவமானப்படுத்தி இருந்தாலும் அது இப்போது உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால் இப்போது நீங்கள் செய்யப் போகின்ற காரியத்தால் அது ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்துவிடும்.

உங்களைப் பற்றி எல்லோரும் எந்த அளவு உயர்ந்த அபிப்ராயம் வச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான் ராத்திரி, பகல்னு நீங்க எப்போது எங்கே போனாலும் உங்கள் மீது உங்கள் அண்ணன் உட்பட யாரும் சந்தேகப்படுவதில்லை. இன்றைக்கு யார் மீதோ உங்களுக்கு உள்ள ஆத்திரத்தில் நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அதுக்குப் பிறகு உங்களை யாராவது நம்புவார்களா?” என்று அவரது நண்பர் கேட்ட  கேள்விகளில் நியாயம் இருந்தபோதிலும் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் எம்.ஜி.ஆரின் கோபம் அவர் கண்ணை மறைத்தது.

”அப்படீன்னா என்னைத் தூக்கி எறிந்தவர்கள் காலில் போய் விழச் சொல்றீங்களா?” என்று தனது நண்பரைப் பார்த்து கேட்டார் எம்.ஜி.ஆர்.

அந்த நண்பர் கொஞ்சம் விவரமானவர். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வது விவாதத்தைத்தான் வளர்க்குமே தவிர பிரச்னைக்குத் தீர்வைத் தராது என்பதை  புரிந்து கொண்டிருந்த அவர் மீண்டும் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.

அவர் அப்படி மவுனமாக இருந்ததால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர் “இனிமேல் நான் என் கல்யாணத்தைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கல்யாணத்தைப் பற்றியே நான் இனி நினைக்கக் கூடாது அப்படித்தானே“ என்று நண்பரிடம் கேட்டபோது ”யார் உங்களைத் திருமணம் பற்றி நினைக்க வேண்டாம் என்று சொன்னது? உங்களை விரும்புவதாக நீங்கள் சொன்ன அந்த பெண்ணின் தந்தையையும், தாயையும் நாளை காலையில் கம்பெனி விட்டுக்கு வரச் சொல்லி  பேசுங்கள். அப்படிப் பேச உங்களுக்கு சங்கடமாக இருந்தால் உங்களது அண்ணனை விட்டுப் பேசச்  சொல்லுங்கள்” என்றார் அந்த நண்பர்.

அவர் அப்படி சொன்னவுடன் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு போகின்ற திட்டத்தை கை விட்டுவிட்டு கம்பெனி வீட்டுக்குத் திரும்பினார் எம்.ஜிஆர்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அந்தப் பெண்ணின் வீட்டுக்கு ஆளை அனுப்பி அவர்களை வரச் சொல்ல வேண்டும் என்ற சிந்தனையிலே இரவு முழுவதும் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.எப்போது தூங்கினார் என்பது அவருக்கே தெரியாது.

காலையில் கண் விழித்தபோது வேலைக்காரப் பையன் ஒரு கடிதத்தை அவருக்கு முன்னே நீட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.

“இது யார் கொடுத்து அனுப்பிய கடிதம்?” என்று எம்.ஜி.ஆர் கேட்க “ஜானகியம்மா கொடுத்து அனுப்பினாங்க” என்று அந்தப் பையன் பதில் சொன்னவுடன் “இந்தக் கடிதத்தை அவங்க கொடுத்து அனுப்பும்போது அந்தம்மாவின்  மாமா அவர்கூட  இருந்தாரா..?” என்று அந்தப் பையனிடம் கேட்டார் எம்ஜிஆர்.

“அவரும் பக்கத்தில்தான் இருந்தார். இந்தக் கடிதத்தை உங்களுக்கு ஜானகியம்மா கொடுத்து அனுப்பியது அவருக்கும் தெரியும்” என்று  அவருடைய சந்தேகத்தை தீர்க்கின்ற வகையிலே தெளிவாக  பதில் சொன்னான் அந்தப் பையன்.

அதற்குப் பிறகு அந்தக் கடிதத்தை அவன் கையிலிருந்து வாங்கிய எம்.ஜி.ஆர் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார்.

ஜானகி வீட்டிலிருந்து எம்.ஜி.ஆர். கிளம்பிய பிறகு ஜானகியும், அவரது மாமாவும் மேற்கொண்டு இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி என்ன முடிவெடுத்தார்கள் என்பதைப் பற்றி  அந்த கடிதத்தில் விளக்கமாக எழுதியிருந்தார் ஜானகி.

‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிந்துவிடும். அப்படி அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும், முடிவடையவில்லை என்றாலும்  மூன்று மாதங்களுக்கு எம்.ஜி.ஆரும், நீயும் உங்களது  திருமண விஷயத்தைப் பற்றி பேசக் கூடாது. அப்படி நீங்கள் இருவரும்  பேசாமல்  இருந்து விட்டால் மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள  நான் நிச்சயமாக தடையாக இருக்க மாட்டேன் என்று எனது   மாமா சொன்னார். அவர் அப்படிச் சொன்னவுடன் ‘அப்படி நாங்கள் இருவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றால் அந்த மூன்று மாதங்களில் நான்  நடிப்பதற்கான  எந்தப் புதிய பட ஒப்பந்தத்திலும் நீங்கள் கையெழுத்து போடக் கூடாது’ என்று நான்  அவருக்கு எதிர் நிபந்தனை ஒன்றை விதித்தேன்.  அதை  மாமா ஏற்றுக் கொண்டுவிட்டார்” என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார் ஜானகி.

அந்தக் கடிதம் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய மன ஆறுதலைக் கொடுத்தது. கடிதத்தை திரும்பத் திரும்பப்  படித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.  அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும்  திருமணம் செய்து கொள்ள எந்தத் தடையும் இருக்காது என்ற நம்பிக்கை எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.

