Friday, November 22, 2024

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பின்பு ரீலீஸ் செய்யப்பட்ட படத்தை நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள், தங்களுக்கான தகுதியாக அதைக் குறிப்பிட முடியாது என்பதால் இவர்களது வேட்பு மனுக்களின் தகுதி கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  தேர்தல் அதிகாரியிடம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் செய்துள்ளார்.

இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ம் ஆண்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே. நமது சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-க்கு உட்பட்டது.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 விதி எண் 58-ன் படி, சங்கத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்படுமேயானால், அந்த அறிவிப்பு அன்றைய தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விடுகிறது.

அதன்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தலையும், தேர்தலுக்கான அட்டவணையையும் கடந்த 09-10-2020 தேதியிலும், தேர்தல் விதிகளை 15-10-2020 அன்றும் வெளியிட்டீர்கள்.

15-10-2020 அன்று உங்களால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில்,                                       விதி எண் 2-ல் “சங்க விதிமுறை எண் 13-ன்படி கடந்த 5 ஆண்டுகளுக்குள் நேரடி தமிழ்ப் படம் தயாரித்து,  வெளியிட்ட தயாரிப்பாளர், உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தலைவர், துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் ஆகிய நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை உண்டு…” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் அறிவிப்பின்படி 15-10-2015 முதல் 14-10-2020 வரை உள்ளடக்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரித்து அதனை வெளியிட்டிருந்தால் மட்டுமே அவரால் தற்போதைய தேர்தலில் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிட முடியும்.

இந்த விதிகள் மற்றும் உங்கள் அறிவிப்பின்படி 09-10-2020 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடுவதாலும், 15-10-2020 அன்று நீங்கள் வெளியிட்ட விதிகளின்படி, 14-10-2020-க்கு பிறகு படத்தை திரையிட்டவர்கள் நிர்வாகக் குழு பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தங்களது படங்களை                                14-10-2020 தேதிக்கு பிறகு வெளியிட்டிருப்பதால் இந்த 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழக்கிறார்கள்.

எனவே, ஐயா அவர்கள்…

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் விதிகளின்படியும், உங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகளின்படியும் மேற்கண்ட மூன்று நபர்களின் வேட்பு மனுக்களையும் நிராகரிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News