Friday, April 12, 2024

சினிமா வரலாறு-48 – எம்.ஜி.ஆர்-வி.என்.ஜானகி திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கொல்லும் விழியாள்’ என்று எழுத்தாளர் கல்கி அவர்களால் பாராட்டப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரிதான் தமிழ்ப்பட உலகின் முதல் கனவுக் கன்னி.  டி.ஆர்.ராஜகுமாரியை திரையிலே அறிமுகம் செய்த  கே.சுப்ரமணியம் அவரைத் தேர்ந்தெடுத்த அனுபவம்  மிகவும் வித்தியாசமானது.

அந்தக் காலத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்த எஸ்.பி.தனலட்சுமியை தனது ‘கச்ச தேவயானி’ படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றார்  இயக்குநர் கே.சுப்ரமணியம்.

அவரை வரவேற்று அவருடன்  பேசிக் கொண்டிருந்த எஸ்.பி.தனலட்சுமி, “ராஜாயி காபி கொண்டு வா” என்று குரல் கொடுத்தார். அந்த “ராஜாயி காபி கொண்டு வா” என்ற அழைப்புதான்  தனக்கு வரவிருக்கும்  வாய்ப்புக்கு உலை வைக்கப் போகிறது என்று தனலட்சுமிக்குத் தெரியாது.

தனலட்சுமி அழைத்த அந்த ‘ராஜாயி’ கே.சுப்ரமணியத்துக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். காபி கோப்பையை நீட்டிய அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்த கே.சுப்ரமணியம் கருப்பு நிறத்தில் இருந்த அந்த அழகான  பெண்ணிடமிருந்த லட்சணங்களைப் பார்த்து   அசந்து போனார்.

“இவ்வளவு அழகாக  ஒரு வேலைக்காரப் பெண்ணா?”  என்று ஆச்சர்யப்பட்ட அவர் அதை  தனலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டபோது “ராஜாயி வேலைக்காரப் பெண் அல்ல. என் சொந்தக்காரப் பெண். அவளுக்கும் நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது..” என்று அவரிடம் சொன்னார் தனலட்சுமி. “அப்படியானால் இந்தப் பெண்ணை நாளைக்கு ஸ்டுடியோவிற்கு அழைத்து வாருங்கள். மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்” என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினார் கே.சுப்ரமணியம்.

வங்காளத்தைத் சேர்ந்த  மேக்கப் கலைஞரான  ஹரிபாபு  அப்போது சுப்ரமணியத்திடம் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் மேக் அப்பில் மிகப் பெரிய பெயர் பெற்றிருந்தவர் அவர். நட்சத்திரங்களுக்கு மேக்கப் போட ஹரிபாபு அவர்களைத் தேடிப்  போக மாட்டார். அந்த நட்சத்திரங்கள்தான் அவரைத் தேடி வருவார்கள். அந்த அளவுக்குப் புகழ் பெற்றிருந்தார் அவர்.

தியாகராய நகரில் அப்போது அமைந்திருந்த  அவரது வீட்டில் தினமும் காலை ஐந்து மணி முதல் அப்போதைய அனைத்து நடிகைகளின் கார்களும்  கியூவில் நிற்கும். வரிசைப்படி எல்லோருக்கும் மேக்கப் போட்டு படப்பிடிப்பிற்கு அனுப்பி வைப்பார் அவர்.

“ராஜாயி என்று ஒரு பெண்ணை அனுப்பி வைக்கிறேன். அவருக்கு  மேக் அப் போட்டு அனுப்பி வையுங்கள்” என்று ஹரிபாபுவுக்கு தகவல் அனுப்பினார் கே.சுப்ரமணியம்.

அவர் அப்படிச்  சொன்னதும் எஸ்.டி.சுப்புலட்சுமி மாதிரியோ, எம்.எஸ்.சுப்புலட்சுமி, குமாரி ருக்மணி மாதிரியோ ஒரு பெண் வருவார் என்று ஹரிபாபு எதிர்பார்த்துக்  கொண்டிருக்க ‘ராஜாயி’ அவரது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.

முதலில், அவரை  வேலைக்காரப் பெண் என்று நினைத்த ஹரிபாபு அவருக்குப் பின்னாலே சுப்ரமணியம் சொன்ன பெண் வருவார் என்று நினைத்தார். சிறிது நேரம் கடந்த பின்னும் யாரும் வரவில்லை என்பதால் “உன்கூட வந்த பெண் எங்கேம்மா?” என்று ராஜாயியை அவர் கேட்க  “என்னுடன் வேறு யாரும் வரவில்லையே.. நான் மட்டும்தான் வந்தேன்” என்றார் அவர்.

