Friday, October 22, 2021
Home சினிமா வரலாறு சினிமா வரலாறு-59 - எஸ்.வி.ரங்காராவை நேருக்கு நேராக விமர்சித்த எம்.ஆர்.ராதா

சினிமா வரலாறு-59 – எஸ்.வி.ரங்காராவை நேருக்கு நேராக விமர்சித்த எம்.ஆர்.ராதா

தினமும் படப்பிடிப்பிற்கு கிளம்பும்போது  அன்றைய  படப்பிடிப்பில் என்னுடன் யார் யார்  நடிக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புவது என்னுடைய பழக்கம். படப்பிடிப்பில் எஸ்.வி.ரங்காராவோ, எம்.ஆர்.ராதாவோ இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நான் மிகுந்த  எச்சரிக்கையோடு போவேன். ஏனென்றால்   கொஞ்சம் ஏமாந்தாலும் அவர்கள் இருவரும் என்னைத் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்” என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அவர் அப்படிப்  பாராட்டியுள்ள மாபெரும் திறமைசாலிகளான  எஸ்.வி.ரங்காராவிற்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் இடையே ஏவி.எம். தயாரிப்பில் உருவான ‘நானும் ஒரு பெண்’ படத்தின் படப்பிடிப்பின்போது மிகப் பெரிய மோதல் உருவானது.

சிறந்த குணச்சித்திர நடிகரான எஸ்.வி.ரங்காராவிடம் இருந்த மிகப் பெரிய பலவீனம் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வராதது. என்ன காரணத்தாலோ அந்தப்  பழக்கத்தை அவரால் மாற்றிக் கொள்ளவே  முடியவில்லை.

‘நானும் ஒரு பெண்’ படத்திலே கதாநாயகன் எஸ்.எஸ்,ராஜேந்திரனுக்குத் தந்தையாக நடித்தார் எஸ்.வி.ரங்காராவ். அந்தப் படத்தின் உச்சக்கட்டக் காட்சி படமாக்கப்பட்டபோது அந்தக் காட்சியில் பங்கு பெற வேண்டிய அனைத்து நட்சத்திரங்களும் வந்த பிறகும் எஸ்.வி.ரங்காராவ் வரவில்லை.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே செட்டிற்கு வந்துவிட்ட ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா படப்பிடிப்பு தொடங்காததால் செட்டிற்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினார்.  அவர் பொறுமையை இழக்கின்ற நிலைக்குப் போனபோது செட்டிற்குள் நுழைந்தார் எஸ்.வி.ரங்காராவ்.

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவதை எப்போதுமே தனது வழக்கமாக வைத்துக் கொள்ளாத எம்.ஆர்.ராதா ரங்காராவ் செட்டிற்குள் நுழைந்தவுடன் “கெட்டவனா நடிக்கிறவன் எல்லாம் படப்பிடிப்புக்கு ஒழுங்கா நேரத்தில வர்றான். நல்லவனா நடிக்கிறவன் ஒரு ஒழுங்கு இல்லாம என்ன பாடுபடுத்தறான் பாரு” என்று ரங்காராவின் காதில் விழுகின்ற மாதிரி உரக்க தன்னுடைய கருத்தைச சொன்னார்.

அப்படி அவர் வெளிப்படையாக தனது கருத்தைச் சொன்னதால் ரங்காராவ் கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவாரோ என்று படக் குழுவினர் அனைவரும் பயந்தனர். ஆனால் அதற்கு மாறாக ராதா  அப்படிப் பேசியதால் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய  நன்மை விளைந்தது. காலையில் படப்படிப்புக்கு வந்த ரங்காராவ் அந்தக் காட்சியை மொத்தமாக நடித்து முடித்துவிட்டுத்தான்  அன்றிரவு  வீட்டுக்குப் போனாராம்.

படப்பிடிப்பிற்கு தாமதமாக வருகின்ற பழக்கம் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்துள்ளார் எஸ்.வி.ரங்கராவ். அப்படி அவர் இழந்த ஒரு வாய்ப்புதான் ஸ்ரீதரின் ‘கலைக் கோவில்’ படத்தில் முத்துராமனின் தந்தையாக நடிக்கின்ற வாய்ப்பு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கலை இயக்குநர் கங்கா ஆகிய இருவரும்  இணைந்து தயாரித்த படம் ‘கலைக் கோவில்.’ அந்தப் படத்தின் கதாநாயகனான முத்துராமனின் தந்தையின்  பாத்திரத்தில் இசைக் கலைஞராக நடிக்க முதலில் எஸ்.வி.ரங்காராவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார் ஸ்ரீதர்.

