சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்த படம் மே 1ம் தேதி வெளியாகும். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும் போது சசிகுமார் கூறியதாவது, “நான் சிம்ரனின் ரசிகராக ரசித்து வளர்ந்தவன். அவருடன் ஜோடியாக நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இப்போது கூட அவர் இளமையாகவே இருக்கிறார் மற்றும் ஹீரோயினாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நானும் அவருடன் நடித்திருக்கிறேன் என்பதையே அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். என்னால் சிம்ரனுடன் நடிக்க முடியாதா? எனக்கு அந்த தகுதி இல்லையா?” எனக் கூறினார்.

இந்த நிலையில், சசிகுமாருடன் ஜோடியாக நடித்த அனுபவத்தைப் பற்றி சிம்ரன் விளக்கமாக தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: “இந்த படம் ஒரு சிறந்த குடும்பக்கதை என்பதால், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன். மேலும், சசிகுமார் ஒரு மிகப்பெரிய இயக்குநர் மற்றும் நடிகர் என்பதும் ஒரு காரணம். அவருடன் நடித்தது எனக்கு பெருமை.
சினிமாவில் ஜூனியர், சீனியர் என பேதம் பார்ப்பது தவறு. திறமையே முக்கியம். அந்த அடிப்படையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பது என் அதிர்ஷ்டம் என சொல்வேன். இனிமேலும் குடும்பத்தினை மையமாகக் கொண்ட கதைகளில் தொடர்ந்து நடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.”