இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வெளியானபோது பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் தொடர்ப்பாக ‘DD Next Level’ என்ற படமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் மற்றும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி பீபுல் ஷோ’ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘DD Next Level’ திரைப்படம் நாளையே திரைக்கு வரவுள்ளது. பட விமர்சகர் கதாபாத்திரத்தில் சந்தானம் ஒரு திரைப்படத்திற்கு உள்ளே நுழைந்து, அதில் நடைபெறும் சம்பவங்களை த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் சந்தானம் சில மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “பொல்லாதவன் படத்தில் முதலில் என்னை எடுக்கவில்லை என இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். பின்னர் தயாரிப்பாளர் கொடுத்த அழுத்தத்தினால் தான் என்னை படத்தில் சேர்த்தார். அந்த படத்தில் எனக்கென ஒரு கதாபாத்திரமே இல்லை. நானும் கருணாஸும் நண்பர்களாக நடித்தோம், அதில் ஒன்லைன் பஞ்ச் வசனங்களை பேசினோம். அது ஹிட் ஆனது. அதுபோல இயக்குநர் ராஜமவுலி ‘ஈ’ படத்தில் எனக்கு வசனமே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அளித்தார். ஆனால் டப்பிங்கில் சில வசனங்களை நானே பேசியிருந்தேன். அதை பார்த்த ராஜமவுலி வியந்து என்னை நேரில் பாராட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.