பல திரைப்படங்களில் ரங்காராவோடு, ஸ்ரீதர் பணியாற்றி இருந்ததால் அவரைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவர் ‘கலைக் கோவில்’ படத்துக்கு ரங்காராவை  ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு  அவரைத் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து “இந்தப் படத்தை மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் தினமும் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி வர முடியாது என்றால் இப்போதே சொல்லி விடுங்கள். நான் அதற்கேற்ப முடிவு செய்து கொள்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

“காலை ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் எட்டே முக்காலுக்கே வந்து விடுகிறேன்.போதுமா?”என்று ஸ்ரீதரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் எஸ்.வி.ரங்காராவ்.

“கலைக் கோவில்” படத்துக்கான பூஜை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எல்லோரும் காலை ஆறு மணிக்கே பூஜைக்கு வந்து விட்டார்கள். ஆனால் ரங்காராவ் மட்டும் வரவில்லை. பூஜைக்கு நாம் எதற்கு என்று ரங்காராவ் நினைத்திருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்ட ஸ்ரீதர் பூஜையை ஆரம்பிக்கச்  சொன்னார். பூஜை நடந்து முடிந்தது.

அடுத்து படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும். அதற்கு ரங்காராவ் வேண்டும் என்பதால்   எல்லோரும் அவரது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். எட்டு மணிவரை அவர் வராததால் அவரது வீட்டுக்கு போன் செய்யச் சொன்னார் ஸ்ரீதர்.

“அவர் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டாரே” என்று ரங்காராவ் வீட்டில் இருந்தவர்கள் பதில் சொன்னார்கள்.

“முதலிலேயே தெளிவாக சொல்லிவிட்டுத்தானே அவரை ஒப்பந்தம் செய்தோம். அதற்குப் பிறகும் இப்படி செய்கிறாரே” என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கலை இயக்குநர் கங்காவிடம் சலிப்போடு கூறிய ஸ்ரீதர், “இனிமேலும் அவருக்காகக் காத்திருக்க முடியாது. எஸ்.வி. சுப்பையா எங்கிருக்கிறார் என்று விசாரியுங்கள். அவருக்கு இன்று படப்பிடிப்பு எதுவும் இல்லையென்றால் அவரை ஸ்டுடியோவிற்கு வரச் சொல்லுங்கள்” என்றார்.

எஸ்.வி.சுப்பையாவிற்கு அன்று படப்பிடிப்பு இல்லை என்பதால் ஸ்ரீதர் அழைத்ததும் ஸ்டுடியோவிற்கு வந்தார் அவர். அந்த குறிப்பட்ட பாத்திரத்திற்கு  தாடி வைத்திருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதர் முடிவு செய்திருந்தார். சுப்பையா வந்ததும் அவரிடம் கதையைப் பற்றி கூறிவிட்டு அந்த பாத்திரத்திற்கு தாடியை  ஒட்டிக் கொண்டு அவர் நடிக்க  வேண்டும் என்று ஸ்ரீதர் சொன்னவுடன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார் சுப்பையா.

சுப்பையா தாடி ஒட்டி நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்ததால்  “என்னை மன்னிச்சிக்கங்க. என்னால் தாடி எல்லாம் ஒட்டிக் கொண்டு நடிக்க முடியாது. அதனால் இந்தப் பாத்திரத்துக்கு வேறு யாரையாவது போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

அதன் பின்னர் அந்தப் பாத்திரத்திற்காக தான் வரைந்து வைத்திருக்கும் ஸ்கெட்ச், அவரது பாத்திரப் படைப்பு, அதற்கான வசனங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி அந்தப் படத்தில்  நடிக்க அவரை சம்மதிக்க வைத்தார் ஸ்ரீதர்.

சுப்பையாவை வைத்து படப்பிடிப்பு தொடங்கிய அரை மணி நேரத்தில் தன்னுடைய காரில் இருந்து கம்பீரமாக இறங்கி வந்தார் எஸ்.வி. ரங்காராவ்.

அவருடைய பாத்திரத்தில் சுப்பையா உள்ளே நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை யார் அவரிடம் சொல்வது என்று எல்லோரும் தடுமாறினார்கள். ஏனெனில் ரங்காராவ் மிகப் பெரிய கோபக்காரர்.

“பூஜை நேரத்துக்கு நீங்கள் வராததை ஸ்ரீதர் அபசகுனமாக நினைத்து விட்டார். அதனால்தான் உங்களை மாத்திவிட்டு….” என்று ஸ்ரீதரின் வலது கரமாக இருந்த சித்ராலயா கோபு இழுத்தவுடனேயே சூழ்நிலையைப் புரிந்து கொண்ட எஸ்.வி.ரங்காராவ், “ஸ்ரீதரை எப்போதும் மதிப்பவன் நான். எனக்கு அவர் மேல் எந்த கோபமும் இல்லை என்பதை அவரிடம் சொல்லி விடுங்கள்” என்று கோபுவிடம் சொல்லிவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டுவிட்டார்.

