“நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்” என்று நடிகர் ராமராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் ராமராஜன் மிக நீண்ட வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போதுதான் ‘சாமான்யன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் பற்றி அவர் அளித்த பேட்டியில்தான் கீர்த்தி சுரேஷையும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
ராமராஜன் அளித்த பேட்டியில், “தமிழ் சினிமாவில் இப்போது எல்லோருமே நன்றாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் டிவியில்தான் பாடல்கள், காமெடி காட்சிகளையெல்லாம் பார்க்கிறேன்.
சினிமாவில் வரும் ஹீரோக்கள் பல கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டித்தான் அந்த இடத்தில் வந்து நிற்கிறார்கள். கஷ்டப்படாமல் யாரும் வந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் ஒருத்தரோட இடத்தை இன்னொருத்தரால் நிரப்பிட முடியாமல் இருக்கிறது.
இங்கே திறமை, உழைப்பு எல்லாவற்றையும் தாண்டி நேரமும், காலமும் சரியா அமையணும். அந்தக் காலத்து கதாநாயகிகளில் சரோஜாதேவி, சாவித்திரி, கே.ஆர்.விஜயா என்று பலரும் இன்றும் தமிழகத்து மக்கள் மனதில் இருக்கிறார்கள்.
இப்போது அப்படிப்பட்டவராக கீர்த்தி சுரேஷ்தான் இருக்கிறார். காரணம் என்னவென்றால், அவருடைய ‘நடிகையர் திலகம்’ படம். அதில் அவரின் நடிப்பு அவ்வளவு சிறப்பா இருந்தது. அதேபோல் மனோரமா ஆச்சியும் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அந்தப் பெருமை இப்போ யாருக்குமே இல்லை..” என்றார் ராமராஜன்.