தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணான விட்ஜா என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு, பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக தமிழகக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஆன் லைனில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த குற்றப் பிரிவு போலீஸார், நடிகர் ஆர்யாவைப் போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை, புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை கடந்த 24-ம் தேதியன்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கிற்கும் ஆர்யாவிற்கும் தொடர்பில்லை என மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கைதான இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஜாமீன் கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றத்தில் அவர் வாதிட்டது மீண்டும் இந்த வழக்கில் ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. இதனால் வரும் வியாழக்கிழமைக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞரான ஆனந்தன் பேசும்போது திடுக்கிடும் சில தகவல்களைத் தெரிவித்தார்.
“இந்த வழக்கில் ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகள்தான். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயர்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
நடிகர் ஆர்யா தனது செல்போன் எண்ணில் ஜெர்மனி பெண்ணிடம் பேசி, தனது மேலாளர் முகமது அர்மான், மற்றும் ஹூசைனி இருவரின் வங்கி கணக்கிலும் அந்தப் பெண்ணின் பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இதனால் உடனடியாக ஆர்யாவை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்ய வேண்டும்.
கடந்த 24-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் அளித்த அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் “இந்த வழக்குக்கும் ஆர்யாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆர்யாவின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக…” மட்டுமே தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது முதல் தகவல் அறிக்கையில் ஆர்யா முதல் குற்றவாளியாகவும் அவரது தாயார் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அளித்த செய்தி குறிப்பில் ஏன் குறிப்பிடவில்லை. ஆர்யாவுக்கு சைபர் கிரைம் போலீசார் ஆதரவாக செயல்படுகிறார்களா…?..” என்று வழக்கறிஞர் ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்யா தரப்பினர் இதுவரையிலும் இதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.