Friday, April 12, 2024

சினிமா வரலாறு-70 – படத்தின் வெற்றியைக் கணித்து பத்தாயிரம் ரூபாயைப் பரிசாகப் பெற்ற கலைஞர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பல மொழிகளில் எண்ணற்ற வெற்றிச் சித்திரங்களை இயக்கித்  தயாரித்த பெருமைக்குரிய சாதனையாளரான எல்.வி.பிரசாத் தமிழில் உருவான முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ திரைப்படத்தில் நடிக்கின்ற வாய்ப்பைப் பெற்ற அதிர்ஷ்டசாலி.

புரட்சிகரமான வசனங்களின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சிய கலைஞர் மு.கருணாநிதியோடு இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பை முதன் முதலாக ‘மனோகரா’ திரைப்படத்தில் எல்.வி.பிரசாத் பெற்றார்.

ஒரு காலக்கட்டத்திலே பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ‘மனோகரா’ நாடகக் கதையை  நடிக்காத நாடகக் குழுக்களே இல்லை என்று சொல்லலாம். ‘மனோகரா’ நாடகம் முதன்முதலாக சுகுண விலாச சபாவின் ஆதரவில் அரங்கேறியபோது மனோகரனின் வேடத்தில் நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியாரே நடித்தார். பின்னர் ‘மனோகரா’ 1936-ம் ஆண்டில் முதன்முதலாக திரைப்படமாகத்  தயாரிக்கப்பட்டபோதும் அவர்தான் அதில் நாயகனாக நடித்தார்.

நாடக மேடைகளில் கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று பலரும்  ‘மனோகரனாக’ நடித்திருக்கின்றனர். சிவாஜியைப் பொறுத்தவரையில் ‘மனோகரா’ நாடகத்தில் அவர் ஏற்காத வேடமே இல்லை என்று சொல்லலாம். படத்தில் கண்ணாம்பா ஏற்றிருந்த ராணி பத்மாவதியின் வேடத்தில் பல முறை மேடைகளில் நடித்திருக்கிறார் சிவாஜி.

‘மனோகரா’ நாடகத்தை இரண்டாவது முறையாகத்  திரைப்படமாக எடுக்க ஜுபிடர் பிக்சர்ஸ் முதன்முதலாக திட்டமிட்டபோது அதில் சிவாஜி, கலைஞர் மு.கருணாநிதி, எல்.வி.பிரசாத் உட்பட எவருமே இல்லை. கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடிக்க ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் அந்தப் படத்தைத் தயாரிக்கத்தான் ஜுபிடர் சோமு முதலில் திட்டமிட்டார்.

அப்போது அந்தப் படத்திற்கு வசனம் எழுதுகின்ற பொறுப்பை ஏற்றிருந்தவர் இளங்கோவன். அதன் பிறகு என்ன காரணத்தாலோ அந்தப் படத்திற்கு வசனம் எழுதுகின்ற பொறுப்பை கலைஞர் மு.கருணாநிதியிடம் ஒப்படைத்தார்  ஜுபிடர் சோமு.

அந்த மாற்றம் பல தொடர் மாற்றங்களுக்குக் காரணமாக அமையப் போகியது என்பதை அவர் அப்போது கனவிலும்  எதிர்பார்க்கல்லை.

மனோகரனாக நடிக்க அப்போது திரையுலகில் மிகுந்த செல்வாக்கோடு இருந்த கே.ஆர்.ராமசாமியை அணுகினார் சோமு. அந்தக் காலக்கட்டத்தில் கே.ஆர்.ராமசாமிக்கு  அரசியல் ரீதியாக கலைஞர்  மு.கருணாநிதியோடு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் கலைஞர் வசனம் எழுதுகின்ற ‘மனோகரா’ படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.

