Tuesday, May 17, 2022
Home திரை விமர்சனம் அன்பறிவு - சினிமா விமர்சனம்

அன்பறிவு – சினிமா விமர்சனம்

சத்யஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் தயாரித்துள்ள திரைப்படம் அன்பறிவு’.

இந்தப் படத்தில் நடிகர் ‘ஹிப்ஹாப்’ ஆதி நாயகனாக நடித்துள்ளார். மேலும், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வசனத்தை பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E.ராகவ் படத் தொகுப்பு செய்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இதுவரையிலும் தமிழில் வெளிவந்திருக்கும் இரட்டை வேடப் படங்களில் இருந்து சில காட்சிகளை சுட்டுச் சுட்டு புதிய தோசைக்கல்லில் பழைய மாவின் தோசையாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். எந்தப் புதுமையும் இல்லை.

மதுரை அருகில் இருக்கும் ‘அரசகுளம்’ உயர் சாதியினர் அதிகம் குடியிருக்கும் ஊர். இந்த ஊரின் தலைக்கட்டு, நாட்டாமை, தலைவர் எல்லாமே முனியாண்டி’ என்னும் நெப்போலியன்தான்.

இந்த ஊரின் பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஊர் ‘ஆண்டிபுரம்’. இந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இரண்டு ஊருக்கும் தீராப் பகைதான். 35 வருடங்களாக கோவில் தேர்கூட ஓடாமல் இருக்கிறது. “தேரில் அவர்கள் கை வைக்கக் கூடாது” என்று அரசகுளத்தினர் வீம்பு பிடிக்க.. “தேரை நாங்களும் இழுப்போம்” என்று ஆண்டிபுரத்துக்காரர்கள் சொல்ல அப்படியே காலமும் உருண்டோடியிருக்கிறது.

இப்போது முனியாண்டியின் மகளான லட்சுமி என்னும் ஆஷா ஷரத், ஆண்டிபுரத்தைச் சேர்ந்த சாய்குமாரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொள்கிறார். முதலில் இதை எதிர்க்கும் நெப்போலியன் பின்பு ஒரே மகள் என்பதால் ஏற்றுக் கொள்கிறார்.

இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் தனது மருமகனை தனது வாரிசாக நிறுத்தப் போவதாக நெப்போலியன் சொல்ல.. இதைக் கேட்டு நெப்போலியனிடம் வேலை பார்க்கும் விதார்த் அதிர்ச்சியாகிறார்.

இவர் சாய்குமாருக்கு நெருங்கிய நண்பராக இருப்பதால் நண்பனின் வளர்ச்சி இவருக்குப் பிடிக்கவில்லை. நெப்போலியனிடமும், சாய்குமாரிடமும் கோள் மூட்டி இருவருக்குமிடையே சண்டை ஏற்படுத்திவிடுகிறார்.

ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சாய்குமார் ஓடிவிட.. இன்னொரு குழந்தை கிராமத்திலேயே ஆஷாவிடம் தங்கிவிடுகிறது. காலங்கள் உருண்டோட இப்போது 25 வருடங்கள் கழித்து திரைக்கதை விரிகிறது.

கிராமத்தில் இருக்கும் அண்ணனான ‘அன்பு’ தாத்தாவை போலவே சாதியத் தலைவனாக வரும் அளவுக்கு கெத்தாக திரிகிறார். கனடாவில் பெரும் கோடீஸ்வரராக இருக்கும் சாய்குமாரிடம் வளரும் ‘அறிவு’ தனது அம்மா மீது பாசம் கொண்டவராக வளர்ந்திருக்கிறார்.

தனது அம்மா இறந்துவிட்டார் என்றே நினைத்துக் கொண்டிருந்த அறிவிடம் அம்மா இன்னமும் உயிருடன் ஊரில் இருப்பது தெரிய வர.. அம்மாவைப் பார்க்கத் துடியாய் துடித்து ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் குடும்பத்தில் சேர முடியாமல் போகிறது.

ஆனால் அன்புவும், அறிவும் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். பிரிந்து போன குடும்பத்தை ஒன்று சேர்க்கப் போவதாகச் சொல்லி அதற்கான வேலைகளில் இறங்குகிறார்கள். அதை செய்து முடித்தார்களா..? இ்ல்லையா..? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா?.. என்பதுதான் இந்த அரதப் பழசான கதையின் முடிவு..!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இருந்து ‘வேல்’ படம் வரையிலும் பல படங்களில் நாம் பார்த்த இரட்டையர்கள் இடம் மாறுவதால் ஏற்படும் மாற்றங்கள்தான் இந்தப் படத்தின் திரைக்கதை. ஆனாலும் அந்தப் படங்களில் இருந்த சுவையான திரைக்கதை இந்தப் படத்தில் துளியும் இல்லை.

இது போன்ற கமர்ஷியல் படங்களில் என்ன வகையான பார்மெட் இருக்குமோ அதையேதான் இந்தப் படத்திலும் அப்படியே வைத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் ராம்.

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ஆதி, தனது தோற்றத்தில்கூட வித்தியாசத்தைக் காட்ட முனையவில்லை. நடிப்பிற்கா துளியும் மெனக்கெடாமல் தூங்கியெழுந்து வந்து அப்படியே கேமிரா முன்பு நின்று நடித்திருக்கிறார் போலும்..!

