Friday, April 12, 2024

சினிமா வரலாறு-56 – அண்ணனின் காதலுக்கு எம்.ஜி.ஆர். போட்ட முட்டுக்கட்டை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ப் பட உலகை முப்பதாண்டு காலமும், தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு  காலமும் ஆட்சி செய்த  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னுடைய இளம் வயதில் எம்.ஜி.ராமச்சந்திரனாக இருந்த காலக்கட்டத்தில் பார்கவியையும், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துப் பெயரை காலம் அவருக்குச்  சூட்டிய  பிறகு சதானந்தவதி, வி.என்.ஜானகி ஆகியோரையும்  திருமணம் செய்து கொண்டதை எல்லோரும் அறிவார்கள்.

ஆனால், தனது இளம் வயதில் எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணைக் காதலித்தார் என்ற செய்தி பலர் அறியாத ஒன்று.

எம்.ஜி.ஆரின் அண்ணனான  சக்ரபாணிதான் ஆரம்பத்தில்  காதல்  மன்னனாக இருந்தவர். இளம் வயதில் மிகவும் அழகான தோற்றத்துடன் இருந்த அவருக்கு எக்கச்சக்கமான காதல் கடிதங்கள் வரும்.

அந்தக் காதல் கடிதங்களை எல்லாம் ஒரு நாள்  படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர். அடுத்த வேலையாக அந்தக் காதல் கடிதங்களை எடுத்துக் கொண்டு தன் தாயாரிடம் போனார். ”இத்தனை கடிதங்கள் யாருக்கு வந்திருக்கின்றன?” என்று தாயார் கேட்டதும் ”எல்லாம் அண்ணனுக்கு வந்திருக்கும் கடிதங்கள்தான். படிக்கிறேன் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்தக் கடிதங்களை உற்சாகமாகப் படிக்க ஆரம்பித்தார் அவர்.

காதல் ரசம் சொட்டச்  சொட்ட எழுதப்பட்ட அந்த கடிதங்களைப் பார்த்துவிட்டு   சக்ரபாணியை ஒரு பத்து நிமிடமாவது  தனது தாயார் திட்டுவார்  என்பது எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவரது தாயாரோ  “என்னப்பா இதெல்லாம்?” என்று சக்ரபாணியைப் பார்த்து மிகச் சாதாரணமாக ஒரு கேள்வியை கேட்டு விட்டுப் போய்விட்டார்.

தன்னுடைய எண்ணம்  நிறைவேறாததால் மிகப் பெரிய ஏமாற்றம் அடைந்த எம்.ஜி.ஆர்., சக்ரபாணியின் காதல் வாழ்க்கையில் வேறு வழிகளில் குறுக்கிட முடிவு செய்தார்.  

ஒரு நாள் நன்கு உடையணிந்து கொண்டு எம்.ஜி.சக்ரபாணி  வெளியே கிளம்பியபோது அவருடன் இவரும் புறப்பட்டார். “நீ எங்கே வர்றே” என்று சக்ரபாணி கேட்டபோது  “எத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே அடைந்து  கிடப்பது? அதனால் நானும் உங்க கூட வர்றேன்” என்று பதில் பிறந்தது எம்.ஜி.ஆரிடமிருந்து.

“வெளியே  போகணும்னா நீ தனியா போக வேண்டியதுதானே? யார் வேண்டாம் என்று சொகிறார்கள். எதுக்கு என் கூட வர்றே?” என்று சற்று ஆத்திரத்துடன்  சக்ரபாணி கேட்க ”தனியாகப் போக பயமாக இருக்கு” என்று மிகவும் சாதுவாக ஒரு பதிலைச்  சொன்னார் எம்.ஜி.ஆர்.

