மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஹனுமான்’ படத்தில் கதாநாயகனாக நடித்த தேஜா சஜ்ஜா, நாயகனாக நடிக்க கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள படம் ‘மிராய்’. இப்படத்தில் ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாரான இப்படம் இந்த வாரம் செப்டம்பர் 5ஆம் தேதி பான் இந்தியா படமாக திரைக்கு வருகிறது.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு மனோஜ், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் இளைய மகன். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்து தொடர்பான தகராறு இருந்து வந்தாலும், மஞ்சு மனோஜ் நடித்துள்ள ‘மிராய்’ படத்தின் டிரெய்லரை பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மஞ்சு மனோஜ் தனது எக்ஸ் தளத்தில், “மிராய் டிரெய்லரை பார்த்து எங்களை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனமார்ந்த நன்றி. அன்பு சகோதரர் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி,” என பதிவிட்டுள்ளார்.