Monday, September 27, 2021
Home சினிமா வரலாறு சினிமா வரலாறு-57- எம்.ஜி.ஆர். எழுதிய முதல் காதல் கடிதம்

சினிமா வரலாறு-57- எம்.ஜி.ஆர். எழுதிய முதல் காதல் கடிதம்

தன்னுடைய காதல் விவகாரத்தில் தினமும் என்னென்ன நடக்கிறது என்று மீண்டும் தனது நண்பர்களிடம் எம்.ஜி.ஆர். தெரிவிக்க ஆரம்பித்தவுடன் ”அந்தப் பெண்ணை நீ தனியாக சந்தித்து பேச வேண்டுமானால் அந்தப் பெண்ணிற்கு உடனடியாக ஒரு கடிதம் எழுது” என்று எம்.ஜி.ஆருக்கு அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.  “நான் எழுதுகின்ற கடிதம் யார் கையிலாவது சிக்கிவிட்டால்?” என்று எம்.ஜி.ஆர் பயப்பட அதற்கும் ஒரு வழியை அவர்கள் தயாராக வைத்திருந்தார்கள்.

அவர்களின் யோசனைப்படி  தினசரி பேப்பர் ஒன்றின் ஓரத்தைக் கிழித்து “சந்தித்துப் பேச எப்போது அனுமதி கிடைக்கும்?” என்று ஒரு வரியினை அதில் எழுதினார் எம்.ஜி.ஆர். முதல் முறை அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர் அவளிடம்  நீட்டிய போது அந்தக் கடிதத்தை கையில் வாங்கிக் கொள்ளாமலே ஓடி விட்டாள் அந்தப் பெண்.

அதற்காக முயற்சியைக் கைவிட்டு விடாமல் மறுநாள் அந்தக்  கடிதத்தை அவளது கையில் திணித்தார் எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தை வாங்கியபோது அவளது  கைகள் கிடுகிடுவென்று நடுங்கின.

அதற்குப் பிறகு எம்.ஜி.ஆரின் கண்ணில் அவள் தென்படவே இல்லை. ஒரு நாள் எதிர்பாராதவிதமாக அவள் எதிரே வந்தபோது அவளது கையைப் பிடித்த எம்.ஜி.ஆர் ”என்னுடைய கடிதத்துக்கு பதிலே இல்லையே” என்றார்.  உடனே “கையை விடுங்க யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்” என்று சொல்லிவிட்டு  தனது கையை அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டாள் அந்தப் பெண்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் அந்தப் பெண்ணை சத்யாபாமா அம்மையாரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பெண்ணின் தாயாரும், அவரது சகோதரியும் அவர்களுடைய உறவினரின்  வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றனர்.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது அன்றிரவு அவளை சந்தித்துப் பேசி விடுவது என்று முடிவெடுத்து  அவளைத் தேடிப் போன எம்.ஜி.ஆர், அந்தப் பெண் தனது தாயாரின் அருகில் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும்  அவளை சீண்டப் போய் தனது தாயார் எழுந்துவிட்டால் நிலைமை விபரீதமாகி விடுமே என்ற பயத்தில் தன்னுடைய அறைக்கு வேகமாக திரும்பிவிட்டார்.

படுக்கையில் தூங்காமல் வராமல் அவர்  புரண்டு கொண்டிருந்தபோது  என்ன காரணத்தாலோ அவரது  மனசு  மட்டும் அந்தப் பெண் நிச்சயம் தன்னைத் தேடி  வருவாள் என்று அவருக்கு சொல்லிக் கொண்டே யிருந்தது.

அன்றிரவு  இரண்டு  மணிக்கு எம்.ஜி.ஆரின்  மனம் என்ன சொன்னதோ அது நடந்தது. அந்தப் பெண் அவரைத் தேடி வந்தாள்.

அவள் வாயிற்கதவு அருகே வந்து நின்றதும் எம்.ஜி.ஆரால் தனது உள்ளத்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மெல்ல எழுந்து அவள் அருகே சென்ற அவர் அவளது கைகளைத் தொடப் போனபோது வேகமாகத்  தனது கையை இழுத்துக் கொண்ட  அவள் “என்னைத் தொடாதீர்கள்” என்றாள்.

“அப்படின்னா எதுக்கு இங்கே வந்தே” என்று எம்.ஜி.ஆர். கேட்டவுடன் அந்த அறைக்குள்ளே வந்த அவள், எம்.ஜி.ஆரின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தபடி “நீங்க என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போறீங்களா?” என்று கேட்டாள்.

அந்த இரவில் அப்படி ஒரு கேள்வியைத் தன்னிடம் அந்தப் பெண் கேட்பாள் என்று எம்.ஜி.ஆர். கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, உடனடியாக  எந்த பதிலும் சொல்ல முடியாமல் சிலைபோல நின்று விட்டார் அவர்.

