‘வலிமை’ படம் பற்றி அப்டேட் ஏதாவது கிடைக்குமா என்று பத்திரிகையாளர்களும், ‘தல’ அஜீத்தின் ரசிகர்களும் ஏங்கிக் கொண்டிருக்க நேற்றிலிருந்து ஒரு வதந்தி கிளம்பி தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்கின்போது அஜீத் காயம்பட்டதாகவும், அதனால் தற்போது அவர் ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கம்போல வதந்திகள் தீயாய் பரவி வருகின்றன.

ஆனாலும் எப்படியோ ‘வலிமை’க்கு விளம்பரம் கிடைத்து ‘வலிமை’ பற்றிப் பேசிக் கொண்டேயிருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட தயாரிப்பாளர் தரப்பு இது பற்றி எதுவும் கருத்து கூறாமல் ஒதுங்கியிருக்கிறது.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன..?
ஹைதராபாத் படப்பிடிப்பில் செட்டுக்குள் நடைபெற்ற ஒரு சண்டை காட்சியில் அஜீத்திற்கு காயம் பட்டதென்னவோ உண்மைதான். இடது கையின் முழங்கையின் பின்பக்கத்தில் ரத்தக் காயம் பதியும் அளவுக்கு ஏற்பட்டது அந்த விபத்து.

சட்டென்று அதற்கான சிகிச்சையையெடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்பு உடனேயே அந்தக் காட்சியில் திரும்பவும் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார் அஜீத். ‘இது நடந்தது 7 நாட்களுக்கு முன்பாக’ என்கிறது படக் குழு.
கடந்த 15-ம் தேதியே அந்த ஷெட்யூல் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து மொத்தப் படக் குழுவும் சென்னைக்குத் திரும்பிவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
இனி அடுத்தக் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டிலா.. அல்லது இங்கேயாவா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்..!