திரைப்பட நடிகரான ஆனந்த்ராஜ் 1984-ம் ஆண்டில் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்ற மாணவர். இவருடன் சக வகுப்புத் தோழராக படித்தவர் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகன் சிவ்ராஜ் குமார்.
ஆனந்த்ராஜ் முதன்முதலாக ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படம் மூலமாகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார்.
அந்த அறிமுக வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
“நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்து வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய பேட்ச்சில் பிராசசிஸிங் பிரிவில் படித்த ராஜனுக்கு இயக்குநராகவும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படம்தான் நடிகர் கார்த்திக்கையும், ராகினியையும் இணைத்து வைத்த ‘சோலைக்குயில்’ திரைப்படம். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
அந்தப் படத்தின் துவக்க வேலைகளிலேயே நான் ராஜனுடன் பணியாற்றினேன். முழு கதையும், திரைக்கதையும் எனக்குத் தெரியும். எனக்கும் அந்தப் படத்தில் ஒரு வேடம் கொடுத்திருந்தார் ராஜன்.

மனம் முழுக்க கனவுடன் படப்பிடிப்புக்காக நான் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது. ஊட்டிக்கு படக் குழுவினருடன் போய் சேர்ந்தோம். ஹோட்டலில் தங்கினோம். மறுநாள் காலையில் நான் மேக்கப்பெல்லாம் போட்டுத் தயாராக அமர்ந்திருந்தேன்.
அந்த நேரம்தான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய வேடத்தில் தன்னுடைய நண்பரான ஒரு நடிகர்தான் நடிக்க வேண்டும் என்று நாயகன் கார்த்திக் விருப்பப்பட்டாராம். இதனால் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
மேக்கப்பை கலைக்காமலேயே அப்படியே ஷூட்டிங் ஸ்பாட்டின் அருகேயுள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் போய் அமர்ந்து வாய்விட்டு கதறி அழுதேன். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தும்.. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டதே எண்றெண்ணி அழுதேன்.
ஆனால், இதனால் கார்த்திக் மீது இப்போதுவரையிலும் எனக்குக் கோபமில்லை. அவர், அவரது நண்பருக்கு உதவி செய்திருக்கிறார். அவ்வளவுதான்.. இதற்குப் பிறகு நானும் கார்த்திக்கும், பல படங்களில் சேர்ந்து நடித்துவிட்டோம். கார்த்திக் இப்போதும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்.
அந்தப் படம் கை நழுவிய பிறகு பல இயக்குநர்களிடத்தில் ஸ்கிரிப்ட் வேலையில் உதவியாக இருந்தேன். அப்போது தமிழ்த் திரையுலகத்தின் முக்கால்வாசி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பாம்குரோவ் ஹோட்டலில்தான் ரூம் போட்டிருப்பார்கள். அங்கேதான் நானும் இருந்தேன்.
அந்தச் சந்தர்ப்பத்தில்தான் இயக்குநரும், கதை, வசனகர்த்தாவுமான சண்முகப்பிரியனை அந்த ஹோட்டலில் சந்தித்தேன். அவர் அப்போதுதான் ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படத்தைத் துவக்கியிருந்தார். ‘இந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க பண்றீங்களா..?’ன்னு கேட்டார். அப்படி, அவர் மூலமாகத்தான் அந்தப் படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் அறிமுகமானேன்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே ‘மணப்பாடு’ என்னும் ஊரில் நடந்தது. அப்போதும்கூட அந்தக் காட்சி எடுக்கப்படும்வரையிலும் நான் அதை நம்பாமல்.. ‘கடவுளே.. வேற யாரும் எனக்குப் பதிலா வந்திரக் கூடாது’ன்னு வேண்டிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா நானே நடித்து தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிவிட்டேன்.
இந்தப் படத்துக்குப் பிறகு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் உருவான ‘உறுதி மொழி’ படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் பிரபு-கார்த்திக் இருவரும் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களுமே சக்ஸஸாக ஓடியதால்.. என்னை அனைவரும் கவனித்தார்கள். இதன் பின்புதான் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
ஆனாலும், என்னுடைய நடிப்பு கேரியரின் துவக்கத்திற்கு மிக முக்கியமான மறைமுகக் காரணமாக இருந்தவர் நடிகர் சத்யராஜ் ஸார்தான். அவர் அப்போதுதான் வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து நாயகனாக மாறினார்.
இதனால் வில்லன் கதாபாத்திரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் நான் உள்ளே நுழைய எனக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதற்காக சத்யராஜ் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..” என்று சிரித்தபடியே சொன்னார் நடிகர் ஆனந்த்ராஜ்.