இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் இயக்குநராகப் போகிறார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் கே.பாரதி ஒரு நடிகராகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தில் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தினார் அவரது தந்தையான இயக்குநர் பாரதிராஜா.
அதன் பின்பு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ’பல்லவன்’, ‘ஈர நிலம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் தமிழ்ச் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பின்பும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாகவே ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கப் போகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. ஆனால் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’, ‘ஐநா’, ‘கொலை நோக்குப் பார்வை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்திருக்கும் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் மனோஜ் பாரதிராஜா இயக்கும் முதல் படத்தைத் தயாரிக்கவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.