Friday, April 12, 2024

சினிமா வரலாறு-66 – பெருந்தலைவர் காமராஜரோடு சோவிற்கு ஏற்பட்ட மோதல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சோவின் நாடகங்களில் அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்த நாடகமாக ‘சம்பவாமி யுகே யுகே’ என்ற நாடகம் அமைந்தது.

“நாடெங்கும் ஊழல் மலிந்திருக்கிறது. அந்த ஆண்டவனே அவதாரம் எடுத்து வந்தாலும் இந்த ஊழலை மட்டும் ஒழிக்கவே முடியாது” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த ‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம்.

அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தார். இந்த ‘சம்பவாமி யுகே யுகே’ நாடகத்திற்குத் தமிழக அரசு தடை விதித்தது. அந்தத் தடையை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார் சோ. அவருடைய ரிட் மனு மிகவும் வலுவாக இருந்ததால் வேறு வழியில்லாமல் கொஞ்சம் இறங்கி வந்த அரசு சில வசனங்களை நீக்கினால் நாடகத்திற்கு அனுமதி தருவதாக கூறியது.

தன்னுடைய ரிட் மனு எவ்வளவு வலுவானது என்பதை சோ நன்றாக உணர்ந்திருந்த காரணத்தால் “நாடக வசனத்தில் ஒரு வரியைக்கூட மாற்ற முடியாது…” என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார். நீதிமன்றத்தில் வழக்கு நிச்சயமாக தோற்றுவிடும் என்பதை உணர்ந்த அரசு, வேறு வழியின்றி அந்த நாடகத்துக்கு அனுமதியை வழங்கியது.

அரசு தடை விதித்த செய்தி பத்திரிகைகளில் தொடர்ந்து பரபரப்பாக வெளியானதால், அந்த நாடகத்திற்கு அது நல்ல விளம்பரமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அந்த நாடகம் எங்கு நடந்தாலும், நாடகத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

‘பால மந்திர்’ என்ற அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு முறை ‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடைபெற்றபோது அந்த நாடகத்திற்குத் தலைமை தாங்க பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தார்.

அப்போது அவர் மத்திய, மாநில அரசாங்கத்தில் எந்தப் பதவியிலும் இல்லை என்றாலும் இந்திய அரசியலில் அவர் மிகப் பெரிய சக்தியாக இருந்தார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து வேறு ஒரு நிகழ்ச்சிக்கு காமராஜர் அவசரமாக போக வேண்டி இருந்ததால், அவரது பேச்சை நாடகத்தின் இடைவேளையில் வைத்துக் கொள்ள விழாக் குழுவினர் முடிவு செய்தனர்.

அந்த விழாவில் கலந்து கொண்ட ஜெமினி கணேசன் பேசும்போது “இந்த நாடகம் மிகவும் சிறப்பான ஒரு நாடகம் என்றும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் தவறாமல் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும்” என்றும் தனது பேச்சின் நடுவே குறிப்பிட்டார்.

ஜெமினி கணேசன் நாடகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது காமராஜருக்கு பக்கத்திலே சோவும், பாலமந்திர் நிர்வாகி ஒருவரும் அமர்ந்திருந்தனர். ஜெமினி கணேசன் நாடகத்தைப் பற்றி புகழ்ந்து பேசியவுடன் “ஜெமினி இப்படி சொல்கின்ற அளவுக்கு உங்களுடைய நாடகத்தில் அப்படி என்ன பண்ணியிருக்கீங்க?” என்று சோவிடம் கேட்டார் காமராஜர்.

ஜோதிடக்காரர்கள் எல்லோரும் நாக்கிலே சனி என்று சொல்வார்களே… அப்படி அந்த சனி பகவான் தன்னுடைய நாக்கிலே அமர்ந்திருப்பதை அறியாத சோ, “நாடகத்தைவிட இந்த நாடகத்திற்கு வந்த பிரச்னைகள்தான் பெரிது. அரசாங்கம் இந்த நாடகத்திற்கு அனுமதி தர மறுத்ததால்தான் இந்த நாடகத்திற்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது…” என்று சொன்னார்.

