Friday, April 12, 2024

சினிமா வரலாறு-53 – எம்.ஜி.ஆரிடம் முத்தத்தைக் கேட்டுப் பெற்ற நடிகர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ படத்தில் 9 வேடங்களில் நடிப்பதற்கு பல வருடங்கள் முன்னாலேயே   மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபரான  டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான  ‘திகம்பர சாமியார்’ படத்தில் 12 வேடங்களில் நடித்தவர்  நம்பியார். சிவாஜிகணேசன் திரையிலே அறிமுகமாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம்பியார் நிகழ்த்திக் காட்டிய சாதனை அது.

‘வடுவூர் துரைசாமி ஐயங்கார்’ என்ற நாவலாசிரியர் எழுதிய  புகழ் பெற்ற துப்பறியும் நாவல்களில் ஒன்றுதான் ‘திகம்பரச் சாமியார்’ என்ற பெயரிலே திரைப்படமாக  உருவானது.

அந்தப் படத்திலே நடிக்கின்ற வாய்ப்பு முதலில் நம்பியாரைத் தேடி வரவில்லை. எம்.ஜி.ஆரின் நாடக மேடை குருவான காளி என்.ரத்தினத்தைத்தான் தேடிப் போனது. அதைத் தொடர்ந்து  ‘திகம்பர சாமியார்’ வேடத்தில் காளி.என்.ரத்தினம் ஒரு வாரம் நடித்தார். 

அந்தப்  படத்தை எடுத்தவரையில் போட்டுப் பார்த்த டி.ஆர்.சுந்தரத்திற்கு காளி.என்.ரத்தினத்தின் நடிப்பு திருப்தி தரவில்லை. ஆகவே அவரைப்  படத்திலிருந்து நீக்கிவிட்டு  அந்த வாய்ப்பை  எம்ஜிஆரின் மூத்த சகோதரரான எம்.ஜி.சக்ரபாணிக்கு வழங்கினார் சுந்தரம். அவருடைய  நடிப்பும் சுந்தரத்துக்கு திருப்தி தராமல் போக அந்த வேடத்திலே நடிக்க மூன்றாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் எம்.என்.நம்பியார்.

நம்பியார் நடிக்கவிருந்த பன்னிரண்டு வேடங்களில் சில  வேடங்களுக்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்த சுந்தரம் அந்த வேடங்கள் கச்சிதமாக அவருக்கு பொருந்தியிருப்தைப் பார்த்துவிட்டு “இனிமேல் இந்த சினிமா உலகில் உன்னைப் பிடிக்க முடியாது” என்று சொல்லி நம்பியாரைப் பராட்டினார். அந்த நல்லவர் வாக்கு அப்படியே பலித்தது. அந்த படத்திற்குப் பிறகு நம்பியாரின் வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது.

‘திகம்பர சாமியாரைத்’ தொடர்ந்து  எம்.ஜி.ஆருடன் ‘சர்வாதிகாரி’ படத்தில் நடித்த நம்பியார் அதற்குப் பிறகு தமிழ்த் திரையுலகில்  எல்லா கதாநாயகர்களோடும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் என்றாலும் எம்.ஜி.ஆர். மீது மட்டும் அளவிட முடியாத அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரும் அவரை நேசித்தார். ஒரு நண்பராக நம்பியாருக்கு கொடுத்திருந்த இடத்தை எம்.ஜி.ஆர். வேறு எந்த நடிகருக்கும் கொடுக்கவில்லை.

நம்பியாரைவிட எம்.ஜி.ஆர். இரண்டு வயது மூத்தவர் என்ற போதிலும் சினிமாவிலே தனக்கு சீனியர் என்பதால் அவருக்கு உரிய மரியாதையைத் தர எம்.ஜி.ஆர். எப்போதுமே தவறியதில்லை.

எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது சிலர் அவரது காலில் விழுந்து வணங்குவார்கள். சிலர் கையெடுத்து கும்பிடுவார்கள். ஆனால், எவரும் அவர் வரும்போது உட்கார்ந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.  நம்பியார் மட்டும் அதில் விதிவிலக்கு. எம்ஜிஆர் வரும்போது அவர் எழுந்து நிற்க மாட்டார்.

எம்ஜிஆரை வைத்து பதினாறு படங்களை இயக்கிய ப.நீலகண்டன் கொஞ்சம் கிண்டலான ஆள். எம்.ஜி.ஆர். முன்னிலையில் மற்றவர்களை மாட்டி விடுவதில் அவருக்கு அப்படி ஒரு ஆசை.