தன் மேல் தவறு இருந்தால் அதை ஒப்புக் கொள்கின்ற நேர்மையான குணத்துக்கு சொந்தக்காரரான எஸ்.வி.ரங்காராவ் யாராவது தன்னைப் பற்றி தவறாக குற்றம் சாட்டினால் அதை எதிர்கொள்ளவும்  தயங்க மாட்டார்.

ஏவி.எம். தயாரிப்பான ‘பக்த பிரகலாதா’வில் இரண்யனின் வேடம்  ஏற்று நடித்தபோது  நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்கு மேல் படப்பிடிப்பில் எஸ்.வி.ரங்காராவ் இருக்க மாட்டார். மாலை ஆறு மணிவரை இருந்து நடித்துவிட்டுப் போங்கள் என்று அவரிடம் சொல்லக் கூடிய தைரியம் படக் குழுவினருக்கு  இல்லாததால் படப்பிடிப்பில் ரங்காராவ் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை என்ற தகவலைப்  பட முதலாளியான ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

“இன்று படப்பிடிப்பு தளத்துக்கு வந்து நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன்” என்று அவர்களிடம் சொன்ன மெய்யப்ப செட்டியார் படப்பிடிப்பு தொடங்கிய அரை மணி நேரத்தில் அங்கே வந்தார். அவரைப் படப்பிடிப்பு தளத்தில் பார்த்த உடனேயே தன்னைப் பற்றி யாரோ புகார் சொல்லித்தான் அவர் அங்கே வந்திருக்கிறார் என்று ரங்காராவிற்கு புரிந்துவிட்டது.

மதிய உணவு இடைவெளியின்போது தான் அணிந்திருந்த கவசங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை பொறுமையாகக் கழட்டிய ரங்காராவ் “மிஸ்டர் செட்டியார் கொஞ்சம் இதைப் பிடியுங்கள்” என்று மெய்யப்ப செட்டியாரிடம்  தந்தார்.

அவற்றைக் கையில் வாங்கிய செட்டியார் “இவ்வளவு கனமாக இருக்கிறதே. எப்படி இதைப்  போட்டுக் கொண்டு நடிக்கிறீர்கள்?” என்று கேட்டவுடன் எந்த  நோக்கத்துக்காக அந்த ஆபரணங்களை அவரிடம்  கொடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் “இப்போது சொல்லுங்கள். இவ்வளவு கனமான நகைகளையும், கவசத்தையும் அணிந்து கொண்டு என்னால் எவ்வளவு நேரம் தொடர்ந்து நடிக்க முடியும்..? படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன பிறகுகூட இந்த நகைகளை அணிந்து கொண்டு நடித்த வலி தீர இரண்டு மணி நேரம் ஆகிறது…” என்றார் ரங்காராவ்.

அவர் தரப்பில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட செட்டியார் “நீங்கள் சொல்வது உணமைதான். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் நடியுங்கள் போதும்” என்றாராம். 

‘நர்த்தனசாலா’ என்ற  படத்தில் கீசகனாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பட்டத்தை  இந்தோனேஷியாவில் நடைபெற்ற பட விழாவில் பெற்ற ரங்காராவைப் பாராட்டிய தெலுங்கு நடிகர் ‘கும்மிடி’ ரங்காராவ் இந்தியாவில் பிறந்தது நாம் செய்த அதிர்ஷ்டம். ஆனல் அவரைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய துரதிருஷ்டம். மேற்கத்திய நாடுகளில் அவர் பிறந்திருந்தால் உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக அவர் புகழ் பெற்றிருப்பார்” என்று  குறிப்பட்டிருக்கிறார்.

அவருடைய அந்தக் கருத்தை யாரால் மறுக்க முடியும்..?

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் ‘ஜெய்’

ராகுல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.திருக்கடல் உதயம் தயாரித்துள்ள திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. பிரம்மாண்டமான செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய்...

இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்!

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,...

கேரளாவில் விற்பனையாகும் லாட்டரி தொழில் பற்றிய ‘பம்பர்’ திரைப்படம்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வேதா பிக்சர்ஸ்...

ஜெய் பீம் படத்தின் டிரெயிலர்

Amazon Prime Video presents, Jai Bhim Official Telugu Trailer Starring Suriya, Prakash Raj, Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo mol Jose Written...