நடிகர் பார்த்திபன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிப்பதற்குக் கூடுதல் சம்பளம் கேட்பதாகவும், நிறைய நிபந்தனைகள் விதிப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
நாம்கூட சென்ற மாதமே இந்தச் செய்தியை https://touringtalkies.co/actor-parthiban-asks-compensation-from-movie-producer/ என்ற பதிவில் கூறியிருந்தோம்.
இப்போது இது பற்றிய வதந்திகளுக்கான உண்மையான பதிலை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன்.
அந்தப் பேட்டியில், ”விஜய் சேதுபதியும் நானும், ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு சேர்ந்து நடிக்கின்ற படம் துக்ளக் தர்பார். இயக்குநர் வந்து கதை சொல்லி, சம்பளம் பேசி முடிவு செய்யும்போதே, ‘இத்தனை நாள் டேட்… இதற்குள் நீங்க முடிச்சிடப் பாருங்க’ என்று சொல்லியிருந்தேன்.
விஜய் சேதுபதியும், நானும் என்றுதான் எப்போதும் சொல்லுவேன். ஏனென்றால், இப்போது லைம் லைட்டில், மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் அவர். ஆனால், யாரையும் குறைத்து மதிப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னையும் யாரும் குறைத்து மதிப்பிட நான் இடம் கொடுப்பதும் இல்லை.
கதையைத் தேர்ந்தெடுக்கும்போதே எனக்குரிய கேரக்டர் அதில் இருக்கிறதா, எனக்கான சவால்கள் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன்.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து விஜய் சேதுபதி ஏன் நடிக்க வேண்டும்? ஏனென்றால் அதில் ஒரு பவர் இருக்கிறது. ‘இளைய தளபதி’ விஜய்யுடன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் என்று டைட்டில் பார்க்கும்போதே நமக்கு ஒரு பரபரப்பு பற்றிக் கொள்கிறது. இதில் யாரும் குறைந்து போய் விடவில்லை.
இருவருக்கும் இடையே போட்டி படத்தில் இருக்கலாம். ஆனால், இரு நடிகர்களுக்கும் வெளியே நல்ல நட்பு இருக்கிறது. மரியாதை டைட்டிலில் இருக்கிறது.
‘விஜய் சேதுபதியின் பெயரை டைட்டிலில் போடும்போது, எனக்குமான மரியாதையையும் நீங்கள் தர வேண்டும், இணையான விளம்பரங்கள் இருக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். அப்படி நீங்கள் செய்ய முடியவில்லை என்றால் என் போட்டோவை எந்த விளம்பரத்திலும் பயன்படுத்தாதீர்கள். தியேட்டருக்கு வந்து மக்கள் நான் இருக்கிறேன் எனப் பார்த்துக் கொள்ளட்டும்; என்றேன்.
‘டைட்டில் விஷயம்கூட மிஸ்டர் விஜய் சேதுபதி விரும்பினால் மட்டும் செய்யட்டும், இல்லையென்றால் வேண்டாம்’ என்றுதான் சொல்லியிருந்தேன்.
அதேபோல் 2020 ஜனவரி மாதம் முழுக்க இந்த படத்தின் ஷூட்டிங் நடப்பதாக இருந்தது. ஜனவரி 15-ம் தேதிக்கு மேல் என்னுடைய டேட்ஸை எக்ஸ்டெண்ட் செய்து இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்பில் கேட்டபோது, அந்த தேதிகளில் நான் மலையாளப் படத்தில் நடிக்க வேண்டியிருப்பதை சொன்னேன்.
‘இல்ல சார்… விஜய் சேதுபதி சாரோட டேட்ஸ் இருக்கு. அதனால அதைப் பண்ணி முடிச்சிடலாம்’ என்றார்கள். ‘அந்த மலையாள படத்தில் 15 நாள் நான் நடித்தால் போதும், ஒரு முழு படத்துக்கான சம்பளம் கிடைக்கும்’ என்று திரும்பவும் சொன்னேன். ‘இல்ல சார்… விஜய் சேதுபதி சார் டேட்ஸ் இருக்கு. அதனால நாம முடிச்சிடலாம்’ என்றார்கள்.
ஆனால், ஜனவரி 15-ம் தேதிக்கு மேல் எனக்கு இந்தப் படத்துக்கான ஷூட்டிங்கே நடக்கவில்லை. என்னுடைய தேதிகளை அவர்கள் வீணடித்துவிட்டார்கள். அதுவும் தெரிந்தே வீணடித்தார்கள். அதனால்தான் வீணடித்த தேதிகளுக்கான சன்மானம் வேண்டும் எனக் கேட்டேன்.
சம்பளம் எல்லாம் பிறகு முடிவு செய்ய வேண்டிய விஷயம். கோவிட்டுக்குப் பிறகு 30% சம்பளம் குறைக்க வேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனால், இது கோவிட்டுக்கு முன்பு நடந்த சம்பவம்.
மிக, மிக அஜாக்கிரதையாக நான் கையாளப்பட்டதால் எனக்கு ஏற்பட்ட நஷ்டம். அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. எல்லாவற்றையும் பேசி சரி செய்து இப்போது மறுபடியும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. சந்தோஷமாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கப் போகிறோம்…” என்று சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.