Friday, April 12, 2024

சினிமா வரலாறு – 69 – ‘கூண்டுக்கிளி’ படத்தில் நடிக்க ஒரு ரூபாயை முன் பணமாக வாங்கிய எம்.ஜி.ஆர்.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறு வயது முதலே நண்பர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய  இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’. தமிழ்த் திரையுலகின் முதல் கவர்ச்சிக் கன்னி என்று பெயரெடுத்த டி.ஆர்.ராஜகுமாரியின்  சகோதரரான டி.ஆர்.ராமண்ணாவின்  தீவிரமான  முயற்சியால்  தமிழ்ப் பட உலகிற்கு  கிடைத்த அபூர்வமான படைப்பு அது.

கதாசிரியர் விந்தன் எழுதிய ‘கூண்டுக் கிளி’ என்ற புரட்சிகரமான கதையைப் படமாக்க திட்டமிட்ட ராமண்ணா அப்போது புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த எம்ஜிஆர்,, சிவாஜி ஆகிய இருவரையும் அந்தக் கதையில் நடிக்க வைக்க விரும்பினார்.

சிவாஜியுடன் இணைந்து நடிக்க எம்ஜிஆரின் ஒப்புதலை முதலில் பெற முடிவெடுத்த அவர் எம்.ஜி.ஆருக்கு அப்போது மிகவும் நெருக்கமாக இருந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு எம்ஜி.ஆரை சந்திக்கச்  சென்றார்.

பொதுவான நலம் விசாரிப்புகளைத் தொடர்ந்து “கூண்டுக் கிளி” படத்தைப் பற்றி எம்.ஜி. ஆரிடம் விரிவாகக் கூறிய ராமண்ணா “படத்தில் சிவாஜியுடன் இணைந்து நீங்கள்  நடிக்க வேண்டும்” என்று அவரிடம் கூறியதும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார் எம்.ஜி.ஆர். பின்னர் “எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” என்று அவர் சொன்னதும் ராமண்ணா மிகுந்த ஏமாற்றமடைந்தார்.

பிரபலமான நடிகர்கள் நடித்தால் மட்டுமே தான் சொல்ல எண்ணியுள்ள கதை மக்களிடம் போய்ச் சேரும் என்று எண்ணிய ராமண்ணா எம்.ஜி.ஆர்., அப்படி ஒரு பதிலைக் கூறியதால் நம்பிக்கையை இழந்தது மட்டுமல்லாமல் அந்தப் படத்தை எடுக்கும் எண்ணத்தையே கைவிட முடிவு செய்தார். அப்போது அவரது அலுவலகத்தில் இருந்த பலரும் அவரது முடிவுக்கு பலமான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

“எம்.ஜி.ஆர்.நடிக்கவில்லை என்றால் என்ன? வேறு நடிகர்களே இல்லையா?” என்று சிலரும் “சிவாஜியை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து  அந்தக் கதையைப் படமாக்கலாம்” என்று இன்னும் சிலரும் மாறி, மாறி தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சொன்ன எதையும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் அப்போது ராமண்ணா இல்லை.

அவரது முதல் படமான ‘வாழப் பிறந்தவள்” வெற்றிப் படமாக அமையாததால் இரண்டு பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்து “கூண்டுக் கிளி” படத்தில் வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடலாம் என்று எண்ணிய அவர், தனது எண்ணத்திற்கு எதிராக எல்லா விஷயங்களும் நடக்கின்றனவே என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக அவர்களது அலுவலகத்துக்குள் நுழைந்தார் எம்.ஜி.ஆர்.

நேராக ராமண்ணாவின் அறைக்குச்  சென்ற  அவர் “அண்ணே ஒரு ரூபாய் கொடுங்கள்” என்று  கேட்டவுடன் ஆயிரம் ரூபாயை எடுத்து அவரிடம் நீட்டினார் ராமண்ணா. “நான் உங்களிடம் வெறும் ஒரு ரூபாய்தானே  கேட்டேன்” என்று சொல்லி ஒற்றை ரூபாயை அவரிடமிருந்து வாங்கிக் கொண்ட எம்ஜிஆர்., “நான் உங்கள் படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டேன். என்னை எப்படி எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களோ அப்படி நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதற்குத்தான் இந்த ஒரு ரூபாய் அட்வான்ஸ்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

மின்னல்போல எம்.ஜி.ஆர். அப்படி வந்துவிட்டுச்  சென்றதும் அந்த அலுவலகத்தில் இருந்த எல்லோரும் விவரிக்க முடியாத  ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள்.

ராமண்ணாவின் கம்பெனி நிர்வாகி பெயர் விஜயரங்கம். ஆனால் எல்லோரும் அவரை மாப்பிள்ளை என்றுதான் செல்லமாகக்  கூப்பிடுவார்கள். ‘கூண்டுக் கிளி’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். தனது ஒப்புதலைத் தந்துவிட்டு புயல் வேகத்தில் சென்றதும் மாப்பிள்ளையை அழைத்த ராமண்ணா சிவாஜியைப் பார்த்துப் பேசிவிட்டு வருமாறு அவரிடம் சொன்னார்.

