‘ராஜாதிராஜா’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஒரு நாள் நான் ஏ.ஆர்.எஸ். கார்டனில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ‘பாட்ஷா’ படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு சுரேஷ் கிருஷ்ணா ஸாரிடம் இருந்து அழைப்பு வந்தது.
அந்த அழைப்புக்கு முன்பேயே “பாட்ஷா’ படத்தில் தேவன், ரகுவரன், சரண்ராஜ் மூவரும் நடிக்கின்றனர். படமும் கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. இன்னும் 10 சதவிகித ஷூட்டிங்குதான் பாக்கியிருக்கிறது…” என்கிற தகவலெல்லாம் எனக்குத் தெரியும். பின்பு எதற்கு நம்மை அழைக்கிறார்கள் என்ற யோசனையுடனேயே சுரேஷ் கிருஷ்ணா ஸாரை பார்க்க சென்றேன்.
மதிய வேளையில் இந்தப் படத்தில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு வாஹினியில் இருந்த பாட்ஷா படத்தின் செட்டுக்குப் போனேன். அங்கே மேக்கப் அறையில் ரஜினி, பாலகுமாரன், சுரேஷ் கிருஷ்ணா மூவரும் இருந்தனர். என்னிடம், “இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு. அதை இன்னும் எடுக்காமல் இருக்கோம். நீங்கதான் அதுல நடிக்கணும்…” என்றார் சுரேஷ் கிருஷ்ணா.
“என்ன கேரக்டர் ஸார்…” என்றேன். “ரஜினியை கட்டி வைச்சு அடிக்கணும்” என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. முதல் படமான ‘ராஜாதிராஜா’ல “டேய்.. வாடா.. போடா”ன்னு ரஜினி ஸாரை பேசிட்டேன். இப்போ, இந்தப் படத்துல அதையும் தாண்டி ‘கட்டி வைச்சே அடிக்கணும்’ன்றாங்களேன்னு “முடியாது.. ஆளை விடுங்க. நான் கிளம்புறேன்”னு எந்திரிச்சிட்டேன்.
அப்போ ரஜினி ஸார்.. “இருங்க.. இருங்க.. முழுசா கேளுங்க…” என்று சொல்லி உட்கார வைத்தார். பின்பு பாலகுமாரன் ஸார் என் கேரக்டர் முழுசையும் சொன்னார். அப்புறம்தான் நான் ‘ஓகே’ன்னு சொன்னேன். கிளம்பும்போது ரஜினி ஸார் காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டு “கண்டிப்பா நடிக்கிறேன் ஸார்”ன்னு சொல்லிட்டு வந்தேன்.
‘பாட்ஷா’ ஷூட்டிங்ல ஒரு நாள் சண்டை காட்சியை எடுத்து முடிச்ச பின்னாடி நான் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி மட்டும் பாக்கியிருந்தது. ரஜினி ஸார் எனக்கு முன்னாடியே கிளம்பி என்கிட்டயே ‘பை’ சொல்லிவிட்டு போனார்.
நான் அந்தக் காட்சியில் நடிக்க வேண்டி டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு நடிச்சேன். நான் அதுல பேசின ஒரு டயலாக்கை கேட்டுட்டு பின்னாடியிருந்து ஒரு குரல் பயங்கரமா சிரிச்ச சவுண்ட் கேட்டுச்சு.. பின்னாடி திரும்பிப் பார்த்தால் அது ரஜினி. கும்மிருட்டுல அடையாளம் தெரியாத மாதிரி நின்னுக்கிட்டிருந்தார்.
வீட்டுக்குப் போறேன்னு கிளம்புனவரு.. நான் நடிக்கிறதை பார்க்கணும்ன்னு இருந்து பார்த்துட்டு ரசிச்சிட்டு அதை பாராட்டிட்டும் போனாரு.. அந்தப் படம் ரஜினி ரசிகர்களிடத்தில் என்னை இன்னும் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்துச்சு..” என்றார் நடிகர் ஆனந்த்ராஜ்.