Friday, April 12, 2024

பிரபல நடிகர் விவேக் காலமானார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகத்தின் பிரபலமான நகைச்சுவை நடிகரான விவேக் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59.

நேற்றைக்கு கடும் மாரடைப்பு காரணமாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

விவேக் 1987-ம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இன்று காலமானார்.

அவரது நடிப்பில் பூமகள் ஊர்வலம்’, ‘வாலி’ உள்ளிட்ட சில படங்கள் அவரது நகைச்சுவையினாலேயே பெரும் கவன ஈர்ப்பை பெற்றன. விவேக் பகுத்தறிவு பேசிய ‘திருநெல்வேலி’ படம்தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘லவ்லி’, ‘மின்னலே’, ‘யூனிவர்சிட்டி’, ‘ரன்’, ‘அழகி’, ‘தூள்’, ‘படிக்காதவன்’, ‘விஐபி’ என புகழ் பெற்ற பல திரைப்படங்களின் வாயிலாக எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றிருந்தார் விவேக்.

தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது மற்றும் ‘கலைமாமணி’ ‘சின்னக் கலைவாணர்’, ‘ஜனங்களின் கலைஞன்’ உட்பட பட்டங்கள் பல பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக்.

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அவருடைய இறப்புக்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் மரக் கன்றுகளை நடுவதை ஒரு இயக்கமாகவே நடத்திக் காட்டியவர். இன்றுவரையிலும் பல கோடி மரக் கன்றுகளை நடுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

அவருடைய மறைவுக்கு பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அவருடைய உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது ரசிகர்களும், பொதுமக்களும் அவரது வீட்டில் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News