“அவருக்கு என்ன சம்பளம் கொடுப்பதாக முடிவு பண்ணி இருக்கீங்கன்னு எனக்கு  சொன்னால்  ஒரேயடியாக அவருடைய சம்பளத்தையும் பேசிவிட்டு வந்து விடுகிறேன்” என்றார் மாப்பிள்ளை.

“முதலில் அவர் இந்தப் படத்தில் நடிக்கத்  தயாராக இருக்கிறாரா?” என்பதைத் தெரிஞ்சிக்கிட்டு வாங்க. சம்பளத்தை எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று ராமண்ணா சொன்ன பதிலை மாப்பிள்ளை அவ்வளவாக ரசிக்கவில்லை.

“நடிக்கிறாரான்னு தெரிஞ்சிக்க ஒரு தடவை, சம்பளத்தைப் பேசறதுக்கு ஒரு தடவைன்னு எதுக்கு இரண்டு தடவை போகணும்?” என்று அவர் மீண்டும் கேட்டவுடன் “சிவாஜி  இப்போது என்ன சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்று எனக்கே தெரியவில்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி அவர் சம்பளத்தைப் பற்றி இப்போது உங்களுக்குச்  சொல்ல முடியும்?” என்று ராமண்ணா மாப்பிள்ளைக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவரது  அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் சிவாஜி கணேசன்.

அவர் உள்ளே வந்தவுடன் அடுத்த இரண்டு நிமிடத்திற்கு அந்த அறைக்குள் இருந்த யாரிடம் இருந்தும பேச்சே எழவில்லை. சிவாஜி திடீரென்று அலுவலகத்துக்கு வந்ததால் ஏற்பட்ட ஆனந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்ட ராமண்ணா “நாங்களே உங்களைப் பார்க்க வருவதாக இருந்தோம், நான் அடுத்தபடியாக டைரக்ட் பண்ணப் போற “கூண்டுக் கிளி”படத்தில் இரண்டு முக்கியமான பாத்திரங்கள்” என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஆனால், சிவாஜி அவரை முழுவதும் சொல்ல அனுமதிக்கவில்லை. “நீங்க அடுத்து எடுக்கப் போற படத்தில் எம்.ஜி.ஆர் அண்ணன் நடிக்கப் போகிறார் என்பது உட்பட  எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். நாங்க இரண்டு பெரும் நடிச்சி ஒரு படம் வெற்றியடைந்தால் அது இன்டஸ்ட்ரிக்கு நல்லதுதானே…” என்றார்.

அவர் அப்படிச் சொன்னவுடன் அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய தயாரிப்பு நிர்வாகியான மாப்பிள்ளை “ஷூட்டிங்கை எப்போதிலிருந்து வைத்துக் கொள்ளளலாம் என்பதையும் சொல்லிட்டீங்கன்னா நன்றாக இருக்கும்” என்று சொல்ல “உங்களுடைய கால்ஷீட் தேதிகளை எழுதிக் கொடுங்கள். இப்போதே எழுதி கையெழுத்துப் போட்டு விடுகிறேன்..” என்றார் சிவாஜி.

அடுத்து “சம்பள விஷயம்…” என்று  மாப்பிள்ளை ஆரம்பித்தவுடன் “சம்பளத்தைப் பற்றி எல்லாம் எதுவும் பேசாதே. கொடுக்கிறதை வாங்கிக்க. அவங்க கொடுக்கலேன்னாலும்  கேட்காதே” என்று எங்க அம்மா சொல்லிட்டாங்க” என்று  சொன்ன சிவாஜி “ஆனா எங்கம்மா அட்வான்ஸ் மட்டும்  வாங்கிக்க சொன்னாங்க. ராமண்ணா அதிர்ஷ்டக்காரண்டா. அவன் கை நிறைய காசா வாங்கிட்டு வான்னு அம்மா சொன்னாங்க” என்றவுடன் டிராயரைத் திறந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து சிவாஜியிடம் நீட்டினார் ராமண்ணா.

“எனக்கு இந்த நோட்டெல்லாம் வேண்டாம்.. கை நிறைய காசுதான் வேண்டும்” என்று சிவாஜி சொன்னவுடன் நோட்டுக்களை வெள்ளிக் காசுகளாக மாற்றிக் கொண்டு வர  பல கார்கள் பறந்தன. சிறிது நேரத்தில் தன் கை நிறைய வெள்ளிக் காசுகளை வாங்கிக் கொண்டு அந்த அலுவலகத்திலிருந்து கிளம்பினார் சிவாஜி.

ராமண்ணா அலுவலத்திலிருந்த எவராலும் அங்கே  என்ன நடக்கிறது என்றே  புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு கதாநாயகன் ஒரு ரூபாய்  முன் பணம் போதும் என்கிறார். இன்னொரு முன்னணிக் கதாநாயகனோ கை நிறைய வெள்ளிக் காசுகள் மட்டும் முன் பணமாக தந்தால் போதும். மொத்த கால்ஷீட்டையும் எழுதித் தந்து விடுகிறேன்  என்கிறாரே.. இது என்ன அதிசயம்  என்று அவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கி இருந்தபோது டெலிபோன் மணி அடித்தது. போனில் பேசியவர் ராமண்ணாவின் சகோதரியான டி.ஆர்.ராஜகுமாரி.