“ஓகோ, நீ இதுவரைக்கும் தனியா போனதே இல்லையா?“ என்று சக்ரபாணி கேட்டபோது அவரது  கேள்விக்கு  பதிலைத் தயாராக வைத்திருந்த எம்.ஜி.ஆர். ”அப்படிப் போனதினால்தான் பயமா இருக்குங்கிறதைப் புரிஞ்சிக்கிட்டேன்” என்று சொன்னவுடன் கோபத்துடன் வீட்டுக்குத்  திரும்பிய சக்ரபாணி தனது கையிலிருந்த துண்டை அங்கிருந்த நாற்காலியின் மீது போட்டுவிட்டு அறைக்குள் போய் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

எம்.ஜி.சக்ரபாணியைப் பொறுத்தவரை  துண்டு இல்லாமல் அவர்  வீட்டை விட்டு வெளியே போகவே  மாட்டார் என்பதால்  அவர் தனது துண்டை எந்த நாற்காலியின் மீது போட்டாரோ அந்த நாற்காலியில்  உட்கார்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

அவர் அப்படி தன்னுடைய துண்டின் மீது உட்கார்ந்து கொண்டதும் “நான் இன்றைக்கு எங்கேயும் போகப் போவது இல்லை  போதுமா. இப்ப உனக்கு சந்தோஷம்தானே?” என்று எம்.ஜி.ஆரிடம் ஆத்திரம் கொப்பளிக்க சொல்லிவிட்டு வாசல் பக்கத்தில் இருந்த திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டார் சக்ரபாணி.

அப்படி சொன்னதற்குப் பிறகும் அண்ணன்  மீது நம்பிக்கை பிறக்காததால்  அவர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை  வாசலிலேயே அமர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். தனது தாயாரிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து   வீட்டுக்கு உள்ளே போனார்.  

“எதுக்கு எப்பவும் அவனுடைய வம்புக்கே போறே?” என்று எம்.ஜி.ஆரிடம் கேட்ட  அவரது அன்னை சத்யபாமா, காபி தம்ளரை அவரிடம்  கொடுத்து அதைக் கொடுத்து அண்ணன் சக்ரபாணியை சமாதானப்படுத்துமாறு எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

காபி தம்ளருடன் வெளியே சென்ற எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு சக்ரபாணி அந்த இடத்தை விட்டுப் பறந்திருந்தார்.  “திரும்பி வரட்டும்… பார்த்துக் கொள்கிறேன்” என்று முனகியபடியே வீட்டுக்குள் நுழைந்தார்  எம்.ஜி.ஆர்.

அப்படி தொடர்ந்து  அண்ணனின் காதல் விவகாரங்களுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரையும்  ஒரு கால கட்டத்தில்  காதல் வலையில் சிக்க வைத்தது காலம்.

எம்.ஜி.ஆருக்கு முதல் காதல் தோன்றியபோது அவருக்கு வயது பதினாறு. அவர்கள் குடியிருந்த வீட்டின் இன்னொருபுறத்தில் தங்கியிருந்த ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிய அவர் அந்தப் பெண்ணின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக செய்யாத முயற்சிகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இருக்கும் பக்கம் அந்தப் பெண் நடந்து சென்றால் போதும் எம்.ஜி.ஆரின் வாய் தானாகவே ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்துவிடும்.

அந்தப் பெண்ணிற்கும் தன் மீது லேசான ஈர்ப்பு இருக்கிறது என்பது  ஒரு காலக்கட்டத்தில்  தெரிய வந்ததும் அந்தப் பெண்ணுடன் நேரிலே பேச ஒரு சந்தர்ப்பத்தை  எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

இரவு சாப்பாடு முடிந்தவுடன் இலையைப் போடுவதற்காக அந்தப் பெண்  தினமும் வெளியே வருவது வழக்கம் என்பதால்  அவளுடன் பேச   சரியான நேரம் அதுதான் என்று முடிவு செய்த அவர் எந்த நேரத்தில்  அந்தப் பெண் இலையைப் போட வருகிறார்  என்பதைத்  தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அந்தப் பெண்ணைக் கண்காணித்தார்.

அவருடைய அந்த முயற்சியை முறியடிக்கின்ற மாதிரி ஒரு நாள் இரவு ஏழு மணிக்கு வந்த அந்தப் பெண் அடுத்த நாள் எட்டு மணிக்கு வந்தார். இன்னொரு நாள் ஏழரை மணிக்கு வந்தார். ஆனால், அதனால் எல்லாம் எம்.ஜி.ஆர். சோர்ந்துவிடவில்லை.