மனோகரனின் மகுடத்தை சூட்டிக் கொள்வதற்காக காலம் நிச்சயித்து இருக்கும் கதாநாயகன் சிவாஜிதான் என்பதை அப்போது அறியாத ஜுபிடர் சோமு கே.ஆர்.ராமசாமி நடிக்கவில்லை என்றால் அந்தப் படத்தைத் தயாரிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அப்போது தீவிரமாக நம்பியதால் அவரை சமாதானப்படுத்த பல வழிகளில் முயன்றார்.

“உங்களை விட்டால் மனோகரனாக நடிக்க வேறு யார் இருக்கிறார்கள்..? நீங்கள் இதுவரை படங்களில் நடிக்க என்ன சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறீர்களோ அதைப்போல இரண்டு மடங்கு பணம் வேண்டுமானாலும் தர நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் மறுக்காமல் மனோகரனாக நடிக்க வேண்டும்..” என்றெல்லாம் ஜுபிடர் சோமு மன்றாடியும் கே.ஆர்.ராமசாமி மனோகரனாக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.

ஜுபிடர் சோமுவிற்கு அறிஞர் அண்ணாவோடு மிக நெருக்கமான உறவு உண்டு. அறிஞர் அண்ணா சொன்னால் கே.ஆர்.ராமசாமி அதைத் தட்ட மாட்டார் என்பதை அறிந்திருந்த சோமு அடுத்து அறிஞர் அண்ணாவை சந்திப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார்.

“நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் மட்டும்தான்  கே.ஆர்.ராமசாமி மனோகரனாக  நடிக்க ஒப்புக் கொள்வார். ஆகவே நீங்கள் அவரை அழைத்து சொல்ல வேண்டும்” என்று அறிஞர் அண்ணாவிடம் சோமு சொன்னபோது இரண்டு நிமிடங்கள் மவுனமாக இருந்த அண்ணா “பராசக்தி படம் வருகின்றவரை கொஞ்சம் பொறுத்திருங்களேன். எனக்கென்னவோ சிவாஜி அந்த வேடத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றுகிறது” என்று சோமுவிடம் சொன்னார். 

அண்ணாவின்  பதில் சோமுவிற்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. கே.ஆர்.ராமசாமியை அழைத்து ‘மனோகரா’ படத்தில் நடிக்கும்படி  சொல்வார் என்ற நம்பிக்கையில் அண்ணாவிடம் வந்தால் அவர் சிவாஜியைப் போட்டு படத்தை எடுக்கச் சொல்கிறாரே என்று  மனமுடைந்தாலும் ‘பராசக்தி’ படத்தைத் தவறவிடாமல் முதல் நாளே பார்த்தார் சோமு.

அந்தப் படத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்தபோது இப்படிக்கூட ஒரு நடிகர் வசனங்களை அழுத்தம், திருத்தமாக உச்சரிக்க முடியுமா என்று வியப்பின் உச்சத்துக்கே போனார் அவர்.

‘பராசக்தி’ படத்தில் சிவாஜி நடித்திருந்த நடிப்பும், அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பும் சிவாஜியைத் தவிர வேறு யாராலும் மனோகரனாக நடிக்க முடியாது என்று சோமுவை  முடிவெடுக்க வைத்தன.

அன்று இரவு அறிஞர் அண்ணாவை மீண்டும் சந்தித்த சோமு சென்றபோது “பராசக்தி’ படத்தைப் பார்த்துவிட்டீர்கள் என்பதை உங்களது முகமே சொல்கிறேதே. கணேசன் நடிப்பில் பின்னி விட்டானா..? இனியும் என்ன தயக்கம்? மனோகரனாக கணேசனைத் தவிர வேறு யார் நடித்தாலும் சரியாக வராது” என்று சொன்ன  அறிஞர் அண்ணா  “கணேசன் நம்ம பையன். அவனை நாம் வளர்க்காவிட்டால் வேறு யார் வளர்ப்பார்கள்?” என்று சோமுவைப் பார்த்து கேட்டார்.

