நடிகர் ‘நிழல்கள்’ ரவியின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படங்கள் ‘மை டியர் லிஸா’ மற்றும் ‘13-ம் நம்பர் வீடு’.
இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் நடிகர் ‘நிகழ்கள்’ ரவி பகிர்ந்து கொண்டுள்ளார்.
“1981-ம் வருடம். நான் ‘மக்கள் என் பக்கம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங். காலையில் மேக்கப் ரூமில் நான், சத்யராஜ், ரகுவரன் மூவரும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போதுதான் ‘மை டியர் லிசா’ படத்தின் இயக்குநரான பேபி என்னைச் சந்திக்க வந்தார். அறையில் இருந்த சத்யராஜ் மற்றும் ரகுவரனிடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

அவர் கதையைச் சொல்லிவிட்டு “இந்தப் படத்தின் முதல் பகுதி முழுவதும் லண்டன்ல ஷூட் பண்றோம் ஸார்” என்றார். இதைக் கேட்டவுடன் சத்யராஜூம், ரகுவரனும் அதிர்ச்சியாகிவிட்டனர்.
ஏனென்றால் அப்போதைய 1980-களில் காலக்கட்டத்தில் என்னை மாதிரியான ஹீரோக்களின் படங்களிலெல்லாம் அதிகப்பட்ச வெளிநாட்டு லொகேஷன் என்றால் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை.. இங்கேதான் இருக்கும். இவரு லண்டன்னு சொன்னவுடனேயே எனக்கும் அதிர்ச்சி.
சத்யராஜ் இதை நம்பவே இல்லை. “மச்சான்.. இதையெல்லாம் நம்பாத.. நானே இப்பத்தான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். நம்மளை பொள்ளாச்சியை தாண்டி கூப்பிட்டுட்டு போனதில்லை. உன்னை லண்டனுக்கு கூட்டிட்டுப் போறாங்களா..? நிச்சயமா நடக்காது…” என்றார்.
ஆனாலும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். என் பாஸ்போர்ட்டையெல்லாம் வாங்கிட்டுப் போயிட்டாங்க. நானும் பார்க்குறவங்ககிட்டயெல்லாம், “நான் அடுத்த மாதம் லண்டன்ல இருப்பேன்”னு சொல்லிட்டிருந்தேன்.
அப்போ ஜூன் மாதம். லண்டன்ல பனிப் பொழிவு அதிகமா இருக்கு. அதுனால அங்க ஷூட் செய்றது கஷ்டம். ஆகஸ்ட்ல வரச் சொல்றாங்கன்னு சொல்லிட்டாங்க. இடையில ஒரு மாசம் கால்ஷீட் வீணாகிரக் கூடாதேன்னுட்டு லண்டன்ல எடுக்க வேண்டிய சில காட்சிகளை ஊட்டில எடுக்கலாம்ன்னு தீர்மானித்து ஊட்டிக்குப் போனோம்.

அங்க இருந்த ஊட்டி கேட் ஹோட்டல்ல தங்கியிருந்தேன். முதல் மாடில சத்யராஜூம் தங்கியிருந்தார். என்னைப் பார்த்ததும்.. “நான்தான் சொன்னேன்ல.. அதெல்லாம் செய்ய மாட்டாங்கப்பா…” என்று கிண்டல் செய்தார். ஆனாலும், ஊட்டி ஷெட்யூல் முடிஞ்சதும், லண்டனுக்கு என்னை அழைத்துச் சென்றார் இயக்குநர் பேபி. மீதமிருந்த காட்சிகளெல்லாம் லண்டனில்தான் படமானது.
இந்தப் படம் வெளிவந்து ஹிட்டானதையடுத்து ‘13-ம் நம்பர் வீடு’ என்ற பெயரில் அடுத்தப் படத்தைத் துவக்கினார் இயக்குநர் பேபி. இதிலும் நான்தான் நாயகனாக நடித்தேன்.

இந்தப் படம் செம திரில்லர் திரைப்படம். ஒரு சுடுகாட்டையே பட்டா போட்டு வித்திட்டு போயிருவாங்க. அங்க வீடு கட்டி குடியிருக்குறவங்களை அங்க ஏற்கெனவே குடியிருந்துவரும் பேய்களெல்லாம் சேர்ந்து விரட்டும். இதுதான் கதை.
இதுக்காக ஏவி.எம். ஸ்டூடியோல அழகா செட் போட்டிருந்தாங்க. ஒரு ஷெல்பை திறந்தாலே அது வேறொரு அறைக்குள்ள போகும். அது மாதிரியெல்லாம் வித்தியாசமான கலை இயக்கம் செய்திருந்தார்கள். இந்தப் படமும் சூப்பர் ஹிட்டா ஓடுச்சு.. இந்த ரெண்டு படத்துலேயும் நடிச்ச என்னோட அனுபவங்கள் மறக்க முடியாதது..” என்று சொல்லி பெருமிதப்பட்டார் நடிகர் ‘நிழல்கள்’ ரவி.