அவர் இயக்கிக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வந்தபோது வழக்கம்போல உட்கார்ந்து கொண்டிருந்த  நம்பியாரைப் பார்த்து “சின்னவர் வரும்போது எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து கொண்டே இருக்கிறீர்களே..?” என்று கேட்டார் ப.நீலகண்டன்.

“எம்ஜிஆர் என்னுடைய நண்பர்.அப்படி இருக்கும்போது அவர் வந்தால் நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?” என்று அவரிடம் எதிர்க்கேள்வி கேட்டார்  நம்பியார். அப்போது எம்.ஜி.ஆர். இதைக் கேட்டுவிட்டு லேசாக சிரித்தபடியே அவர்களைக் கடந்து போனார். 

நம்பியாரின் குடும்ப விழாக்கள் எதுவும் எம்.ஜி.ஆர். இல்லாமல் நடக்காது என்கின்ற அளவிற்கு அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தனர். நம்பியாருக்கு திருமணம் நடைபெற்றபோது அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். அதே போன்று நம்பியாரின் மூத்த மகனான சுகுமாரனுக்கு முதல்முதலாக அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி பழனியில் நடைபெற்றபோது சுகுமாரைத் தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

முக்கியமான பல சந்திப்புகளை நம்பியார் வீட்டில் வைத்துக் கொள்வது எம்.ஜி.ஆரின் வழக்கம். சிவாஜியை வைத்து ‘ஹீரோ 72’ என்ற படத்தை ஆரம்பித்துவிட்டு அதை முடிக்க முடியாமல் இயக்குநர் ஸ்ரீதர் திணறிக் கொண்டிருந்தபோது, “நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் ஆரம்பிக்கக் கூடாது..? அவரை வைத்து படம் எடுத்தால் நிச்சயமாக உங்களது பிரச்னைகள் எல்லாம் தீரும்..” என்று ஸ்ரீதருக்கு யோசனை சொன்னார் இந்தி நடிகர் ராஜேந்திர குமார்.

அந்தச் சம்பவம்  நடைபெறுவதற்கு சில வருடங்கள் முன்னாலே ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் ஆரம்பித்த ஒரு படம் இரண்டு நாள் படப்பிடிப்போடு அப்படியே நின்று போயிருந்ததால் எம்.ஜி.ஆரை சந்தித்து தனது பிரச்னைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி அவரிடம் கால்ஷீட் கேட்பதற்கு முதலில் சங்கடப்பட்டார் ஸ்ரீதர்.

பின்னர் எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளரான பீதாம்பரம் மூலம் எம்ஜிஆரை சந்திக்க நேரம் கேட்டு  அனுப்பினார் ஸ்ரீதர். சந்திரமுகி, குசேலன், சின்னத் தம்பி, சிவலிங்கா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான பி.வாசு, அந்த பீதாம்பரத்தின் மகன்தான்.

ஸ்ரீதர் தன்னைப் பார்க்க விரும்புகிறார் என்றவுடனே எதற்காக தன்னைப் பார்க்க ஸ்ரீதர் வருகிறார் என்பது எம்.ஜி.ஆருக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. “நிச்சயமாக அவருடைய படத்தில் நான் நடிக்கறேன்.ஆனால் என்னைப் பார்க்க அவர் தோட்டத்திற்கு வர வேண்டாம். அவர் இங்கே வந்தால் தேவையில்லாத விமர்சனத்துக்கு ஆளாவார். அதனால், ஏதாவது பொது இடத்தில் சந்திக்கலாம்” என்று சொன்ன எம்ஜிஆர் “அந்தப் பொது இடம் நம்பியார் வீடாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சி” என்று ஸ்ரீதருக்கு செய்தி சொல்லி அனுப்பினார்.

தன்னுடைய இமேஜ் கெட்டுவிடக்கூடாது என்று எம்ஜிஆர் அந்த அளவு பெருமையாக இருப்பதைக் கண்ட ஸ்ரீதர் நெகிழ்ந்து போய் “நான்  தோட்டத்திலேயே அவரை சந்திக்கறேன் “என்று  சொல்லி எம்.ஜி.ஆரை. அவரது தோட்டத்திலேயே சந்தித்தார்.

எம்.ஜி.ஆருக்கும். நம்பியாருக்கும் இடையே எத்தகைய உறவு இருந்தது என்பதை உலகத்துக்கு எடுத்துக் காட்டக் கூடிய ஒரு சம்பவம்… நானும் என்னுடைய சகோதரர் சித்ரா ராமுவும்  இணைந்து தயாரித்த  ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் நூறாவது நாள் விழாவில் நடைபெற்றது.

அந்த விழாவிற்கு தலைமை  தாங்கி அந்தப் படத்திலே நடித்த கலைஞர்களுக்கு பரிசுக் கேடயங்களை வழங்கியவர் அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் கலந்து கொண்ட ஒரேயொரு சிவாஜி பட விழாவாக எங்களது ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் நூறாவது நாள் விழா அமைந்தது.

