மலை பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர் படத்தின் நாயகன் மதி. சிறுவயதில் இருந்தே பாசத்திற்காக ஏங்கும் நபர். மைனா பட புகழ் சூசன் மதியின் தாய், சாராயம் விற்கும் தொழில் செய்து வருகிறார். மகன் மீது பாசம், அக்கறை அற்றவராக இருக்கிறார். சாராயம் விற்பவரின் மகன் என்று பள்ளியிலும் யாரும் மதியிடம் சேர மறுக்கின்றனர். இதனால் வேதனைப்படும் மதியிடம், ஆசிரியர் ஒருவர் இயற்கையை ரசிக்கும்படி கூறுகிறார்.

அப்போது, வழி தவறி வந்த குட்டி யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துவிடுகிறது. அந்த குட்டி யானையை மதி காப்பாற்றுகிார். பின்னர் அந்த யானை மதியை சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமை ஆகிறார். இருவரும் சகோதரர்கள் போல் வளர்ந்து வருகின்றனர்.
ஒரு நாள் யானை காணாமல் போய்விடுகிறது. மதி எங்கு தேடியும் யானை கிடைக்கவில்லை. இதனால் மதி ஒரு கட்டத்தில் தன்நிலை மறந்தவராக காட்டுக்குள் சுற்றித்திரிகிறார். இதற்கிடையே, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மதியிடம் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும்படி ஆசிரியர் அறிவுறுத்துகிறார். மதி பிறகு, கல்லூரி படிப்பை பயில வெளியூருக்கு செல்கிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பும் மதிக்கு யானை மாயமானது குறித்து தகவல் கிடைக்கிறது. பின்னர், யானை மாயமானதற்கான பின்னணி என்ன? மாயமான யானை மதியிடம் திரும்ப வந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை..
முதல் படத்திலேயே நடிகர் மதி அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யானையுனான பாசம், யானையை இழந்த தவிப்பு, கோபம் என உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகி ஷ்ரிதா ராவ் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆண்ட்ரூஸ், அர்ஜூன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி என கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கின்றனர்.
வனம், இயற்கை சார்ந்து படம் எடுப்பது இயக்குனர் பிரபு சாலமனுக்கு புதுசு அல்ல. அதேபோல், இந்த கதையும் தமிழில் புதிது அல்ல. கதாநாயகனுக்கும்- யானைக்கும் இடையேயான பாசத்தை தவிர படத்தில் பெரிதாக வேறு எதுவும் இல்லை. திரைக்கதை, காட்சிகள் படத்தில் சுவாரஸ்யம். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பொருத்தம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா லென்ஸ் இயற்கையை வியக்கும் வகயைில் அமைந்திருக்கிறது.

