Friday, November 22, 2024

கே.பாக்யராஜ்-பூர்ணிமா திருமணம் நடந்தது எப்படி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஆதர்ச நட்சத்திர தம்பதிகள்’ என்று சொன்னால் அந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் இயக்குநர் கே.பாக்யராஜூம், நடிகை பூர்ணிமா பாக்யராஜூம்.

இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய டார்லிங் டார்லிங் டார்லிங்’ திரைப்படத்தில் பூர்ணிமா நாயகியாக நடித்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் பாக்யராஜூடன் நல்ல நட்பில் தொடர்ந்து இருந்து வந்தார் பூர்ணிமா.

தன்னுடைய முதல் மனைவி பிரவீணா இறந்த பின்பு பெரும் துயரத்தில் இருந்த கே.பாக்யராஜை இன்னொரு திருமணம் செய்து கொள்ள அவரது உடன் பிறந்தவர்களும், உறவினர்களும் வற்புறுத்தியபோது அவர் தேர்வு செய்தது பூர்ணிமாவை.

இந்தத் திருமணம் எப்படி நடந்தேறியது என்பது பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் பூர்ணிமா பாக்யராஜே சொல்லியிருக்கிறார். படியுங்கள்.

“டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. ஷூட்டிங்கின்போது பாக்யராஜ் நிறைய கோபப்படுவார். யாரையாவது திட்டணும்ன்னா அவங்களை திட்டாமல் என்னைத்தான் திட்டுவார். ஏன்னா.. நான்தான அந்த யூனிட்லேயே புதுசு. அப்படியொரு முறை கிளைமாக்ஸ் காட்சி படமாக்கும்போது அசோக்குமார் ஸார் ஏதோ சொன்னதைப் பார்த்து குபீர்ன்ன்னு சிரிச்சிட்டேன்.

இதைப் பார்த்து பாக்யராஜ் என்னை ரொம்பத் திட்டிட்டார். எனக்கு அழுகையே வந்திருச்சு. அப்புறம் அடுத்த மூணு நாளும் நான் பயங்கர அமைதியா இருந்தேன். அப்போ ஒரு நாள் பாக்யராஜ் என்கிட்ட கேட்டார். “என்ன விஷயம்.. ஏன் அமைதியா இருக்க..?” என்று கேட்டார். அப்போ நான் “நீங்க தேவையில்லாமல் திட்டுனீங்களே..?” என்றேன். அவருக்கு அதுவே மறந்துவிட்டது. “நான் எப்பவும் அப்படித்தாம்மா. சோகக் காட்சில நடிக்கும்போது அதே பீலிங்ல இருக்கணும். சிரிச்சிட்டா அது நல்லா வராது. அதனாலதான் திட்டினேன்..” என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.

இந்தப் படம் ஷூட்டிங் எடுத்துக்கிட்டிருக்கும்போது பிரவீணா அக்கா என்கூட நல்லா பழகினாங்க. என் வீட்டுக்கெல்லாம் வந்து எங்கம்மாகிட்ட ஆசிர்வாதமெல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. நானும் அவங்க வீட்டுக்கு வந்து பேசியிருக்கேன். ரொம்ப நல்ல டைப்.

எனக்கு பிலிம்பேர் அவார்டு கிடைக்கும்ன்னு பேச்சு இருந்தப்ப “அந்த நிகழ்ச்சில நானும் வருவேன். உன் பக்கத்துல உட்கார்வேன்…” என்றெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தாங்க. திடீர்ன்னு அவங்க உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியலை.

அடுத்த நாள் நான் ‘தங்க மகன்’ ஷூட்டிங்ல இருந்தப்பதான் அவங்க இறந்திட்டதா தகவல் வந்துச்சு. ரொம்ப வருத்தமா இருந்தது. அப்பவும் பாக்யராஜ் ஸார்கூட எங்க பேமிலியே நல்ல நட்புலதான் இருந்தோம்.

