Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சின்னஞ்சிறு கிளியே – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் இந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தைத் தயாரித்திருக்கிறார்..!

இந்தப் படத்தில் செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை, விக்கிரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன், இசை – மஸ்தான் காதர், படத் தொகுப்பு – கே.டி.குமரேஷ், கலை இயக்கம் – ராஜூ, எழுத்து, இயக்கம் – சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

இப்படம் ஒரு தந்தைக்கும், மகளுக்கான பாசத்தோடு, தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத் துறையில் இருக்கும் மக்கள் விரோதச் செயல்களை வெளிப்படுத்தும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது.

இப்படம் மக்கள் பார்வைக்கு போவதற்கு முன்பேயே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த அறிமுக இயக்குர் விருது

சிறந்த குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்பட விருது

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநருக்கான விருது

சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருது

சிறந்த இயக்குநருக்கான ஸ்பெஷல் ஜூரி விருது

போன்ற பல்வேறு விருதுகளை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் வென்றுள்ளது.

ட்ருக் சர்வதேச திரைப்பட விழாவில் அவுட் ஸ்டேண்டிங் அக்சீவ்மெண்ட் விருதினை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில்நாதன்.

பிரசவத்தின்போது, மருத்துவமனையில் சாண்ட்ரா இறந்துவிடுகிறார். தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். மகளுக்கு சிட்டுக் குருவி’ என வித்தியாசமாக பெயரிட்டு அதற்கு சூப்பரான விளக்கமும் கொடுத்துள்ளார்.

அந்த மகள் 6 வயதில் இருக்கும்போது, மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். சில மணி நேரங்களில் கிடைத்தாலும் மகளின் முதுகெலும்பிலிருந்து எலும்பு மஜ்ஜையை ஒரு மர்ம கும்பல் திருடியதை அறிகிறார்.

அவளைக் கடத்தியவர்கள் யார் என்று விசாரிக்கத் துவங்க.. இப்படி விசாரித்தவர்களே காணாமல் போன கதையும் செந்தில்நாதனுக்குத் தெரிய வருகிறது. இதையறியும் வேலையில் தீவிரமாக இறங்குகிறார் செந்தில்நாதன்.

இறுதியில், செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்..? எதற்காக கடத்தினார்கள்..? மகளை செந்தில்நாதன் கண்டுபித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். மகளை ஸ்கூல் சேர்க்கும் காட்சி முதல் இவரின் வித்தியாச பார்வை புலப்படுகிறது. எந்த ஹீரோயிசமும் இல்லாமல் சராசரி ஆளாக தன் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார் செந்தில்நாதன்.

பொறுப்பான அப்பாவாக மட்டுமில்லாமல் சமூக பொறுப்புள்ள மனிதனாகவும் உயர்ந்து நிற்கிறார். ஆனால் முகத்தில் சிரிப்பைத்தான் அவ்வளவாக பார்க்க முடியவில்லை. காதல் காட்சியில்கூட அப்படித்தான் தோன்றியிருக்கிறார்.

நாயகியாக வரும் தெத்துப் பல் அழகியான சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார்.

செந்தில் நாதனின் பாட்டியான குலப்புள்ளி லீலா நிறைய காட்சிகளில் வந்து யதார்த்த பாட்டியாக நடித்துள்ளார். இவர்களுடன் 2-ம் நாயகியான அர்ச்சனா சிங், சாண்ட்ராவின் தம்பி இருவரும் ஓரளவுக்கு நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி நடிப்பிலும், அழகிலும், தோற்றத்திலும் நம்மைக் கவர்கிறார். தந்தையை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார்.

வயதான அப்பாவான கவிஞர் விக்கிரமாதித்யன் மகனுடன் மல்லுக்கட்டும்போதும், பேத்தியுடன் சேர்ந்து டிராமா போடும்போது புன்னகைக்க வைத்திருக்கிறார்.

மஸ்தானின் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். இதுவே படத்திற்கு சோதனையையும் கொடுத்திருக்கிறது.

முதல் பாதி திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில்தான் மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். கதையில் இருக்கும் வலு, திரைக்கதையிலும்,  கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அதிகம் இல்லை.

இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது. பல விருது படங்கள் ஆவணப் படங்கள் போல் இருக்கும். ஆனால், இப்படம் அதுபோல் இல்லாமல் இருப்பதுதான் சிறப்பு.

- Advertisement -

Read more

Local News