அந்த விழாவிலே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கேடயம் கொடுப்பதற்கு முன்னால் அவருடைய கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அதற்குப் பிறகு அவருக்கு கேடயத்தை வழங்கினார் எம்.ஜி.ஆர்.

அதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ராதாவிற்கும் மற்ற நடிகர் நடிகைகளுக்கும் பரிசுக் கேடயங்களைக் கொடுத்துவிட்டு எம்.என்.நம்பியாருக்கு அவர் கேடயம்  வழங்கியபோது அந்த கேடயத்தை வாங்க மறுத்து விட்டார் நம்பியார்.

“ஏன்?” என்று சைகையாலே எம்ஜிஆர் கேட்டபோது தன்னுடைய கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு “சிவாஜிக்குக் கொடுத்தது போல எனக்கும் கன்னத்தில்  முத்தம் கொடுத்தால்தான் கேடயத்தை வாங்கிக் கொள்வேன்” என்றார் நம்பியார். சிறிது நேரம் முத்தமெல்லாம் தர மாட்டேன் என்று சொல்லி அவருக்குப் போக்குக் காட்டிய எம.ஜி.ஆர். அதன் பிறகு நம்பியாருக்கு முத்தம் கொடுத்தபோது அந்த விழா நடந்த வள்ளுவர் கோட்டம்  ரசிகர்களின் உற்சாகமான ஆரவாரத்தால் அதிர்ந்தது.

எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலே நடிக்கத் தொடங்கிய நம்பியார் எம்.ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமில்லாமல் அவரது ஐந்தாவது தலை முறையையைச் சேர்ந்த கே.பாக்யராஜ், சரத் குமார், கார்த்திக், பிரசாந்த் ஆகியோரோடும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

எப்படிப்பட்ட பிசியான சூழ்நிலையிலும் வாய்க்கு வந்த தொகையை சம்பளமாகக் கேட்கும் வழக்கம் அவரிடம் இருந்தது இல்லை. எண்பதுகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் எல்லா படங்களுக்கும் முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தார் அவர். புது தயாரிப்பாளர் போனாலும் சரி, ஏவி.எம். போன்ற பெரிய நிறுவனங்கள் போனாலும் சரி அவரது சம்பளத் தொகை மாறாது. நியாய விலைக் கடை மாதிரி ஒரே சீரான சம்பளத்தை மிக நீண்ட காலம் வாங்கிக் கொண்டிருந்த ஒரே நடிகர் அவர்.

அதே போன்று தனி மனித வாழ்க்கையிலும் மிகுந்த ஒழுக்கத்தை கடைப்பிடித்த நம்பியாருக்கு எல்லோருடனும் ஜாலியாக அரட்டை அடிப்பது மிகவும் பிடித்த ஒரு விஷயம். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தால் நிச்சயம் அங்கே தொடர்ந்து சிரிப்பு சத்தம் கேட்டபடி இருக்கும்.

அதே நேரத்தில் ரசிகர்கள் அவரைப் பார்க்க வந்துவிட்டால் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ளத் தொடங்கி விடுவார் அவர். “அவர்கள் முன்னாலே ஏன் அப்படி கடுமையாக இருந்தீர்கள்?” என்று யாராவது கேட்டால் “அவர்கள் வில்லன் நம்பியாரைப் பார்க்கத்தானே வருகிறார்கள். அதனால்தான் அந்த வேடம்” என்று சிரித்தபடி பதில் கூறுவது  அவர் வழக்கம்.

நவாப் ராஜ மாணிக்கத்தின் நாடகக் குழுவிலே நடித்துக் கொண்டிருந்தபோது முதல் முறையாக சபரிமலைக்கு போன அவர் அதற்குப் பிறகு அறுபது முறைக்கும் மேலாக சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். எம்.என்.நம்பியாரை குருசாமியாக ஏற்றுக் கொண்டு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த தொடங்கி பல நட்சத்திரங்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

சைவ உணவை மட்டுமே உண்டு வாழ்ந்த நம்பியார் எப்போது வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும் தனது மனைவி ருக்மணியைத் தவறாமல்  தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார். அவருடன் ஒரு சமையல் அறையே பயணிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும் அவர் மனைவி சமைத்துத் தரும் சாப்பாட்டைத்தான் சாப்பிடுவார் அவர்.

‘பக்த ராமதாஸ்’ படத்தில் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த எம்.என்.நம்பியார் நடித்த கடைசி படமாக விஜயகாந்த நாயகனாக நடித்த ‘சுதேசி’ படம் அமைந்தது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News