“உங்க ஜாதி வேறு. என்னுடைய ஜாதி வேறு. நீங்க மலையாளி. நான் தமிழ். நாம் எப்படி கல்யாணம் செய்து கொள்ள  முடியும்? அப்படி இருக்கும்போது நீங்க இப்படி எனக்குக் கடிதம் எழுதறது வெளியே தெரிஞ்சா என்னை வேற யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா? என் வாழ்க்கையைப் பற்றிக்  கொஞ்சம்கூட   யோசிக்காமல் யார், யாரோ சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கிட்டு இனிமே இப்படிஎல்லாம் எனக்குக் கடிதம் எழுதாதீங்க..” என்று அந்தப் பெண் சொல்லி முடிக்க யாரோ குழாயைத் திறக்கும் சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தைக் கேட்டவுடன் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் வியர்க்க விறுவிறுக்க எம்.ஜி.ஆர். எட்டிப் பார்த்தார். அப்போது அந்தப் பெண் லேசாக சிரித்தபடி “பயப்படாதீங்க. அது உங்க அம்மா இல்லே.. என்னுடைய சிநேகிதி” என்றாள். அவள் அப்படிச் சொன்ன பிறகும் எம்.ஜி.ஆரின் படபடப்பு அடங்கவில்லை.

“அந்த அக்காதான் என்னை எழுப்பி அனுப்பி வைத்தார்கள்” என்று  அந்தப் பெண் சொன்னவுடன் “அந்த அக்கா உன்னை எழுப்பி அனுப்பினார்களா” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர்.

“ஆமாம். இரவு இரண்டு மணிக்கு  என்னை எழுப்பும்படி நான்தான் அந்த அக்காவிடம்  சொல்லி வைத்திருந்தேன். அவங்களுக்கு ‘எல்லா விஷயமும்’ தெரியும்”  என்று அந்த “எல்லா விஷயமும்” என்ற வார்த்தைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து பதில் சொன்னாள் அந்தப் பெண்.

அவள் அப்படி சொன்னவுடன் அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். வியப்போடு பார்க்க  “உங்களைக் கல்யாணம் செய்து கொள்கின்ற அதிர்ஷ்டம் எனக்கு இருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்தான்.. ஆனால்  அது  நடக்காது” என்று கூறிய அந்தப் பெண் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து வணங்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் போனவுடன் அதிர்ந்துபோய் அப்படியே கட்டிலில் உட்கார்ந்தார் எம்.ஜி.ஆர். சினிமாவில் வருவது போல  “நீங்க என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போறீங்களா?” என்று அந்தப் பெண் கேட்ட கேள்வி அவரது காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. அதற்குப் பிறகு எப்போது அவர் தூங்கினார் என்று அவருக்கே தெரியாது.

காலையில் கண் விழித்ததும் முதல் நாள் இரவு இரவு நடந்த எல்லா விஷயங்களும் அவரது நினைவுக்கு  வந்தன. கூடவே, இரவு நடந்த விஷயங்கள் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் அவருக்குள் எழுந்தது.

அவரது  தாயார் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தவுடன்தான்  மன நிம்மதி அடைந்தார் அவர். அதன் பிறகு நாடகம் ஒன்றில் நடிக்க  அண்ணனுடன் வீட்டைவிட்டு கிளம்பிய அவர் அடுத்த சில நாட்களுக்கு வீட்டுப் பக்கம் வரவேயில்லை.

நீண்ட இடைவேளிக்குப் பிறகு அவர்  வீடு திரும்பியபோது வீட்டில் அப்படி ஒரு அமைதி நிலவியது.. அந்தப் பெண்ணின் அண்ணியார் ஒரு தூணின் அருகே அமர்ந்தபடி விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த உடனே  அங்கே  ஏதோ ஒரு பெரிய  பிரச்னை நடந்து முடிந்திருக்கிறது என்று எம்.ஜி.ஆருக்குத்  தெளிவாகப் புரிந்தது.

அவரது கணிப்பு சரியானதுதான் என்பதை அடுத்த இரண்டு மணி நேரத்தில் புரிந்து கொண்டார் அவர். இரவு இரண்டு மணிக்கு எந்தப் பெண்  அவரது  காதலியை எழுப்பி அனுப்பினாளோ அவள் மூலம்  அவளது கணவனுக்கு  அந்தச் செய்தி தெரிய வர அதை  அவர் அந்தப் பெண்ணின் அண்ணனிடம்  அப்படியே ஒரு வார்த்தை தவறாமல் சொல்லிவிட்டார்.