“ஏன் அனுமதி கொடுக்க மறுத்தாங்க?” என்று பெருந்தலைவர் கேட்டபோது “அதை அரசாங்கத்திடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று சோ பதில் சொல்ல “நீங்க எதாவது அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியிருப்பீங்க” என்றார் அவர்.

“அப்படி நான் அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியிருந்தா அதே நாடகத்துக்கு அப்புறம் ஏன் அனுமதி கொடுத்தாங்க” என்று சோ பதில் கேள்வி கேட்டவுடன் பெருந்தலைவர் லேசான கோபத்துக்கு ஆளானார்.

“அனுமதி கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நாடகம் போடலாம்னு அர்த்தமா? கார் ஓட்ட லைசன்ஸ் கொடுக்கறாங்க. அதுக்காக லைசன்ஸ் இருக்குதேன்னு ஆள் மீது காரை மோதலாமா” என்று காமராஜர் கேட்கின்றவரை அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் மெல்லிய குரலில் அவர்களுக்குள்ளாகவே இருந்தது. இன்னொரு பக்கம் ஜெமினி கணேசனும் மைக்கில் பேசியபடி இருந்தார்.

அடுத்து அந்த மேடையிலே எழுந்து நின்ற சோ ”கார் ஓட்ட லைசன்ஸ் இருந்தா டிராபிக் விதிப்படி நான் காரை ஒட்டுகின்றவரை என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதே மாதிரிதான் இந்த டிராமாவும். எந்த ஸ்கிரிப்டுக்கு அனுமதி கொடுத்திருக்காங்களோ அந்த ஸ்கிரிட்படி நான் நாடக்த்தைப் போடுகிறவரைக்கும் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று சாமி வந்தவர் போல உரத்த குரலில் பேச அவர் பேசியதைக் கேட்ட மொத்த அரங்கமும் நிசப்தத்தில் ஆழ்ந்தது.

மைக்கில் பேசிக் கொண்டிருந்த ஜெமினி கணேசன் அதிர்ச்சியில் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகும் அங்கே இருக்க விரும்பாத பெருந்தலைவர் மேடையை விட்டு கீழே இறங்கிச் வெளியே செல்ல பாலமந்திர் நிர்வாகிகள் அவரைப் பின் தொடர்ந்து ஓடினார்கள்.

அதற்குள் அங்கே ஒடி வந்த ஜெமினி கணேசன் சோவின் கையைப் பிடித்துக் கொண்டு “என்ன இப்படி மடத்தனமாக நடந்து கொண்டுவிட்டாய்..? அவரிடம் மன்னிப்பு கேள் வா” என்று கோபத்தோடு அவரை இழுத்தார். ஆனால் சோ அவர் இருந்த இடத்தை விட்டு ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. அதற்குள் அவர் அருகே வந்த பால மந்திர் நிர்வாகிகள் காமராஜர் காரில் ஏறுவதற்கு முன்னாலே அவரிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி மன்றாடினார்கள். ஆனால் சோ அசரவில்லை.

நாடகம் ஒரு வழியாக நடந்து முடிந்ததும் நாடகக் குழுவில் இருந்தவர்கள் அனைவரும் ஒருவர்விடாமல் சரமாரியாக சோவை திட்டித் தீர்த்தனர். ஆனால் அப்போதும் சோ தன்னுடைய தவறை உணரவில்லை.

“அவ்வளவு பெரிய தலைவரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டோமே என்ற எண்ணமே அன்று என் மனதுக்குள் எழவில்லை. அசராமல் பதில் சொன்ன திருப்திதான் எனக்குள் இருந்தது. அந்த அணுகுமுறையால் ஒரு பயனும் கிடையாது என்பதை நான் உணர்ந்து கொள்ள எனக்குப் பல வருடங்கள் பிடித்தன” என்று பின்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சோ.

