இன்று சென்னையை அடுத்த பனையூரில் இருக்கும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆளுயர சிலை நிறுவப்பட்டது.
நடிகர்யின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று பிற்பகல் நடைபெற்றது.
இதற்கான அழைப்பு நேற்றே அனைத்து இயக்கப் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று காலையே மன்றப் பொறுப்பாளர்கள் பலரும் வேன் பிடித்தும், பஸ் பிடித்தும் சென்னை வந்து சேர்ந்துவிட்டனர். இவர்களுடன் விஜய்யின் ரசிகர்களும் தனியாக படையெடுத்து வந்துவிட்டனர்.
வந்தவர்களில் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து வந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் முழு உருவச் சிலையையும் கொண்டு வந்துவிட்டார்கள். அந்தச் சிலை அந்தத் தலைமை அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டது. இந்தச் சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
நடிகர் விஜய்க்கு சிலை வைப்பது புதிதில்லை. ஏற்கெனவே ’மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பெங்களூரில் விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது விஜய் தனக்கு சிலை அமைத்துள்ளதை ஏற்றுக் கொள்கிறாரா.. இல்லையா.. என்பதை பொறுத்துதான் அடுத்தக் கட்ட நகர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை விஜய் இதற்கு ஆட்சேபிக்காமல் ஒத்துக் கொண்டால் நிச்சயமாக மாநிலம் முழுவதும் விஜய்யின் சிலைகளை அவரது ஆதரவாளர்கள் நிறுவுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.