அறிஞர் அண்ணா தன்னுடைய மனதிலே சிவாஜிக்கு எந்த அளவிற்கு உயர்வான ஒரு இடத்தைத் தந்திருக்கிறார் என்பதை  சோமு தெரிந்து கொள்வதற்கு அந்த சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அடுத்து மனோகரனாக நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்த சோமு படத்தை இயக்குகின்ற பொறுப்பை எல்.வி.பிரசாத்திடம் ஒப்படைத்தார். சிவாஜி கணேசனின் நடிப்புப்  பசிக்கு ‘மனோகரா’ படம் முழுவதும் பல இடங்களில் கலைஞர் சரியாக தீனி போட்டிருந்தார்.

‘மனோகரா’ படத்தைத் தொடர்ந்து ‘தாயில்லா பிள்ளை’ படத்தில் கலைஞரோடு இணைந்து பணியாற்றிய எல்.வி.பிரசாத் அவரோடு பணியாற்றிய மூன்றாவது படமாக ‘இருவர் உள்ளம்’ படம் அமைந்தது.

திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் வெற்றியை சினிமாவிலேயே ஊறித் திளைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்களால்கூட  கணிக்க முடியாது என்பதற்கு ‘இருவர் உள்ளம்’ படத்தைவிட வேறு ஒரு உதாரணம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்த பிரபல தெலுங்குப் பத்திரிகையாளரான பிரத்யக ஆத்மா அதற்காக ஒரு நல்ல  கதையைத் தேடிக் கொண்டிருந்தபோது  பிரபல தமிழ் நாவலாசிரியையான லஷ்மி எழுதியிருந்த ‘பெண் மனம்’ என்ற நாவலுக்கு  ‘ஹிந்து’ பத்திரிகை எழுதியிருந்த விமர்சனம் அவரது பார்வையில்பட்டது.

காலையிலே ஒரு பெண், மாலையிலே இன்னொரு பெண் என்று மனம் போனபடி பெண்களோடு சுற்றிக் கொண்டிருக்கும்  கதாநாயகன் நேர் பார்வை கொண்ட ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்குகிறான். பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்தப் பெண் அவனை மணந்து கொள்கிறாள். அதற்குப் பிறகு தொடரும் பிரச்னைகளை மையமாக வைத்து அந்த  நாவலை எழுதியிருந்தார் லஷ்மி.

பிரத்யக ஆத்மாவிற்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்ததால் எழுத்தாளர் லஷ்மியிடமிருந்து அந்தக் கதையின் உரிமைகளை வாங்கும்படி தனது தயாரிப்பாளர் சுப்பாராவிடம் அவர் சொன்னார்.

படப்பிடிப்பைத் துவங்குவதற்கு முன்பேயே தன்னுடைய குருவான டி.பிரகாஷ்ராவ், எல்.வி.பிரசாத் ஆகியோரிடம் கதையைச் சொல்லி அவர்களின் கருத்துக்களைத்  தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு படப்பிடிப்பை ஆரம்பிக்க எண்ணிய  பிரத்யக ஆத்மாஅவர்கள் இருவருக்கும் அந்தக் கதையைச் சொன்னார்.

கதையைக் கேட்ட எல்.வி.பிரசாத், டி..பிரகாஷ்ராவ் ஆகிய இருவருக்குமே அந்தக் கதை பிடிக்கவில்லை. ஆகவே வேறு நல்ல கதையைத் தேர்ந் தெடுத்து படமாக்கும்படி பிரத்யக ஆத்மாவிற்கு அவர்கள் இருவரும் அறிவுரை கூறினார்கள்.