அந்தக் காலக்கட்டத்தில் டி.டி.கே. நிறுவனத்தில் சோ பணியாற்றிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அவர் அலுவலகத்துக்குப் போன அடுத்த நிமிடம் அவரை அழைத்த டி.டி.கே.வாசு ”என்னய்யா காமராஜர்கிட்ட மரியாதை இல்லாம நடந்துகிட்டியாமே. என்னுடன் காரில் ஏறு. அவருடைய வீட்டுக்குப் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்துவிடலாம்…” என்றார்.

அந்தக் காலக்கட்டத்தில் செய்த தவறை ஒப்புக் கொள்கின்ற தைரியம் சோவிடம் இல்லாமல் இருந்த காரணத்தால் சிறிது நாட்களுக்கு ஆபீஸ் பக்கம் போகாமல் வீட்டிலேயே இருந்துவிடலாம் என்ற முடிவுடன் வீட்டுக்கு வந்தார் சோ. அலுவலகத்தைவிட மிகக் கடுமையான எதிர்ப்பை தன்னுடைய வீட்டிலே சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை அவர் அப்போது எதிர்பார்க்கவில்லை.

வீட்டு வாசலில் அவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சோவின் தம்பியான அம்பி ”அப்படியே எங்காவது ஓடிப் போயிடு. அதுதான் உனக்கு நல்லது. நீ வந்தால் உன்னை உதைப்பதற்காக உள்ளே சார் காத்துக் கொண்டிருக்கிறார்” என்றார். சோவின் வீட்டில் அவர்கள் எல்லோரும் அவர்களது தந்தையை “சார்” என்றுதான் கூப்பிடுவது வழக்கம்.

சோவின் தந்தை ஒரு தீவிர காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அப்படிப்பட்ட மாபெரும் தலைவரிடம் சோ மரியாதைக் குறைவாக நடந்து கொண்டுவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து சோ மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார் அவர்.

ஆகவே ஆபீசுக்கும் போக முடியாமல் வீட்டுக்குள்ளும் நுழைய முடியாமல் நண்பர்கள் வீடு, நாடக மேடை என்று சில நாட்கள் சுற்றித் திரிந்தார் சோ.

இதற்கிடையில் காமராஜரிடம் சோ பேசிய பேச்சு, சோவின் அலுவலகத்தில் மிகப் பெரிய பிரச்னையாகிவிட்டது என்பதை அறிந்த பெருந்தலைவர் காமராஜர் டி.டி.கே.விடம் “அந்தப் பையன் கொஞ்சம் அதிகப் பிரசங்கியாக இருக்கிறான். அவ்வளவுதான். அன்று நடந்த நிகழ்ச்சியை நான் ஒண்ணும் தப்பா எடுத்துக் கொள்ளவில்லை“ என்று பெருந்தன்மையாக சொல்லிவிடவே பிரச்னை முடிவுக்கு வந்து, சோ மீண்டும் ஆபீஸ் செல்லத் தொடங்கினார்.

அந்த நிகழ்ச்சி நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிகையாளர் சாவியின் வீட்டில் நடந்த ஒரு விருந்தில் பெருந்தலைவரை சந்தித்தார் சோ.

சாவி அவரிடம் சோவை அறிமுகம் செய்து வைத்தபோது “இவரை நல்லா தெரியுமே. மிகப் பெரிய அதிகப்பிரசங்கியாச்சே..?” என்ற பெருந்தலைவர் காமராஜர் சோவைப் பார்த்து “அந்த அதிகப்பிரசங்கித்தனம் இன்னும் அப்படியே இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்குப் பிறகு “அதை விட்டுவிட வேண்டாம்.. அது நல்லதுதான்” என்றார் அவர்.

“அவருடைய பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது. சாவியின் வீட்டில் நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் எனக்கு அளித்த மரியாதையும், உரிமையும் என்னுடைய திறமைக்கும், அனுபவத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லாத அளவுக்கு அமைந்தது…” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் சோ.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News