அதையடுத்து  முதல் வேலையாக தனது நண்பரை அழைத்த எம்.ஜி.ஆர். ஜானகியின் கடிதத்தை அவருக்குப் படித்துக் காட்டி விட்டு “நேற்று இரவு நான் சொன்ன அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு எந்தத் தகவலும் சொல்லி அனுப்ப வேண்டாம்” என்று அவரிடம் சொன்னார்.

 “இன்னொரு முக்கியமான விஷயம். என் அண்ணனுக்கு நேற்று நடந்த எந்த விஷயமும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று எம்.ஜி.ஆர். அந்த நண்பரிடம் சொன்னபோது அந்த நண்பரால்  சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவர் அப்படி சிரிப்பதைப் பார்த்து எதற்காக அவர் அப்படி சிரிக்கிறார் என்பது போல எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்தபோது “நான் நேற்று இரவு உங்களோடு வந்ததே, உங்கள் அண்ணன் சொல்லித்தான்…”  என்று உண்மையை உடைத்தார் அந்த நண்பர்.

“அந்த கார்டியன் ஏதாவது தப்பா பேச இவன் அவர்கிட்ட முரட்டுத்தனமாக நடந்து கொண்டான் என்றால் நன்றாக இருக்காது. அதனால் நீங்கள் கூடப் போய் ஆத்திரத்தில் அவன் எதுவும் செய்துவிடாமல் சமாதானப்படுத்தி அவனைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்று அவர்தான் என்னை அனுப்பி வைத்தார்” என்று அந்த நண்பர் சொன்னவுடன் “இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு தான் போக முடிவு செய்ததும் அண்ணனுக்குத் தெரிந்திருக்குமோ” என்ற அச்சத்தில் அதைப் பற்றி எம்.ஜி.ஆர். அந்த நண்பரிடம் கேட்க “அதைப் பற்றி எல்லாம் நான் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை” என்று சொல்லி எம்.ஜி.ஆர். மனதில் நிம்மதியை ஏற்படுத்தினார் அந்த நண்பர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பில் ஜானகி அவர்களின் மாமாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரை ஜெயித்துவிட்ட ஒருவித பெருமிதத்துடன் எம்.ஜி.ஆர். நடை போட்டாலும் ஜானகியின் மாமா அதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

ஜானகியுடன் தனது திருமணம் நடைபெற்றுவிடும் என்று எம்.ஜி.ஆர். உறுதியாக நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது நம்பிக்கையை அடியோடு தகர்க்கின்ற ஒரு செய்தி அவரை வந்தடைந்தது.

பலதார தடைச் சட்டம் அடுத்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கின்றது என்பதுதான்  அந்தச் செய்தி.

ஏற்கனவே தான் மணமுடித்திருக்கும் சதானந்தவதி நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சட்டம் அமுலுக்கு வருமானால் தன்னால் ஜானகியைத் திருமணம் செய்து கொள்ள முடியாதே என்று அதிர்ச்சி அடைந்தார் எம்.ஜி.ஆர்.

அப்படி ஒரு சட்டம் இரண்டு மாதத்தில் வரப் போகிறது என்று தெரிந்துதான் தங்களது திருமணத்திற்கு ஜானகியின் மாமா ஒப்புதல் தெரிவித்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவர் மனதிற்குள் தோன்றியது.

அப்படி ஒரு சட்டம் வரவிருப்பது பற்றியும், அவர்களது திருமணத்திற்கு ஜானகியின் மாமா சம்மதித்ததில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்குமா என்பது பற்றியும் ஜானகியோடு கலந்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர்.

ஆனால், படத்தில் நடிக்கும்போதுகூட படத்திற்கான வசனங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவர்கள் இருவரும்  பேசிக் கொள்ளக் கூடாது என்று ஜானகியின் மாமா போட்டிருந்த நிபந்தனையை அவர்கள் இருவருமே ஏற்றுக்கொண்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார் அவர்.

அதையும் மீறி ஒருமுறை ஜானகியோடு அவர் பேச முற்பட்டபோது  மாமாவிடம் அவர்கள் இருவரும் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை மீண்டும் ஒருமுறை அவருக்கு நினைவுபடுத்திவிட்டு அவருடன் பேசாமலேயே சென்றுவிட்டார் ஜானகி .

எப்படியாவது அந்த விவரங்கள் எல்லாவற்றையும் அவருக்குத் தெரிவித்தே ஆக வேண்டும் என்பதால் ஜானகிக்கு ஒரு கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தை  வேலைக்காரப் பையனிடம் கொடுத்து அனுப்பினார்.

முதலில் அந்தக் கடிதத்தை வாங்கவே மறுத்த ஜானகி “மறுக்காமல் இதை வாங்கிப் படிக்க  வேண்டும் என்று நான் சொன்னதாக ஜானகியிடம் சொல்…” என்று அந்த பையனிடம் எம்.ஜி.ஆர். சொல்லி அனுப்பியிருந்தது தெரிந்ததும்  கடிதத்தை கையில் வாங்கிக் கொண்டார்.

ஆனாலும் உடனே அந்தக் கடிதத்தை அவர் படிக்கவில்லை. தான் மாமாவுக்கு கொடுத்திருந்த வாக்குக்கு கட்டுப்பட்டு அவர் வந்தவுடன் எம்.ஜி.ஆரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாக அவரிடம்  சொன்ன ஜானகி அந்தக் கடிதத்தை படிக்கச் சொல்லி மாமா அனுமதி கொடுத்ததற்குப் பிறகே அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தார்.

அந்த கடிதத்தில் எம்.ஜி.ஆர். என்ன எழுதியிருந்தார்…?

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News