சிரிப்பது, தெனாவெட்டாக பார்ப்பது, சண்டை போடுவது, நடனம் ஆடுவது இது மட்டும்தான் நடிப்பு என்று நினைத்துவிட்டால் போலிருக்கிறது. 25 வருடங்கள் கழித்து அம்மாவை முதன்முறையாக சந்திக்கும் காட்சியில்கூட நமக்கு ஒரு பீலிங்கும் வராத அளவுக்கு நடித்திருக்கிறார் ஆதி. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மதுரை பாஷையை அவ்வளவு சீக்கிரமாக யாரும் கற்றுக் கொண்டு பேசிவிட முடியாது. அந்த ஸ்லாங்கிற்குள் வார்த்தைகளை அடக்குவது என்பது பிறவியில் இருந்தே வர வேண்டும். ஏதோ கொஞ்சம், கொஞ்சம் இழுத்து இழுத்துப் பேசினால் அது மதுரை ஸ்டைல் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..

நாயகிகள் இருவருக்கும் வேலையே இல்லை. டூயட்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நெப்போலியன் தனது வீர தீர பராக்கிரம சாதிய பெருமைகளைப் பேசுவதற்கு பெரும்பாடு பட்டிருக்கிறார்கள். ஆஷா ஷரத்தை அழுக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவரை இளமையாகப் பார்க்க முடியவில்லை. அல்லது ஒப்பனை சரியில்லை போலும்..!

சாய்குமாரின் டயலாக் டெலிவரியும், மாடுலேஷனும், குரலுமே நடித்திருக்கிறது. பாசத்தைக் கொட்டும் அப்பாவாக அவர் தனது நடிப்பை காண்பித்திருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் விதார்த்துதான். பல படங்களில் நாயகனாக நடித்து வரும் வேளையில் இப்படியொரு படத்திலும் வில்லத்தனத்தைக் காட்டவும் முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்தின் பலமாக இருக்கிறது. மதுரை ஏரியாவை வளைத்து வளைத்துக் காட்டியிருக்கிறார்கள். கனடா என்று சொல்லி ரஷ்யாவில் படம் பிடித்திருப்பது தெரிகிறது. இருந்தும் கனடாவைப் போலவே பனி பிரதேசமாக ரஷ்யா இருக்கும் என்பதால் அங்கே படப்பிடிப்பை நடத்தி சமாளித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு காட்சிகளை படமாக்கியவிதமும் அழகுதான்.

சண்டை காட்சிகளில் கலக்கலாக படமாக்கியிருக்கிறார்கள். ஆதியின் பின்னணி இசையில் எதுவுமில்லை. படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளில்கூட அந்த பீலிங்கை வர விடக்கூடாது என்பதை மனதில் வைத்தே இசையமைத்திருக்கிறார் போலும்..!

பாடல்களில் அரக்கியே’ பாடல் மட்டுமே லேசாக முணுமுணுக்க வைத்திருக்கிறது. படத் தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் கருணை மனதுடன் படத்தில் கத்திரியை போட்டிருந்தால் ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும்.

படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சாதிய பிரச்சினையில் தாழ்த்தப்பட்ட மக்களை மட்டம் தட்டும்படியான வசனங்களை அதிகமாக வைத்தது ஏன் என்று தெரியவில்லை. நெப்போலியன் பேசும் வசனங்கள் அனைத்துமே அவரது சாதிப் பெருமையைப் பேசும் விஷப் பூச்சுக்கள். இங்கே சாதிய பிரச்சினையை அப்படியே மெல்ல அமுக்கி குடும்பப் பிரச்சினையாகவும் மாற்றியிருக்கிறார் இயக்குநர்.

எப்போதும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்களை அப்படியேதான் வைத்திருக்க முயல்கிறது இன்றைய சாதிய பிடிமானம். அதை உறுதி செய்வதுபோல தானே கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்த சாய்குமாரின் வாயாலேயே “நான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு மாமா என்னை சரி சமமாக நடத்தி  என்னை அவரது வீட்டுக்குள் கவுரமாக நடத்தியதுதான்..” என்று மேடையில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.

கிளைமாக்ஸ் காட்சியில் நெப்போலியனின் குடும்பத்தினர் அனைவருமே மேடையில் ஏறி தங்கள் குடும்பப் பெருமையைப் பேசுவதெல்லாம் மறைமுகமாக அவர்களின் சாதிப் பெருமையைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு தளமாக அமைந்துவிட்டது. இயக்குநர் சாதிய ரீதியாக யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கதையை எடுத்திருக்கிறார் போலும்..!

படத்திலும் நிறைய லாஜிக் எல்லை மீறல்கள். இரண்டே இரண்டு கிராமத்திற்கு ஒரு எம்.எல்.ஏ. தொகுதியாம். படத்தின் வில்லனான விதார்த் ஒரு அமைச்சர். ஆனால் அவருக்கு நெப்போலியனின் குடும்பப் பிரச்சினைகளை சமாளிப்பது, ஊரில் இருக்கும் சின்ன பசங்களுக்கு இடையே பஞ்சாயத்து செய்வது மட்டும்தான் வேலையாம்.. இதெல்லாம் நல்லவா இருக்கு இயக்குநரே..?!

குடும்பக் கதை என்று சொல்லி கடைசியில் சாதீய விஷத்தைத் தூவியிருக்கிறார் இயக்குநர்..!

RATING : 2.5 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'குஷி'. இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி...

‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEO PICTURES ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி.’ இந்தப் படத்தில் உதயநிதி...

சத்யராஜ், விஜய் ஆண்டனி, பாரதிராஜா நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது

நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கும் புதிய படம் ‘வள்ளி மயில்’. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா...

“ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்...