‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் பந்தயங்களில் ஆர்வம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார், தனது அடுத்த படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது அஜித்தின் 64வது படம் ஆகும். இதில் அவருக்கு ஜோடியாக ‘கேஜிஎப்’ படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான திரைக்கதை பணிகளை முடித்த ஆதிக் ரவிச்சந்திரன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

மேலும், அஜித் நவம்பர் மாதம் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ள நிலையில், அதற்கு முன் மற்ற நடிகர்கள், நடிகைகளை சேர்த்து படப்பிடிப்பு பணிகளைத் துவங்கும் திட்டம் அமைத்து இருக்கிறார்.
இதற்குமுன், சிவா இயக்கத்தில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என நான்கு படங்களில் நடித்த அஜித், பின்னர் வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிந்தைய படத்தில் மீண்டும் இணைகிறார்.