எப்படியும் ஏழு மணி முதல் அவள் வரத் தொடங்குவதைத் தெரிந்து கொண்ட  அவர் ஒரு நாள் சரியாக ஏழு மணிக்கு  அவள் வரக் கூடிய பாதையில் கட்டிலைப்  போட்டு படுத்துக் கொண்டார்.

என்றுமே ஒன்பது மணிக்கு முன்னாள் படுக்காத எம்.ஜி.ஆர். அன்று ஏழு மணிக்கே  படுத்துவிட்டதைப் பார்த்த சத்யபாமா அம்மையார் “என்னடா அதுக்குள்ளே படுத்துட்டே..?” என்று கேட்டபோது “தலை வலிக்கிற மாதிரி இருக்கும்மா அதனால்தான்” என்று  தாயாரிடம்  பதில் சொல்லிய எம்.ஜி.ஆருக்கு அந்தப் பதிலால் விளையப் போகிற வினைகள் பற்றி அப்போது தெரியாது. 

சாப்பாட்டு இலையை போட அந்தப் பக்கமாக வந்த அந்தப் பெண்  தலை வலிப்பதாக எம்.ஜி.ஆர். தன்  தாயிடம் சொன்னதைக் கேட்டுவிட்டு சிரித்தபடியே அந்த இடத்தைக் கடந்தாள்.

அவள் திரும்பி வரும்போது அவளுடன் எப்படியாவது பேசிவிட முடிவெடுத்த எம்ஜிஆர் அவள் வாசலில் இலையைப் போட்டுவிட்டு வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் அவளை நோக்கி  அவசரமாக எழுந்தார். அப்போது ஒரு கை அவரை அழுத்தியது. அந்த கைக்குச்  சொந்தக்காரர் அன்னை சத்யபாமா.

”ஏன் இப்படி அவசரமா எழுந்திருக்கிறே..? இந்தா அமிர்தாஞ்சனம். இதைத் தடவிக்கிட்டு கண்ணை மூடிக் கொண்டு  படுத்துக் கொள். தலைவலி தானாகப் போய்விடும்“ என்றார் அவர். அப்போது மீண்டும் எம்.ஜி.ஆரைப்  பார்த்து சிரித்தபடியே அந்தப் பெண் வீட்டுக்குள் போனாள்.

தன்னுடைய காதல் அனுபவங்களை எல்லாம் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். முதல் நாள் தன் வீட்டில் நடந்ததைப் பற்றி அவர்களிடம்  சொல்லியபோது அவரது நண்பர் ஒருவர்  “அந்த பெண்ணுக்கு என்ன வயசு…?” என்று கேட்டார்

“பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கும்” என்று  எம்.ஜி.ஆர் சொன்னவுடன் “வயதுக்கு வராத பெண்தானே” என்று அந்த  நண்பர் சொல்ல அடுத்தபடியாக அங்கே இருந்த இன்னொருவர் ”இவனுக்கு வயது பதினாறு. அந்தப் பொண்ணுக்கு பன்னிரண்டு. இந்த லட்சணத்தில் இவங்களுக்கு காதலாம்” என்று சொல்லி  கிண்டல் செய்தார். மற்றவர்கள் அதைக் கேட்டு சிரித்தவுடன் அந்த இடத்தை விட்டு மௌனமாக வெளியேறினார் எம்.ஜி.ஆர்.

இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள்  வேலைக்கு சென்று விட்டுத் திரும்பிய எம்.ஜி.ஆர் தனது வீடு விழாக் கோலம் பூண்டிருப்பதைப் பார்த்துவிட்டு என்ன விசேஷம் என்று விசாரித்தபோது அவர் காதல் வயப்பட்டிருந்த அந்தப் பெண் பருவம் அடைந்து விட்டாள் என்ற செய்தி அவருக்குத் தெரிய வந்தது .

