கடந்த இரண்டு நாட்களாக கோடம்பாக்க கிசுகிசு உலகத்தில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் பெயரும் அடிபட்டது.
அவர் ஒரு தயாரிப்பாளரிடம் “கூடுதலாக சம்பளம் கொடுத்தால்தான் நடிக்க வருவேன்” என்று சொல்லியதாகத் தகவல்கள் காற்றுவாக்கில் செய்திகள் பறந்தன.
விசாரித்தபோது பார்த்தின் சைடில் இருந்து உண்மையான தகவல்கள் வெளியானது.
விஜய் சேதுபதியுடன் பார்த்திபன் நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நடப்பதாக இருந்தது. அந்த மாதத்திலேயே பார்த்திபன் 15 நாட்கள் கால்ஷீட்டை ஒரு மலையாளப் படத்திற்குக் கொடுத்திருந்தார்.
ஆனால், ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பாளரோ “அந்த 15 நாட்கள் கண்டிப்பாக எனது படத்திற்கு வேண்டும்…” என்று வற்புறுத்தியதால் பார்த்திபனும் ஒத்துக் கொண்டிருக்கிறார். இதனால், பார்த்திபனால் அந்த மலையாளப் படத்தில் நடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் திடீரென்று விஜய் சேதுபதி ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க சென்றுவிட்டதால் அந்த ஜனவரி மாதத்தில் பார்த்திபன் கொடுத்திருந்த 15 நாட்கள் கால்ஷீட் வீணாகிவிட்டது. அதற்கடுத்து கொரோனாவும் வந்துவிட.. படப்பிடிப்புகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் துவங்க உள்ள நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பாளரிடம் பார்த்திபன் தான் மலையாளப் படத்தில் நடிக்காமல் விட்டுக் கொடு்த்ததினால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடாக ஒரு தொகையைத் தரும்படி கேட்டிருக்கிறார். “இது மாதிரியான இழப்பீடுகளுக்கு நஷ்ட ஈடு கேட்பதும், கொடுப்பதும் தொழில் தர்மம்” என்பதால் பார்த்திபன் கேட்டிருக்கிறார்.
“இதனால் அந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சுமூகமாக நான் தொடர்ந்து நடித்துத் தருவேன்.” என்கிறார் நடிகர் பார்த்திபன்.
இதைத்தான் வெளியில் பார்த்திபன் கூடுதல் சம்பளம் கேட்டதாகச் சொல்லித் திரித்துவிட்டதாக பார்த்திபனே இப்போது வருத்தப்படுகிறார்.