தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர்.
இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று காலை டிவீட்டரில் ஒரு அவசரச் செய்தியொன்றை பகிர்ந்தார் சீனு ராமசாமி.
அதில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் அவசரமாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்துப் பேசுகையில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ பிரச்சனையில் எல்லோரையும் போலவே நானும் தம்பி விஜய் சேதுபதியிடம் ‘அதில் நடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்தேன்.
இதற்கடுத்து நான் விஜய் சேதுபதிக்கு எதிரானவன் என்று சித்தரித்து எனக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வருகின்றன.
எனக்கும், தம்பி விஜய்சேதுபதிக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை போல இதனை சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அதனைக் கூர்மையாக்கி எங்களிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
எனக்கு அரசியல் பற்றிய சினிமாக்களை எடுக்கத் தெரியும். ஆனால் சினிமாவிற்குள் இருக்கும் அரசியல் தெரியாது. தம்பி விஜய் சேதுபதியின் நலன் கருதியே அவரை அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். ஆனாலும் எனக்கு மிரட்டல்களும், ஆபாச அர்ச்சனைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன.
இது பற்றி தம்பி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன். விஜய் சேதுபதியின் ரசிகர்களும் என்னுடைய தம்பிகள்தான். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ‘நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது’ என்று விஜய் சேதுபதியும் என்னிடம் கூறியிருக்கிறார்.
ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவை போட்டேன். இது தொடர்பாக காவல் துறையில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரப் போகிறேன்..” என்று கூறினார் சீனு ராமசாமி.