“என்ன ராமு, சிவாஜி வந்தாரா?” என்று அவர் கேட்டவுடன் ராமண்ணாவினால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை. “சிவாஜி வந்துவிட்டுப் போன விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று தனது சகோதரியைக் கேட்டார் அவர்.

“சிவாஜியை  ஸ்டுடியோவில் பார்த்தபோது தம்பி புதிதாக ஒரு படம் எடுக்கப் போகிறான். அது விஷயமாக உங்களைப் பார்க்கணும்னு சொன்னான்” என்று நான்  சொன்னேன். அப்படி நான் சொன்னவுடன், ”நானே அவரைப் போய் பார்க்கிறேன்” என்று அவர் சொன்னார். “நீங்க எதுக்கு வீணாக கஷ்டப்படுகிறீர்கள்?” என்று நான் கேட்டபோது “அவர் என்னை வந்து பார்த்தால் என்ன? நான் அவரைப் போய் பார்த்தால் என்ன? நாமெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்கள்தானே” என்று என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அவர் கிளம்பினார்..” என்றார் ராஜகுமாரி.

இரு பெரும் சிகரங்களின் இணையில்லாத ஒத்துழைப்புடன் “கூண்டுக் கிளி” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு நடைபெற்றபோது எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ஷாட்டுகள் எடுக்கப்படும்போதெல்லாம் செட்டை விட்டுக் கிளம்பிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சிவாஜி.  அதே போன்று தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்த  அடுத்த நிமிடமே அவர் செட்டை விட்டு கிளம்பி விடுவார்.

சிவாஜி கணேசனைப் பொறுத்தவரை காலையில் செட்டுக்கு வந்துவிட்டார் என்றால் அடுத்து படப்பிடிப்பு இடைவேளையின்போதுதான் செட்டைவிட்டு அவர் கிளம்புவார் என்பதை அறிந்திருந்த ராமண்ணாவிற்கு சிவாஜி அப்படி அடிக்கடி செட்டை  விட்டுக் கிளம்பிப் போனது மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது.

ராமண்ணா மட்டுமின்றி அந்த செட்டில் பணியாற்றிய பலரும் சிவாஜி ஏன் அப்படி  நடந்து கொள்கிறார் என்பது  பற்றி பேசத் தொடங்கியவுடன் அதைப் பற்றி சிவாஜியிடமே ஒரு நாள் நேரடியாகக்  கேட்டார் ராமண்ணா.  

படப்பிடிப்பு தளத்தை விட்டு அடிக்கடி சிவாஜி வெளியே சென்று விடுவதற்கான காரணத்தை ராமண்ணா கேட்டவுடன் சிவாஜி சொன்ன பதில்  எம்.ஜி.ஆர்., மீது சிவாஜி எந்த அளவு மரியாதை வைத்திருந்தார்  என்பதை விளக்குவதாக அமைந்தது.

“எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் உண்டுன்னு உங்களுக்குத் தெரியும். அண்ணன் எதிரிலே நான் எப்படி சிகரெட் பிடிக்க முடியும்? அதனால்தான் படப்பிடிப்பு இடைவேளைகளில் வெளியே சென்று விடுகிறேன்” என்று ராமண்ணாவிற்கு பதில் சொன்னார் சிவாஜி.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் படப்பிடிப்பின்போது “நாம் இருவரும் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம்”  என்று ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் திடீரென்று ஒரு நாள் முடிவெடுத்தது மாதிரி, “இந்த ‘கூண்டுக் கிளி’ படத்திற்குப் பின்னால் இனி நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம்” என்று எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அப்போது முடிவெடுத்தனர்.

“ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா?  நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்திருந்தால் எங்கள் இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருந்திருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால்தான்  அவருக்கு வேறு ரசிகர்கள்; எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்” என்று அப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணத்தை ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார் சிவாஜி.

“என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லாமே அரசியலைப் பற்றிதான் இருக்கும். அதை வைத்துக் கொண்டு நாங்கள் விரோதிகள் என்றுகூட  பலர் பேசத் தொடங்கினார்கள். ஆனால் அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்பட்டதில்லை” என்று தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி.

மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இணைந்து நடித்த ஒரே படமான “கூண்டுக்கிளி” படம் அதன் முதல் வெளியீட்டின்போது மிகப் பெரிய வெற்றியைக் குவிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் திரையிடப்பட்ட போதெல்லாம் மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது.

படத்தின் வெற்றி, தோல்வி என்பது எப்ப்படி அமைந்தபோதிலும் தமிழ்த் திரை உலகின் இரண்டு முடிசூடா மன்னர்கள் இணைந்து நடித்த ஒரே படம் என்ற அளவில் ‘கூண்டுக் கிளி’ மிக முக்கியமான ஒரு தமிழ்ப் படம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News