இந்தக் கொரோனா லாக் டவுனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமன்றி நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் சோதனையைக் கொடுத்திருக்கிறது.
திரைப்படத் துறையே நசிந்து போய் கிடக்கும் இந்தச் சூழலில் ஏற்கெனவே தயாரிப்பில் இருந்த திரைப்படங்கள் மட்டுமே இப்போது படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புதிதாக திரைப்படங்களுக்கு பூஜை போடுவது அறவே நின்றுவிட்டது.
ஏனெனில், புதிய தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி செய்ய வழக்கமான பைனான்ஸியர்கள் தற்போது மறுத்து வருகிறார்கள். ஏற்கெனவே 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகை தமிழ்த் திரையுலகத்தில் தற்போது புழங்கி வருகிறது. இத்தொகையை அவர்கள் எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் மீண்டும் கடன் தொகைகள் திரையுலகத்திற்குள் இறக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நேரத்தில் தமிழ்த் திரைப்பட துறையில் புகழ் பெற்ற, மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது தயாரிப்புத் தொழிலை நிறுத்தியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
2006-ம் ஆண்டில் ‘திருட்டுப் பயலே’ என்ற படத்தில் இருந்து தனது திரைப்பட தயாரிப்புத் தொழிலைத் துவங்கிய ஏ.ஜி.எஸ். நிறுவனம் சென்ற வருடம் தயாரித்த ‘பிகில்’ படம்வரையிலும் 21 திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. 10 திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளது. சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும் நடத்தி வந்தது.
இந்த நிலையில் இந்தக் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்குதலினால் கடந்த 6 மாத காலமாக தியேட்டர்கள் மூடப்பட்டு திரைப்பட தொழில் முடக்கப்பட்டதினால் மிகப் பெரிய நஷ்டத்தைச் சம்பாதித்துள்ளது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.
மேலும், அந்த நிறுவனம் தயாரித்த திரைப்படங்களின் மூலமாகவும் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை. கடைசியாக அந்த நிறுவனம் தயாரித்த ‘பிகில்’ படத்தின் மூலம் என்ன கிடைத்தது என்பது பற்றி அவர்களுக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லை. அப்படியொரு அதிர்ச்சியான ரிசல்ட் ‘பிகில்’ படத்தின் மூலம் அந்த நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்தச் சூழலில் இனிமேல் தயாரிப்பு என்ற பெயரில் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்து அதனை அதே அளவுக்கு திரும்ப எடுப்பது நிச்சயமாக சூதாட்டத்திற்கு ஒப்பானது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டிருக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தங்களது தயாரிப்புப் பிரிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.