பாலிவுட் பாடகரான அபிஜித் பட்டாச்சார்யா அளித்த ஒரு பேட்டியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அதிக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் வேலை இழந்து வருகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதைப் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் பதிலளிக்கும்போது, “அபிஜித்தை நான் பெரிதும் மதிக்கிறேன். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகவே இருக்கலாம் என நினைக்கிறேன். நான் துபாயில் 60 இசைக்கலைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். அவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியன வழங்கப்படுகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் இசை அமைத்த ‘பொன்னியின் செல்வன்’, ‘சாவ்வா’ ஆகிய படங்களில் 200 முதல் 300வரை இசைக்கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். சில சமயங்களில் ஒரு பாடலுக்கே 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். இது பாடலின் தேவையைப் பொறுத்தே அமையும். இத்தனை விஷயங்களை நான் வெளியிட்டு புகைப்படம் போடவில்லை என்பதால் பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். நான் எவ்வளவு லைவ் இசைக் கலைஞர்களை பயன்படுத்துகிறேன் என்பதை, என்னுடன் பணியாற்றிய தயாரிப்பாளர்களிடம் கேட்டுப் பாருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.