தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 தேர்தலில் போட்டியிட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணியினர் இன்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
டி,ராஜேந்தர் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு மன்னன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார்.
மேலும் துணைத் தலைவர் பதவிக்கு பி.டி.செல்வக்குமாரும், துணைச் செயலாளர் பதவிக்கு போஸும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மனோபாலா, சரவணன், மனோஜ்குமார், ஆர்.வி.உதயக்குமார், ஷக்தி சிதம்பரம், திருமலை, கே.ஜி.பாண்டியன், செல்வம், அசோக் சாம்ராஜ், ஷாம், ஸ்ரீதர், வை.ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று காலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நாற்காலியில் அமர்வதற்காக என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
இந்தத் தலைவர் பதவியில் உட்காரத் தகுதியுள்ள ஒரு நபராக, தயாரிப்பாளராக, போராளியாக, பேச்சாளனாக, விஷயம் அறிந்தவனாக.. எந்தச் சபையிலும் பேசக் கூடியவனாக.. சட்டத்தோடு சொல்ல வேண்டும்.. அடக்கத்தோடு சொல்ல வேண்டும்.. உரக்கச் சொல்ல வேண்டும்.. ஒரு தந்தையாக சொல்ல வேண்டும் என்ற தகுதியுடைய ஒருவர் வேண்டும் என்பதால் இவர்களெல்லாம் சேர்ந்து என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி..!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இருக்கின்ற நிதி மிகவும் குறைவாக இருப்பதால் அதை வெளியில் சொல்வதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை. சங்கம் இப்போது கோமா ஸ்டேஜில் உள்ளது.
இந்தக் கோமா ஸ்டேஜில் இருக்கும் சங்கத்தை சினிமா ஸ்டேஜாக மாற்றவும், அடிமட்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தி செயல்பட வைக்கவும்தான் எனது அணி நிச்சயமாகச் செயல்படும்.
இந்தச் சங்கத்தில் இருந்து சிலர் விலகி வேறு சங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அது நடப்பு சங்கம் என்பதால் எங்களுடைய சங்கத்தைக் கிடப்பில் போட முடியாது. இந்தச் சங்கத்தைத் தூக்கி நிறுத்தி துடிப்போடு செயல்பட வைப்போம் என்பதற்காகத்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
இப்போதைய கொரோனா காலத்திற்குப் பின்பு தமிழ்த் திரைப்பட துறையில் பல மாற்றங்கள் ஆகியிருக்கிறது. பல கோரிக்கைள் எழுந்திருக்கின்றன. தியேட்டர்களில் படத்தை வெளியிட கியூப் நிறுவனத்திற்குக் கட்ட வேண்டிய திரையிடல் கட்டணத்தை நாங்கள் கட்ட மாட்டோம் என்று முன்பேயே தயாரிப்பாளர்கள் சங்கம் சொல்லியிருக்கிறது. புதிதாகத் துவக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கமும் சொல்லியிருக்கிறது. எங்களுடைய விநியோகஸ்தர்கள் சங்கமும் இதையேதான் சொல்கிறது.
இதனால் சில கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்து முன் வைத்து போராட வேண்டியிருப்பதால்.. இரண்டு மாடுகளும் ஒன்று போல இருந்தால்தான் வண்டி ஓடும் என்பதால்தான் நான் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தாலும் எங்களுடைய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி சட்ட விதிகளை திருத்தி அனுமதி பெற்று இந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் போட்டியிடுகின்றேன். நாங்கள் நிச்சயமாக ஜெயிப்போம். நல்ல நிர்வாகத்தைத் தருவோம்..” என்றார்.