தயாரிப்பாளரான சுப்பாராவிற்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்ததால் அந்தக் கதையை கைவிட விரும்பாத அவர் அன்னபூர்ணா பிக்சர்ஸ் அதிபரான மதுசூதனராவிடம் அந்தக் கதையை சொல்லச் சொன்னார். கதையைக்  கேட்ட மதுசூதனராவ் ”இந்தக் கதை நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அதனால் உடனடியாக படத்தை ஆரம்பிக்கும் வேலையைப் பாருங்கள்” என்று அவர்களுக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

ஏ.நாகேஸ்வரராவும், கிருஷ்ண குமாரியும் ஜோடியாக நடிக்க “பார்யா பார்த்தலு” என்ற பெயரில் என்ற பெயரில் உருவான அந்தத் தெலுங்குப்  படம் நூறு நாட்களைக் கடந்து ஓடி மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமின்றி சிறந்த தெலுங்குப் படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.

அந்தக்  கதையைப் படமாக்க  வேண்டாம். நிச்சயமாக அது வெற்றி பெறாது என்று  சொன்ன எல்.வி.பிரசாத் அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் மட்டுமின்றி  இந்தியிலும் அந்தக் கதையை  படமாக்கும் உரிமையை வாங்கினார்.

அந்தக் கதையை ‘இருவர் உள்ளம்’ என்ற பெயரில் தமிழில் எல்.வி.பிரசாத் இயக்க அந்தக் கதைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த இன்னொரு இயக்குனரான டி.பிரகாஷ்ராவ் எல்.வி.பிரசாத்தின்  தயாரிப்பில்  ராஜேந்திரகுமாரும், ஜமுனாவும் ஜோடியாக நடிக்க ‘ஹம்ராஹி’ என்ற பெயரில் அந்தப் படத்தை  இந்தியில் இயக்கினார். தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் அந்தப் படம் வெள்ளி விழாப் படமாக அமைந்தது.

தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஏற்றிருந்த வேடத்திலே சிவாஜியும், கிருஷ்ணகுமாரி ஏற்றிருந்த வேடத்தில் சரோஜாதேவியும் நடித்த அந்தப் படத்தில் எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராமச்சந்திரன், முத்து லட்சுமி, பாலாஜி என்று பல பிரபலமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

முதலில் கேட்டபோது அந்தக் கதை அவருக்குப் பிடிக்காமல் போனதாலோ என்னவோ சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக சரோஜதேவி நடித்திருந்த ‘இருவர் உள்ளம்’ படத்தை  இயக்கி முடித்த பிறகும் அந்தப் படத்தின் வெற்றியில் எல்.வி.பிரசாத்துக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.

படம்  முடிந்து வெளியீட்டுக்குத் தயாரானவுடன் கலைஞருக்கு  ரேவதி ஸ்டுடியோவில் படத்தைப் போட்டுக் காட்டிய எல்.வி.பிரசாத் “எனக்கு படம் நிறைவில்லாமல் இருப்பது போல தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டார். “நிச்சயமாக இந்தப் படம் நூறு நாட்கள் ஓடும்” என்று அவருக்கு பதில்  அளித்தார் கலைஞர்.

“உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?” என்று கலைஞரைக் கேட்ட எல்.வி.பிரசாத் “நீங்கள் சொல்வது போல இந்தப் படம் நூறு நாட்களுக்கு மேல் ஒடி வெற்றிப் படமாக அமைந்தால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் தருகிறேன்” என்றார். கலைஞர் கருணாநிதி கணித்தபடியே ‘இருவர் உள்ளம்’ மிகப்  பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

‘இருவர் உள்ளம்’ படம் நூறு நாட்களைத் தொட்டதும் முதல் வேலையாக கலைஞரின் இல்லத்துக்குச்  சென்ற எல்.வி.பிரசாத் தான் வாக்களித்திருந்தபடி  பத்தாயிரம் ரூபாயை அவரிடம் வழங்கினார்.

அந்தப் படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களை எல்.வி.பிரசாத் இந்தியில் இயக்கினார் என்றாலும்  கலைஞர் மு.கருணாநிதியோடு இணைந்து பணியாற்றிய ‘இருவர் உள்ளம்’ படமே  எல்.வி.பிரசாத்  இயக்கிய கடைசி தமிழ்ப் படமாக அமைந்தது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News