நண்பர்கள் கிண்டல் செய்த பிறகு அவர்களிடம் தன்னுடைய காதலைப் பற்றி எந்தச் செய்தியையும் எம்.ஜி.ஆர். பகிர்ந்து கொள்ளாததால் “என்னப்பா உன் காதல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? என்று அவரது நண்பர்கள் ஒரு நாள் அவரிடம் கேட்டனர். “இனிமேல் அதைப் பற்றி பேசவே கூடாது“ என்று எம்.ஜி.ஆர். சொன்னவுடன் “ஏன், உங்க அம்மா ஏதாவது மிரட்டினாங்களா..?“ என்று கேட்டார் அவரது  நண்பர்.

“இல்லேப்பா அந்தப பொண்ணு வயசுக்கு வந்துவிட்டது. அதனால் இனிமேல் அந்த விளையாட்டெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று எம்.ஜி.ஆர் சொன்னவுடன் அவரது நண்பர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“எதுக்கு இப்போ பைத்தியம் மாதிரி எல்லோரும் சிரிக்கிறீங்க?” என்று எம்.ஜி.ஆர்  கேட்டபோது “பைத்தியம் உனக்கா இல்லே எங்களுக்கா ?” என்று கேட்ட அவர்கள் “எப்ப காதல் பண்ணக் கூடாதோ அப்போ அந்த பொண்ணு பின்னாலேயே காதல் காதல்னு அலைஞ்சே. எப்போ காதல் பண்ணனுமோ அப்போ ஒதுங்கி ஓடுறியே..?“ என்று அவரைக் கிண்டல் செய்தனர்.

அன்று அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள்தான் எம்ஜிஆரின் காதல் பயணம் மீண்டும் தொடரக் காரணமாக அமைந்தன.

ஒரு  நாள் அந்தப் பெண் தண்ணீர் பிடிப்பதற்காக குழாய் அருகில் வந்தபோது அவளது கவனத்தைத்  தன் பக்கம் திருப்புவதற்காக ‘சத்தியவான் சாவித்திரி’  நாடகப் பாடலான “ஏனோ என்னை எழுப்பலானாய் மடமானே” என்ற பாடலை ஆர்மோனியத்தை வாசித்தபடி  எம்.ஜி.ஆர்.  உரத்தக் குரலில் பாடத் தொடங்க அந்த பாட்டைக்  கேட்ட  அந்தப் பெண் சிரித்தபடியே தனது ஓரக் கண்ணால் அவரைப் பார்த்தாள். அடுத்தக் கணம்  உற்சாகம் கரை புரண்டு ஓட  திரும்பவும் உரக்க அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார் அவர்.

அப்போது சுவாமி தோத்திரங்களை சொல்லியபடி அவரது தாயார் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்த விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. திடீரென்று மழை பெய்வது போல ராமச்சந்திரன் மீதும் அவரது ஆர்மோனியம் மீதும் தண்ணீர்  விழ  தலையை நிமிர்ந்து பார்த்தார் ராமச்சந்திரன். கையில் ஒரு  தண்ணீர் தவலையை ஏந்தியபடி கோபத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தார் சத்யபாமா அம்மையார்.

“வயசுப் பொண்ணுங்க இருக்கிற இடத்தில என்ன பாட்டுடா இதெல்லாம்..? இனிமே இந்த வீட்டுக்குள்ளே உன் பாட்டு சத்தம் கேட்டுது நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. சாதகம் பண்ணனும்னு ஆசையாக இருந்தா கடற்கரைக்கு போ. அங்கே போய் என்ன பாட்டு வேணுமானாலும் பாடு” என்று சொல்லிவிட்டு மீண்டும் குளியல் அறைக்குள் போய்விட்டார் அவர்.

தாயார்  போனவுடன்  அந்தப் பெண் அதையெல்லாம் பார்த்துக் கொண்டு அங்கே நிற்கிறாளா என்பதை  முதலில் பார்த்த எம்.ஜி.ஆர். அவள் அங்கே இல்லை என்றதும்தான்   நிம்மதி அடைந்தார்.

எம்.ஜி.ஆருக்கு  தனது தாயாரிடம் மிகுந்த பயமும், மரியாதையும் உண்டு என்றாலும் அந்தக் காதல் விவகாரத்திற்கு மட்டும் அவரால்  முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை.

அதனால் அவர் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News