அடுத்து “உன் பெயர்  என்ன?” என்று அவர் கேட்ட கேள்விக்கு   “ராஜாயி” என்று அந்தப் பெண் பதில் சொன்னவுடன்தான்   கே.சுப்ரமணியம் அனுப்பி வைத்த பெண் அவர்தான் என்பது அவருக்குப் புரிந்தது.

மீண்டும் ஒரு முறை தலை முதல் கால்வரை அந்தப் பெண்ணைப் பார்த்த ஹரிபாபு “இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மேக்கப் போட்டாலும் இவரை வைத்து உங்களால் படமெடுக்க முடியாது. அதனால் ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து சொல்லுங்கள். இந்தப் பெண்ணிற்கு மேக்கப் போட்டே ஆக வேண்டுமா..?” என்று இயக்குநர் கே.சுப்ரமணியத்திற்கு போன் செய்து கேட்டார் ஹரிபாபு.

‘கச்ச தேவயானி’ படத்தில் அவர்தான் கதாநாயகி என்பதை அவரை முதன்முதலாகப் பார்த்தபோதே நான் தீர்மானித்து விட்டேன். நீ எதுவும் பேசாமல் அந்தப் பெண்ணிற்கு மேக்கப் போட்டு அனுப்பி வை” என்று அவர் சொன்னதும் கே.சுப்ரமணியத்துக்குக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல இருக்கிறது. இந்தப் பெண்ணைப் போய்  கதாநாயகி ஆக்கப் போகறேன் என்கிறாரே என்று எண்ணியபடியே ராஜாயிக்கு மேக்கப் போடத் தொடங்கினார் ஹரிபாபு.

ராஜாயிக்கு முழுவதுமாக  மேக்கப் போட்டு முடித்தபோதுதான்   சுப்ரமணியத்தின்  கணிப்பு எவ்வளவு  சரியானது என்பது  ஹரிபாபுவிற்கு புரிந்தது.

ராஜாயியை கதாநாயகி ஆக்குவதற்கு ஹரிபாபு மட்டுமின்றி  பலரிடமிருந்தும் சுப்ரமணியத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவர்கள் எல்லோரது  எதிர்ப்புகளையும்  அலட்சியப்படுத்திவிட்டு அவருக்கு ‘ராஜகுமாரி’ என்று அழகான பெயரைச்  சூட்டி ‘கச்ச தேவயானி’ படத்தில் அவரைக்  கதாநாயகியாக்கினார்  கே,சுப்ரமணியம்.

‘கச்ச தேவயானி’ படத்தைப் பார்த்த  எல்லா ரசிகர்களையும்  தனது  வசிகரமான தோற்றத்தாலும், தேர்ந்த நடிப்பாலும் ஒரே நாளில் கட்டிப் போட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.

அவருடைய காந்தக் கண்களும், கவர்ச்சிப்  புன்னகையும்  ரசிகர்களைக்  கிறங்கடித்தன. அவர் அழகிலே  மயங்கி விழுந்த ரசிகர்கள் பலரால்  அதிலிருந்து மீளவே முடியவில்லை. அவரது கட்டான உடலழகைப்  பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரும்பத் திரும்ப தியேட்டருக்குப் படை எடுத்தனர். ஒரே இரவில்  தமிழ் சினிமா உலகின்  ‘கனவுக் கன்னி’யானார் டி.ஆர்.ராஜகுமாரி.

‘கச்ச தேவயானி’ படம்தான்  டி .ஆர்.ராஜகுமாரி நடித்து வெளியான முதல் படம் என்ற போதிலும், அதற்கு முன்னரே அவர் இரண்டு படங்களில் ‘ராஜாயி’ என்ற பெயரில்  நடித்திருந்தார்.

அவர் நடித்த முதல் படமான ‘குமார குலோத்தங்கன்’ என்ற படம் ‘கச்ச தேவயானி’  வெளியாகி அவர் புகழ் பெற்றதற்குப் பின்னாலே ‘கச்ச தேவயானி’ புகழ் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ‘குமார குலோத்தங்கன்’ என்ற விளம்பரத்துடன்  அந்தப் படம் வெளியாகியது.

