Friday, November 22, 2024

“பாக்யராஜிடம் நான் நிறைய கத்துக்கிட்டேன்..’’ – இயக்குநர் பாரதிராஜாவின் மனம் திறந்த பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாக்யராஜ், என்னிடம் ஆயிரம் கற்றுக் கொண்டிருக்கிறான். அதேபோல் அவனிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன்..” என்று இயக்குநர்  பாரதிராஜா ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “படப்பிடிப்பில் பாக்யராஜை அதிகம் கவனித்துக் கொண்டே இருப்பேன். இயல்பாகவே, அவன் ஒரு டயலாக் ரைட்டர். அவன் வசனம் சொல்லிக் கொடுக்கும்விதம் நன்றாக இருக்கும். நடிகர் விஜயனும் என்னுடைய அஸிஸ்டெண்ட். அவன் மலையாளி. அவன் ஒரு டைப்.

‘கிழக்கே போகும் ரயில்’ சமயத்தில், அவர்களிடம், ‘டேய்… ராதிகாவை நடிக்க முடியுமான்னு சந்தேகப்பட்டீங்களே. அப்புறம் ஒத்துக்கிட்டீங்கதானே. உங்க ரெண்டு பேரையும் நடிகனாக்குறேண்டா. இந்த நாடு ஒத்துக்குதா இல்லியான்னு பாருங்க’ என்று சொன்னேன். ஒரு சேலஞ்ச்தான்..! அதில்தான் பாக்யராஜை நடிகனாக்கினேன். விஜயனையும் நடிகனாக்கினேன்.

’புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜை நான் ஹீரோவாக்கும்போது, சினிமாவுலக பெரும் புள்ளிகள் பலபேர், ‘ஏன் இந்த விஷப் பரிட்சை?’ என்று கேட்டார்கள். ‘இது விஷப் பரிட்சையெல்லாம் இல்லை. என் கற்பனையில் தோன்றுகிற வாத்தியார் இப்படித்தான் இருக்க வேண்டும். அதில் நடிப்பதற்கு எவ்வளவோ பேர் வந்து போனார்கள். இவன்தான் அவர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கிறான். ஆனால் யாரும் என் மனதில் ஒட்டவில்லை. ஆனால், இப்போது இவனே என் வாத்தியார் மாதிரியே இருக்கிறான். ஒரு கண்ணாடி மட்டும் போட்டுவிட்டால், இவன்தான் என் வாத்தியார்’ என்று சொன்னேன்.

பாக்யராஜ் என்னிடம் இருந்து கற்றுக் கொண்டது ஆயிரம் இருக்கு. பாக்யராஜ் பிரில்லியண்ட்டானவன். படங்களில் க்ளைமாக்ஸ் எப்போதும் சீரியஸாகத்தான் இருக்கும். ஆனால், அந்த சீரியஸை சீரியஸாகவே சொல்லக் கூடாது. கொஞ்சம் ஹ்யூமர் கலந்து சொல்ல வேண்டும். அப்போதுதான் க்ளைமாக்ஸ் எடுபடும். இதை நான் அவனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.

 ‘நிழல்கள்’ க்ளைமாக்ஸ் தோற்றுவிட்டது. ஏன்..? அது ரொம்ப சீரியஸா இருந்துச்சு. ’கிழக்கே போகும் ரயில்’ படத்தின் க்ளைமாக்ஸும் சீரியஸ்தான். ஆனாலும், அதனுள்ளே காமெடி வந்துகொண்டே இருந்தது. இதை பாக்யராஜ் நன்றாகவே பண்ணுவான். அவனிடம் அந்த ஆற்றல் உண்டு.” என்று பாரதிராஜா பேசியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News