இது நடந்து சில மாதங்கள் கழித்து நான் ஒரு மலையாளப் படத்துக்காக பாரீஸூக்கு போக வேண்டியிருந்தது. கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மும்பையில் இருக்கும் என் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ எங்கம்மா என்கிட்ட, “பாக்யராஜ் ஸார்.. இங்க வந்திருக்காராம். அவரை வீட்டுக்குக் கூப்பிடேன்…” என்று சொன்னாங்க.

நானும் போன் செஞ்சு அவரை என் வீட்டுக்குக் கூப்பிட்டேன். வந்தாரு. அவர் வந்த நேரம் வீட்ல சமைக்கக் கூட எதுவும் இல்லை. அப்புறம் அவசரம், அவசரமா வெளில போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து அம்மா சமைச்சாங்க. அப்போ நவராத்திரி வாரம். அதுனால மும்பைல தாண்டியா நடனம் ஆடுவாங்க. அந்த நடனத்தை எங்க வீட்டு மொட்டை மாடில இருந்து ராத்திரி ரொம்ப நேரம் நாங்க ரெண்டு பேரும் பார்த்தோம். அப்பவும் ரொம்ப கேஷுவலாத்தான் சாதாரணமாகத்தான் பேசிக்கிட்டிருந்தோம்.

இதுக்கப்புறம் நான் திரும்பவும் சென்னைக்கு வந்து படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அப்போதான் பாக்யராஜ் என் வீட்டு்க்கு வந்து என் அம்மா, அப்பாகிட்ட என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறதா சொன்னாரு. எனக்கு முதல்ல இது அதிர்ச்சியாத்தான் இருந்தது.

என் வீட்ல அம்மா, அப்பா இரண்டு பேருமே.. “இது உன்னுடைய விருப்பம்”ன்னு சொல்லிட்டாங்க. நானும் யோசிச்சு பார்த்தேன். பாக்யராஜை எனக்கு தனிப்பட்ட முறையிலேயும் தெரியும். நல்ல மனிதர். எப்படியோ ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறோம். இப்படியொரு  நல்ல மனிதர் கிடைக்கும்போது நாம ஏன் விடணும்ன்னு ‘ஓகே’ன்னு சொல்லிட்டேன்.

அப்போ என் கைல 20 படங்கள் இருந்துச்சு. எல்லாத்தையும் சட்டுன்னு முடிக்க முடியாதுன்றதால இப்போ நிச்சயத்தார்த்தம் செஞ்சுக்கிட்டு மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் செய்யலாம்ன்னு நினைச்சேன். ஆனால், அவர் வீட்ல ஜோதிடம் பார்க்கும்போது ‘இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தாகணும்’ன்னு சொல்லிட்டாங்களாம். அதனால் உடனேயே கல்யாணம்ன்னு சொல்லிட்டாங்க.

அதுலேயும் அப்போ முதலமைச்சரா இருந்த எம்.ஜி.ஆர்., உடனேயே தேதி கொடுத்ததால சட்டுன்னு கல்யாணத்தை வைக்க வேண்டியதா போச்சு.

என் கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேருமே குடும்பத்தோட வந்திருந்து வாழ்த்தினாங்க. அது எங்களுக்குக் கிடைச்ச மிகப் பெரிய கிப்ட்டா நினைக்கிறேன்..” என்றார் பூர்ணிமா பாக்யராஜ்.

டெயில் பீஸ் :

அந்தக் காலக்கட்டத்தில் கே.பாக்யராஜை திருமணம் செய்து கொள்ளவிரும்பி தமிழ்த் திரையுலகில் இருந்த பல நடிகைகள் தூது விட்டுக் கொண்டிருந்ததையும், பூர்ணிமா ஒத்துக் கொண்டார். ஆனால், அவர்கள் யார் என்பதைச் சொல்லவில்லை.

கொசுறு நியூஸ் :

பாக்யராஜ்-பூர்ணிமா இருவரும் இணைந்து நடித்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் பூர்ணிமாவுக்கு முன்பு நடிக்கவிருந்தவர் நடிகை சுஹாசினி. ஆனால், அவர் அப்போது தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டியிருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போய் பந்து பூர்ணிமாவின் பக்கம்போக, அது அவரது வாழ்க்கையையே திசை மாற்றிவிட்டது.

- Advertisement -

Read more

Local News