பத்து ஆண்டுகள் தமிழ்த் திரையுலகை ஆண்ட டி.ஆர்.ராஜகுமாரி பின்னர் குணச்சித்திர பாத்திரங்களுக்கு மாறினார். அவரது சகோதரரான  டி.ஆர்.ராமண்ணா குலேபகாவலி, பெரிய இடத்துப் பெண், பறக்கும் பாவை, பணம் படைத்த்தவன் என்று பல வெற்றிப் படங்களைத்  தயாரித்து, இயக்க பக்க பலமாக இருந்தவர் ராஜகுமாரிதான்.

தமிழ்த் திரையுலகின் கவர்ச்சிக் கன்னியான சரோஜாதேவி, டி .ஆர்.ராஜகுமாரி நடித்த ‘கச்ச தேவயானி’யின் கன்னடப் பதிப்பில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் எம்.ஜி.ஆர். முதன்முதலாக சரோஜாதேவியை சந்தித்தார்.

எம்.ஜி.ஆருடன் ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவரும் பின்னர் அவரது வாழ்க்கைத் துணைவியாகி தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்தவருமான வி.என்.ஜானகியை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமையும் சுப்ரமணித்துக்கே சொந்தமானது.

அவரது இயக்கத்தில் உருவான ‘அனந்த சயனம்’ படத்தில் அறிமுகமான வி.என்.ஜானகியை இயக்குநர் கே.சுப்ரமணியமும்  அவரது இரண்டாவது மனைவியுமான எஸ்.டி.சுப்புலட்சுமியும்  தங்களது சொந்த மகளைப் போலவே நடத்தினார்கள்.

எம்.ஜி.ஆரை. தீவிரமாகக் காதலித்த வி.என்.ஜானகியின் காதலை  எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவியான  சதானந்தவதி மனமார ஏற்றுக் கொண்டு  ஜானகிக்கு தனியாக ஒரு வீடு எடுத்துக் கொடுத்து, அங்கே அவருடன் இல்லற வாழ்க்கை நடத்தும்படி  எம்.ஜி.ஆருக்கு  யோசனை கூறினார். 

அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு லாயிட்ஸ் ரோட்டில் தான் சதானந்தவதியுடன் வாழ்ந்து வந்த வீட்டுக்கு எதிரே இருந்த தெருவில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஜானகியோடு தனது இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

ஒன்றாக வாழ்க்கை நடத்தியபோதிலும் அப்போது அமுலில் இருந்த இரு தார தடைச் சட்டம் காரணமாக  எம்.ஜி.ஆரால் வி.என்.ஜானகியை  முறையாக மணந்து கொள்ள முடியவில்லை.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவியான சதானந்தவதி இறந்த பிறகு  எம்ஜிஆர்-ஜானகி ஆகிய இருவரும் ராமாபுரம் தோட்டத்திலே    வாழத் தொடங்கினார்கள்.

ஆனால், அப்போதும் அவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடக்கவில்லை. முறைப்படி என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் கேட்க சங்கடப்பட்ட வி.என்.ஜானகி எம்.ஜி.ஆரின்  வழிகாட்டியான இயக்குநர் கே.சுப்ரமணியத்தை சந்தித்தார்.

எம்.ஜி.ஆரும், ஜானகியும் திருமணம் செய்து கொள்ளாமலே  வாழ்க்கை நடத்தி வருவதை கே.சுப்ரமணியம் நன்கு அறிவார் என்பதால் ஜானகி விளக்கமாகச்  சொல்லாமலே அவரது பிரச்னையைப் புரிந்து கொண்ட அவர் உடனே எம்.ஜி.ஆரை., அழைத்து அவர்களது திருமண உறவை பதிவு செய்யச் சொன்னார்.

எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கையில் சுப்ரமணியம் அவர்களின் பேச்சுக்கு மறு பேச்சு சொல்லி அவருக்கு வழக்கமில்லை என்பதால் உடனே பதிவுத் திருமணத்திற்கு சம்மதித்தார். அந்தப் பதிவுத் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டவரும்  இயக்குநர் கே.சுப்ரமணியம்தான்.

எம்.ஜி.ஆர்., சந்திரபாபு தொடங்கி எண்ணற்ற கலைஞர்களுக்கு அவர்களுடைய திரை வாழ்க்கையில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் ‘காட் பாதராக’ இருந்த  பெருமை இயக்குநர் கே.சுப்ரமணியத்துக்கு மட்டுமே உண்டு.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News