‘நிழல்கள்’ ரவி செய்த தரமான சம்பவம்! கண்ணீர்விட்ட இயக்குநர்!

“வேலை”, “என்னவளே”, “ஜூனியர் சீனியர்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவர் தற்போது “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் யு டியுப் சேனல் ஒன்றில் பேசிய இவர், “சிறு வயதில் இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆசை. என் அம்மா கொடுத்த 600 ரூபாயை வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்தேன்.  பல நாட்களாக சென்னையில் அலைந்து திரிந்தேன்.  கையில் இருந்த காசும் கரைந்துக்கொண்டே வந்தது.

ஒரு நாள் இரவு நேரத்தில் பனகல் பார்கில் உள்ள நல்லி சில்க்ஸ் கடையின் வாசலில் நடிகர் நிழல்கள் ரவி சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்.

அவரிடம் சென்ற நான், ‘திருநெல்வேலியில இருந்து வரேன். எனக்கு சினிமாவுல நடிக்கனும்ன்னு ஆசை..  யாரை பார்க்குறதுன்னே தெரியல. எதாவது உதவி செய்ய முடியுமா?” என கேட்டேன். 

உடனே  நிழல்கள் ரவி, ‘சாப்பிட்டியா?’ என்றார். நான் ம் என பொய் சொன்னேன். ஆனால் என் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிட்ட ரவி, நூறு ரூபாய் கொடுத்து, போய் சாப்பிடு என்றார். அதோடு, நாளை எனது வீட்டுக்கு வா என முகவரியும் கொடுத்தார்.

  மறுநாள் காலை அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே எனக்கு சாப்பாடு போட்ட அவர்,  சினிமா டைரியை கொடுத்தார். அதைப் பிரித்தால் அதிலும் நூறு ரூபாய்.

‘இதில் திரைப்பட இயக்குநர்கள் முகவரிகள் உள்ளன. தேடு. நீ  நடிகனாகி விட்டால் என்னை வந்து பார்’ என கூறி அனுப்பிவைத்தார். முன்பின் தெரியாத என் மீது அவர் காட்டிய அன்பை மறக்கவே முடியாது” என்று கண்ணீர் மல்க சொன்னார், இயக்குநர் ஜெ.சுரேஷ்