Friday, November 22, 2024

T.M.செளந்தர்ராஜனுக்காகவே கண்ணதாசன் எழுதிய பாடல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவுலகத்தின் பாட்டுத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்த டி.எம்.செளந்தர்ராஜனைப் பற்றிய பல சங்கேத விஷயங்கள் தமிழ்த் திரையுலகத்தில் வலம் வருவதுண்டு.

அதில் ஒன்று.. அவர் ஒரு முறை “என்னுடைய குரல் வளத்தால்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் புகழ் பெற்றனர். கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுப்பது என் குரல்தான். இசையமைப்பாளர்களை அடையாளம் காட்டுவதும் என்னுடைய குரல்தான்…” என்று பேசியதாகச் சொல்வதுண்டு.

இது குறித்து பிரபல இசைக் கலைஞரும், நகைச்சுவை நடிகருமான மதன் பாப் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் பத்திரிகையாளர், நடிகர், இயக்குநரான சித்ரா லட்சுமணனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒரு முறை டி.எம்.எஸ். தன்னுடைய குரல்தான் திரையுலகத்தில் அனைவரையும் வாழ வைக்கிறது என்பதாக பேசி வந்தார். ‘நானும், முருகனும்தான் இந்த தமிழ் உலகமே.. மத்தவங்களெல்லாம் யாரு..?’ என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் சிலரிடம் பேசியிருக்கிறார்.

இது அரசல், புரசலாக அனைத்து ஸ்டூடியோக்களிலும் காதோடு காதாகப் பேசப்பட்டு வந்தது. இது கவிஞர் கண்ணதாசனின் காதுக்கும் சென்றடைந்தது.

அந்தச் சூழலில் ஒரு படத்துக்காக பாடல் எழுத வந்தார் கண்ணதாசன். அந்தப் பாடலைப் பாடுவதற்காக டி.எம்.எஸ்ஸும் வந்தார். டி.எம்.எஸ்ஸிடம் கண்ணதாசன், “இந்தப் பாட்டை உங்களுக்காத்தான் எழுதியிருக்கேன். படிச்சுப் பாருங்க..” என்றாராம். டி.எம்.எஸ்ஸிடம் கண்ணதாசன் கொடுத்த அந்தப் பாடல்தான் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற ‘பாட்டும் நானே; பாவமும் நானே’ என்ற பாடல்.

பாடலைப் பாடிக் காட்டிய டி.எம்.எஸ்., பாடல் வரிகள் முழுவதும் தன்னுடைய பேச்சுக்கு பதிலளிப்பதாக உள்ளது என்பதை உணர்ந்தார். தன்னுடைய பேச்சுக்கு எதிர்வினையாக இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பதை உணர்ந்து சட்டென்று கண்ணதாசனிடம் ‘தப்பா எடுத்துக்காதீங்க’ என்று வருத்தம் தெரிவித்தார்..“ என்கிறார் மதன் பாப்.

- Advertisement -

Read more

Local News