இதனால் “உங்களை நம்பி பெண்ணை ஒப்படைத்துவிட்டுப் போன எங்களுக்கு நீங்கள் செய்யும் உதவி  இதுதானா…?” என்று அன்னை சத்யபாமாவிடம் உரத்த குரலில் சண்டை போட்டிருக்கிறார்  அந்தப் பெண்ணின் தாயார். அவர்கள் போட்ட சண்டையில் அங்கே குடி இருந்த அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டிருக்கிறது.

இந்தப் பிரச்னை காரணமாக  அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு போக முடிவு செய்த சத்யபாமா அம்மையார் புது வீடு ஒன்றைப் பார்த்து அந்த வீட்டுக்கு முன் பணமும் கொடுத்து விட்டார்கள்.

அந்த விவரங்கள்  எல்லாம்   தெரிந்து கொண்டவுடன்  மனமொடிந்து போன எம்.ஜி.ஆர். அந்தக் கவலையில் படுத்துக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த அந்தப் பெண் எம்.ஜி.ஆரின் மீது ஒரு கடிதத்தை சுருட்டி வீசினாள்.

“நீங்கள் ஏதோ தவறே செய்யாதவர் போலவும், உங்களை என்னிடமிருந்து காப்பாற்ற இந்த வீட்டைக் காலி செய்துவிட்டுப் போவதைப் போலவும் மற்றவர்களை நம்ப வைக்க உங்களது தாயார் முடிவெடுத்து விட்டார்கள். நடந்த உண்மை என்ன என்பதை  சொன்னால் உங்களது தாய்க்கு அவமானம் என்பதால் நீங்கள் எதுவும் பேச மாட்டீர்கள். உங்களது மானத்தை உங்களது தாயார் காப்பாற்றட்டும். அவரது மானத்தை நீங்கள் காப்பாற்றுங்கள்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தாள் அந்தப் பெண்.

அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர். திரும்பத் திரும்பப் படித்தார்.அந்தக் கடிதம் அவரது மனதை மிகவும் பாதித்தது. ஆகவே அந்தப் பெண்  சம்மதித்தால் என்ன நேர்ந்தாலும்  அந்தப் பெண்ணை மணந்து கொள்வது என்று  முடிவெடுத்த அவர் தனது முடிவை ஒரு காகிதத்தில் எழுதி அந்தப் பெண் அந்தப் பக்கமாக போனபோது அவள் கைக்கு கிடைக்குமாறு அவளுக்கு முன்னே வீசினார்.

அந்தக் கடிதத்தில் தான் அடுத்து குடி போகவிருக்கும் புது வீட்டின் முகவரியை குறிப்பிட்டிருந்த அவர்  அவர் அந்த பெண் தனக்கு எழுதும் கடிதம் தன் வீட்டில் வேறு யாரிடமாவது கிடைத்து அவர்கள் அதைப் படித்துப் பார்த்து கிழித்துப் போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக தனது வீட்டின் பக்கத்திலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக்காரரின் விலாசத்தையும் அதில் எழுதினார்.

“கல்யாணத்தைப் பற்றி சிந்திக்கவே தெரியாதிருந்த நான் திருமணத்துக்குத் தயாரானேன். அவளைச் சந்திப்பது பற்றியெல்லாம் சிறிதும் எண்ணாமல் அவளை நல்ல மனைவியாக்கிக் கொள்ள முடிவெடுத்தேன். அன்றே அவள் புறப்பட்டு வருவதானாலும் அவளை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருந்தேன்…“ என்று அந்த சம்பவம் பற்றி ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் எம்.ஜிஆர்.

அப்படி கடிதம் எழுதிவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் அடிக்கடி அந்தப் பெண்ணின் நிலைமையைப்  பற்றி அவளது தோழியின் கணவர் மூலம் கேட்டு தெரிந்து கொள்வதை வழக்கமாக  வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணிற்கு திருமணமாகி விட்டது என்பதை அந்த நண்பர் மூலமாக தெரிந்து கொண்ட எம்.ஜி. ஆர். மனமார அந்த மணமக்களை வாழ்த்தினார்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

பேய் மாமா – சினிமா விமர்சனம்

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக...

‘வீராபுரம்-220’ – சினிமா விமர்சனம்

ஸ்ரீவைசாலி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குணசேகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக ‘அங்காடி தெரு’ புகழ் மகேஷ் நடித்திருக்கிறார். நாயகியாக...

ச்சூ மந்திரக்காளி – சினிமா விமர்சனம்

அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார். புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன்...

சின்னஞ்சிறு கிளியே – சினிமா விமர்சனம்

செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் இந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தைத் தயாரித்திருக்கிறார்..! இந்தப் படத்தில் செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி...