இன்று மாலை வரையிலும் அமைதியாக இருந்த திரைத்துறை, அரசியல் துறை இரண்டையும் கலந்து கட்டி அடித்ததை போன்ற ஒரு செய்தி திடீரென்று மாலை வேளையில் வெளியானது.
‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், உடனடியாக இதை மறுத்து நடிகர் விஜய்யின் தரப்பு, இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும் விஜய் எந்த அரசியல் கட்சியையும் தொடங்கவில்லை என்றும் விளக்கமளித்தது.
விஜய்யின் மேலாளர் இதனை மறுத்த 5-வது நிமிடத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக பேட்டியளித்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “அந்தக் கட்சி பதிவு செய்தி உண்மைதான். நான்தான் ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய சொந்த முயற்சி. இது விஜய்யின் அரசியல் கட்சி அல்ல. இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமே இல்லை..” என்று கூறினார்.
இந்தப் புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பு நடிகர் விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.